வாராஹி தேவியின் படத்தையோ சிலையையோ வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா என்று பலரும் கேட்கிறார்கள். வாராஹி தேவியை வழிபட எளிய வழிமுறைகள் உள்ளன. நம் தரித்திரத்தைப் போக்கி அருளுவாள் வாராஹி தேவி!
வாராஹி என்பவள், உக்கிரமான முகம் கொண்டிருந்தாலும் உண்மையில் சாந்த ஸ்வரூபினி. அன்பும் கருணையும் கொண்டவள். சக்தி வழிபாடு என்பது அம்மன் வழிபாடு. பெண் தெய்வ வழிபாடு. பெண் தெய்வ வழிபாடுகளில், பிரத்தியங்கரா தேவி, பாலா திரிபுரசுந்தரி, வாராஹி தேவி முதலானோரை வழிபட்டு வந்தால், எதிரிகள் தொல்லை முழுவதும் அழியும். எதிர்ப்புகள் மொத்தமும் காணாமல் போகும் என்கிறார்கள் சக்தி வழிபாட்டு பக்தர்கள்.
துர்குணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் நெருங்கவே விடமாட்டாள் என்கிறார்கள் வாராஹி பக்தர்கள். தீய குணங்களையெல்லாம் விட்டொழித்துவிட்டு, அவளைச் சரணடைந்தால், ஒரு தாயைப் போல் நமக்குக் கருணைக் காட்டுவாள் என்பது ஐதீகம்.
நம்மில் பலரும் அம்மன் படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். ஆனால், பலரும் வாராஹி தேவியின் படத்தையோ சிலையையோ வீட்டில் வைத்து வழிபடலாமா... அது நல்லதா... அதற்கென தனி நியமங்கள் ஏதும் உள்ளதா? என்றெல்லாம் குழம்புகின்றனர். வாராஹி தேவி, பார்ப்பதற்குத் தான் கரடுமுரடான முகம் கொண்டிருக்கிறாள். சாந்த நாயகிதான் இவளும். வீட்டுப் பூஜையறையில் வாராஹி தேவியின் படத்தையோ, சிலையையோ தாராளமாக வைத்துக் கொள்ளலாம்; வணங்கலாம்; பூஜித்து வரலாம்.
வாராஹி அம்மனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. பொதுவாகவே, அம்மனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செவ்வரளி, அரளி, செம்பருத்தி, ரோஜா என பூக்கள் கொண்டு வாராஹி தேவியை அலங்கரிக்கலாம்; பூஜிக்கலாம்.
சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். கருநீல நிறம் கொண்ட துணியை சதுரவடிவமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வெள்ளைக் கடுகு சிறிது போட்டுவிட்டு, ஒரு முடிச்சாகக் கட்டிக்கொள்ளவேண்டும். இப்போது அதை, மண் அகல் விளக்கில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, முடிச்சையே தீபமாக ஏற்றி வாராஹி தேவியை வழிபடச் சொல்கிறார்கள் வாராஹி வழிபாட்டுக் குழுவினர்.
பன்றி உருவெடுத்து வந்தவள் என்பதால், பெண் உருவிலும் பன்றி முகமாகவும் காட்சி தருகிறாள். வாராஹி என்றால் பெண் பன்றியைக் குறிக்கும். பூமியைக் கிழித்துக் கொண்டு பன்றி உருவெடுத்து வந்தவள் என்பதால், பூமிக்குள் விளைந்த மரவள்ளிக் கிழங்கு நைவேத்தியம் ரொம்பவே விசேஷம். அதுபோல வெண் பூசணி நைவேத்தியம் செய்வதும் சிறப்பானது. சாதத்துடன் வெண் பூசணியை வேகவைத்து கலந்து நைவேத்தியமாகவும் படைத்து வழிபடலாம்.
ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியில் வாராஹி தேவியை வழிபட்டு பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தரும். செப்டம்பர் 1-ம் தேதி வியாழக்கிழமை வளர்பிறை பஞ்சமி. இந்தநாளில் இப்படியாக விளக்கேற்றி, நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
மேலும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில், காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாராஹி படத்துக்கு பூக்கள் அலங்கரித்து, மரவள்ளிக்கிழங்கு அல்லது வெண் பூசணி கலந்த சாதம் நைவேத்தியம் செய்து, வெண்கடுகு கொண்டு மண் அகல் தீபமேற்றி உங்கள் பிரார்த்தனைகளை அவளிடம் சமர்ப்பியுங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலையில் இருந்து உங்கள் குடும்பத்தை மீட்டுக்கொடுப்பாள்; உங்கள் வாழ்க்கையை கரையேற்றித் தருவாள் வாராஹி தேவி!
வாராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வாராஹியை வழிபடலாம். வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் வளர்பிறை பஞ்சமி திதியிலும் பாராயணம் செய்து வழிபடலாம்.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும்; கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகள் கூட தவிடுபொடியாகும்; கவலைகளையும் துக்கத்தையும் போக்கி அமைதியும் ஆனந்தமுமான வாழ்வைத் தந்தருளுவாள் வாராஹி தேவி.