எத்தனையோ கோயில்களுக்குச் சென்றிருப்போம். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில ஆலயங்கள் சிறியதாக இருக்கும். சில ஆலயங்கள் மிகப்பிரம்மாண்ட மானதாக இருக்கும். ஒரு சில ஆலயங்களில் கோஷ்டம் மட்டுமே இருக்கும். இன்னும் சில ஆலயங்களில், கோஷ்டத்துடன் திருச்சுற்று மாளிகையும் இருக்கும். சில கோயில்களில் அம்பாளுக்கு ஒரு கோபுர வாசலும் இறைவனுக்கு ஒரு கோபுர வாசலும் இருக்கும். இப்படி பலவிதமான கோயில்கள் இருக்கும். ஆனால், எல்லாக் கோயில்களிலும், தவறாமல் இருக்கும் இரண்டு விஷயங்கள்... பலிபீடமும் கொடிமரமும்!
கோயிலில் உள்ள எல்லா சந்நிதிக்கும் சென்று இறைத்திருமேனிகளை வணங்கிவிட்டு, நிறைவாக பலிபீடமும் கொடிமரமும் இருக்கிற இடத்துக்கு வந்து மொத்தமாக சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து வேண்டிக்கொள்வோம். பலிபீடம் என்பது உயிர்களை பலி கொடுக்கும் பீடமல்ல. நம் மனதுக்குள் நமக்குத் தெரிந்தும் தெரியாமலுமாக ஒளிந்திருக்கும் துர்குணங்களை பலி கொடுக்கும் பீடம் இது. அதாவது, காமம், ஆசை, குரோதம் (சினம்), லோபம் (கடும்பற்று), மோகம் (கற்பு நெறி பிறழ்வு), பேராசை, மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை), மாச்சர்யம் (வஞ்சம்), எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்து கொள்ளும் இடமாக பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆலயத்துக்குள் சென்று, மூலவரையும் அம்பாளையும் கோஷ்ட தெய்வங்களையும் நவக்கிரகத்தையும் வணங்கி முடித்துவிட்டு, தரிசனத்தை நிறைவு செய்யும் விதமாக வெறுமனே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிப்பதால் மட்டுமே நன்மையோ இறைவனின் அருளோ கிடைத்துவிடாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 'இதுவரை என்னிடம் இருந்த துர்குணங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, என்னைப் புதியவனாக்குங்கள். நேர்மறை சிந்தனையுடன் எனக்குள் தெளிவையும் பக்தியையும் வழங்குங்கள்’ என்று நமஸ்கரிக்கும்போது இறைவனிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.
மனிதனின் பேரழிவுக்குக் காரணமாக இருப்பது ஆசையும் ஆணவமும்தானே! எனவே ஆசையையும் ஆணவத்தையும் பலியிட்டுவிட வேண்டும்; விட்டொழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆலயங்களில், பலிபீடம் அமைக்கப்பட்டிருப்பதாக ஆகம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து... கொடி மரம்.
கோபுரத்தைக் கடந்து, கோபுர வாசலுக்குள் நுழைந்ததுமே நமக்கு முதலில் தென்படுவது கொடிமரம் தான். பார்க்கின்ற எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டுத்தான் இந்த கொடிமரத்துக்கு அருகில் வந்து நமஸ்கரிக்கிறோம்.
பெரிய கட்டிடங்களின் இடிதாங்கியைப் போலவே கொடிமரமும் அத்தனை பலம் மிக்கது என்கிறார் பாஸ்கர குருக்கள். அதுமட்டுமா? அண்ணாந்து நாம் பார்க்கின்ற இந்தக் கொடிமரத்தின் உயரத்துக்கு முன்னே நாம் வெறும் கடுகளவு என்பதை உணர்த்துவதற்காகத்தான் கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு அருகில் வணங்கச் சொல்கிறது ஆகமம் என்றும் விவரிக்கிறார்.
ஒரு கோயிலின் முதுகெலும்பாகத் திகழக்கூடியது கொடிமரம் என்றும் சொல்லுவார்கள். கொடி மரத்தின் அடிபாகம் கோயில் என்ற உடலின் அரைக் கட்டமைப்பு என்கிறது ஆகம சாஸ்திரம். இங்கிருந்து கீழ்ப்பக்கம் வழியாகவே, அதாவது கொடிமரத்தின் கீழ் முனையில் இருந்து அங்கிருந்தபடியே கோயிலின் மூலவர் குடிகொண்டிருக்கும் கருவறையானது நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன என்றும் மூல விக்கிரகமும் கொடிமரமும் வேறல்ல. நம்மை விட உயர்ந்ததும் சக்திமிக்கதுமானது என ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், கோயிலின் ஒவ்வொரு இடத்துக்கும் அதிர்வுகள் இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான், ‘இந்தக் கோயிலுக்கு போயிட்டு வந்தாலே மனசுல அப்படியொரு அமைதி’ என்கிறோம். ‘இந்தக் கோயிலுக்குப் போயிட்டு வந்த பிறகுதான் எனக்கு கல்யாணமாச்சு’ என்கிறோம். ‘இந்தக் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு வந்த பிறகுதான் சொந்த வீடு வாங்கினோம்’ என்றெல்லாம் சொல்லுகிறோம். இவற்றுக்கு அந்தக் கோயிலின் அதிர்வலைகளும் நம் எண்ணங்களின் பிரார்த்தனைகளும் ஒருபுள்ளியில் இணைவதே காரணம். அப்படி இணைப்பதற்கான வேலையை கொடிமரம் செய்கிறது என்றும் ஆகமங்கள் விவரிக்கின்றன. அதனால்தான், ஒட்டுமொத்த பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எல்லா சந்நிதிக்கும் சென்று தரிசித்துவிட்டு வந்து, கொடிமரத்துக்கு அருகில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து பிரார்த்தனையை நிறைவு செய்கிறோம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.