விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி அடுத்து வருகிற மகா சங்கடஹர சதுர்த்தி வரைக்கும் மாதந்தோறும் விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
சதுர்த்தியில், சுக்லபட்ச சதுர்த்தி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்று உள்ளது. சுக்ல பட்சம் என்றால் வளர்பிறை. கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. சுக்லபட்ச சதுர்த்திக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாய் சுக்லபட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
அதேசமயத்தில், பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் இருக்கிறது. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அதுபோல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் இணைந்து சாஸ்திரம் வகுத்துக் கொடுத்திருக்கிறது.
சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேய வேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியில் இருந்து மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் மேற்கொள்வது எண்ணிலடங்காத பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சிலர், ஆவணி விநாயகர் சதுர்த்தியை அடுத்து வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளில் இருந்தும் விரதத்தைத் தொடங்குவார்கள். இப்படி விரதம் மேற்க்கொண்டு, அடுத்த வருடத்தில் ஆடி மாதத்தில் வருகிற மகா சங்கடஹர சதுர்த்தியிலோ அடுத்து வரும் விநாயகர் சதுர்த்தியிலோ விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே என்பதை புரிந்து உணரவேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள், அன்றைய நாளில், விநாயகரை தரிசித்து, விநாயகருக்கு அருகம்புல் மாலையோ வெள்ளெருக்கு மாலையோ சார்த்திப் பிரார்த்தனை செய்துகொண்டாலே போதுமானது.
முன்பெல்லாம், விநாயகர் சதுர்த்தி என்றால், மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்வார்கள். 1893-ம் ஆண்டு, லோகமான்ய திலகரால் பொதுவெளியில் விநாயகர் வழிபாடு என்பது தொடங்கப்பட்டது. வீட்டில் செய்யப்படும் பிள்ளையார், பின்னர் வீட்டில் உள்ள கிணற்றிலோ அருகிலுள்ள கிணற்றிலோ நீர்நிலைகளிலோ கரைக்கப்பட்டது. திலகர் காலத்தில் ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ கடலிலோ கரைக்கின்ற முறை உருவானது.
மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புணே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவியது, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, அதன் பின்னர் மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாகவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து காலப்போக்கில், ஒவ்வொரு மாநிலங்களிலும் வீதியில் ஊர்வலமாக ஒன்றுதிரண்டு விநாயகரை கரைக்கும் சடங்கு, திருவிழா போலவே மாறியது.
எவ்வளவு சிறிய கிராமமாக இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகரை நாம் இன்றைக்கும் தரிசிக்கலாம். வேறு எந்தக் கடவுளருக்கும் இல்லாதபடி பிரம்மாண்டமான கோயிலிலும் பிள்ளையார் இருப்பார்; குளத்தங்கரை மரத்தடியில் இருந்துகொண்டும் நமக்கு அருள்பாலிப்பார்.