சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்வோம். பெருமாளுக்கு துளசி சார்த்துவோம். முருகப்பெருமானுக்கு செவ்வரளி சார்த்துவோம். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. குருமார்களுக்கு வெண்மை நிற மலர்கள் உகந்தவை. ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கின்றன. தெய்வங்களுக்கு ஒவ்வொரு விதமான பூக்களைக் கொண்டு அர்ச்சிப்போம். ஒவ்வொரு விதமான தெய்வத்துக்கு அவர்களுக்கு உரிய பூக்களைக் கொண்டு அலங்கரிப்போம். அர்ச்சனைகள் செய்வோம். ஆனால், பிள்ளையாருக்கு உகந்தது அருகம்புல் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
இவருக்கு மட்டும் அருகம்புல் ஏன்?
ஆனைமுகத்தான் ஆற்றங்கரையிலும் அரசமரத்தடியிலும் கூட குடியிருக்கிறார் அல்லவா. அவ்வளவு ஏன்... மஞ்சளைப் பிடித்து வைத்தாலே அது பிள்ளையாராகிவிடுகிறது என்கிறது சாஸ்திரம். அப்பேர்ப்பட்ட தொந்தி கணபதிக்கு, வயல்வெளியிலும் ஆற்றோரங்களிலும் வளரும் அருகம்புல்லே போதும். அதை அவருக்குச் சூட்டினாலே குளிர்ந்து அருள்மழை பொழிவாராம். குளக்கரையிலும் மரத்தடியிலும் எளிமையாய் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு, இப்படி எளிமையான அருகம்புல்லைக் கொண்டு மாலையாக அணிவித்தாலே மகிழ்ந்து போய்விடுவாராம்!
மேலும், அருகம்புல் சார்த்துவதில் புராண விளக்கமும் இருக்கிறது.
யமதருமனுடைய மகன் அனலன், அபூர்வமான வரம் ஒன்றைப் பெற்றிருந்தான். அதாவது அனல் வடிவம் கொண்டவன் அவன். எவருக்கும் தெரியாமல் அரூபமாக இருக்கும் வரத்தைப் பெற்றிருந்தான். அதன்படி, ஒவ்வொருவருடைய உடலிலும் புகுந்து, அவரவரை உருக்கி உருக்குலைப்பதே அனலனின் வேலை.
இந்த அனலில், செய்வதறியாது திகைத்துப்போனார்கள் மனிதர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அனலில் சிக்கிய புழுவென அனலில் உருகிப் போனார்கள். இப்படிச் சிக்கித்தவித்தவர்களில், தேவர்களும் முனிவர்களும் கூட விதிவிலக்கில்லை. ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட பாரபட்சம் காட்டவில்லை. இதனால் கலங்கித் தவித்தவர்கள், விநாயகப் பெருமானை வணங்கி தவமிருந்தார்கள். அவர்களுக்குக் காட்சி தந்த வேழமுகத்தான், ’கலக்கம் வேண்டாம்’ என அருளினார். தன் துதிக்கை கொண்டு அனலனை வளைத்தார். பிடித்தார். அப்படியே துதிக்கையால் விழுங்கினார்.
இந்த உலகையே தன் பெருவயிற்றில் கொண்டவர் விநாயகர். மூவுலகையும் காத்தருளக்கூடிய விநாயகரின் கனத்த வயிறு அனலால் தகித்தது. பால் எடுத்து வந்து, குடம்குடமாக பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தார்கள். சந்திர பகவான், தன் குளிர்ந்த ஒளிக்கரங்களைச் சாற்றினார். எப்போதும் குளிர்ந்த உடலுடன் இருக்கிற சர்ப்பங்களை விநாயகருக்கு மாலையாகவும் இடுப்பில் அணிகலன் போலவும் சாற்றினார்கள். ஆனாலும் பிள்ளையார் குளிர்ந்தபாடில்லை.
அப்போது சப்தரிஷிகள் அங்கே வந்தார்கள். 21 அருகம்புல்லை எடுத்தார்கள். விநாயகப் பெருமானை மனமுருக வேண்டினார்கள். அந்த அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்றி அலங்கரித்தார்கள். விநாயகர் மேனியில் அருகம்புல் பட்டதும் குளிர்ந்துபோனார். மூவுலகத்து உயிர்களும் குளிர்ந்தன என்று விவரிக்கிறது புராணம். மேலும், அருகம்புல்லை பிள்ளையாருக்கு சார்த்தினால், அந்த இடத்தில் தீயசக்திகள் அண்டாது. ஒரு தர்ப்பையைப் போல் நம் இல்லத்தைக் காத்தருளும் என்பது ஐதீகம். அதனால்தான், பிள்ளையாருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுகிறோம்.
ஆல் போல் தழைத்து அருகு போல் நம் வாழ்க்கையைச் செழிக்கச் செய்து அருளுவார் ஆனைமுகத்தான். மணக்க மணக்க பூமாலைகளெல்லாம் விநாயகருக்கு சார்த்த வேண்டுமென்கிற அவசியமே இல்லை. கொஞ்சம் அருகம்புல் சார்த்தினாலே, நம்மைக் காத்தருளுவார் கணபதிபெருமான்!