மாடம்பாக்கம்: தாம்பரம் அருகே மாடம்பாக்கம் தேனுபுரிஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. கபில மகரிஷி வழிபட்ட தலமாகவும், ஸ்ரீசரபேஸ்வரர் பிரார்த்தனை பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. மேலும் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும். இந்த கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிகள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று (மே 19 ) காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவா என பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து 4 மாடவீதிகள் வழியாக தேரினை இழுத்து சென்றனர். அசைந்தாடி சென்ற தேர் 9 மணிக்குமேல் தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது.
» 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கிராம கோயில் திறப்பு @ முதுகுளத்தூர்
» வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு: சிரமத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் @ ராமேசுவரம்
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். தேர் திருவிழாவையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உள்ளூர் பொது மக்கள் அன்னதானம், நீர் மோர், தண்ணீரை வழங்கினர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மே 20-ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு குதிரை வாகனம், 21-ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு இந்திர வாகனம், 22-ம் தேதி தீர்த்தவாரி தொட்டி உற்சவம், இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 23-ம் தேதி வியாழக்கிழமை அன்று பந்தர்பரி உற்சவத்தில் காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் க. விஜயன், மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, பதுவஞ்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.