மஞ்சளும் குங்குமமும் மங்கலகரமான பொருட்களில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதனால்தான் மாதந்தோறும் மளிகைச் சாமான்களுக்கான பட்டியல் எழுதும்போது, மஞ்சள் என்று முதலில் சேர்த்துக்கொள்கிறோம். அதேபோல், வீட்டுக்கு சுமங்கலிகள் வந்துவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் இட்டுக்கொள்வதற்கு குங்குமம் வழங்குகிறோம்.
குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து இட்டுக் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். அதேபோல், தம்பதியாக ஆலயங்களுக்குச் சென்றிருக்கும் தருணத்தில், அங்கே அம்பாள் சந்நிதியில் தரும் குங்குமப் பிரசாதத்தை, கணவன்... மனைவியின் நெற்றியிலும் நடுவகிட்டிலும் இட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
குங்குமம் என்பது நம் வாழ்வில் மிக முக்கியமான மங்கலச் சின்னம். ஆண்கள், புருவத்தின் மத்தியில் குங்குமம் இட்டுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நவராத்திரி, ஆடி வெள்ளி முதலான பண்டிகைக் காலங்களில், அக்கம்பக்கத்தில் உள்ள சுமங்கலிகளை அழைத்து, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சரடு, ஜாக்கெட் பிட், வளையல், பழங்கள், பூக்கள் முதலான மங்கலப் பொருட்களை வழங்குகிறோம். வீட்டுக்கு வந்திருக்கும் சுமங்கலிகளை மனம் மகிழச் செய்து அனுப்பிவைத்தால், நம் இல்லத்தில் மங்கல காரியங்கள் தங்குதடையின்றி நிகழும். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனி நடந்தேறும் என்பது ஐதீகம்.
குங்கும பஞ்சதசி எனும் ஸ்லோகம் இருக்கிறது. ‘நகரேஷூ காஞ்சி’ என்று போற்றப்படுகிற காஞ்சியம்பதியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சி அன்னை ஆலயத்தில், குங்கும பஞ்சதசி சொல்லி, குங்கும அர்ச்சனை செய்வது ரொம்பவே விசேஷம்.
காமாட்சி அம்மன் மட்டுமின்றி, அனைத்து அம்மன் கோயில்களிலும் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது, பெண்களை தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஏன் தெரியுமா? உலகில் உள்ள அனைத்து அம்மன்களுக்கும் தலைவியாகத் திகழ்பவள் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்பாள்.
நம் வீட்டிலேயே, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பண்டிகை முதலான நாட்களிலும் இல்லத்தரசியின் நட்சத்திரத்துக்கு உரிய நாளிலும் வீட்டிலுள்ள கன்னிப்பெண்ணின் நட்சத்திர நாளிலும் வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கும் பெண்ணின் நட்சத்திர நாளிலும் காலையில் குளித்துவிட்டு, பூஜையறையில் அமர்ந்து அம்மன் சிலைக்கோ அம்மன் திருவுருவப் படத்துக்கோ குங்கும அர்ச்சனை செய்யலாம். அப்படிச் செய்யும்போது, குங்கும பஞ்சதசியைச் சொல்லி வழிபடுவது, நம் குலத்தைத் தழைக்கச் செய்யும். வம்சத்தை விருத்தி அடையச் செய்யும். கடன் முதலான தரித்திர நிலையில் இருந்து சகல ஐஸ்வர்ய நிலைக்கு மாற்றித் தரும் வல்லமை மிக்க பூஜை இது என விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
எளிமையான ‘குங்கும பஞ்சதசி’ இதுதான்..!
குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமதளிப்பது
குங்குமமாவது கொள்வினை தீர்ப்பது.
விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனையாள்வதும் குங்குமமாமே
தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேர்க்கு அபயமளிப்பதும்
காஞ்சி காமாக்ஷி குங்குமமாமே
நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே
செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்களடக்கி யருள்வதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே
சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
ஸித்தி தருவதும் குங்குமமாமே
நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்
காஞ்சி காமாக்ஷி குங்குமமாமே
சிவசிவ என்று திருநீறணிந்த பின்
சிவகாமியேயென் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே
எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே
அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே
குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்
நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே
பட்ட காலிலே படுமென கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணீந்தே
இட்டார் இடர் தவிர் குங்குமமாமே
சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீடடைவீரே
மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை
செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின்
கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்குமாமே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து, அம்மனையும் குறிப்பாக, காஞ்சி காமாட்சி அன்னையையும் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். அர்ச்சித்த குங்குமத்தை நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளுங்கள். கணவரின் ஆயுள் கூடும்; ஆரோக்கியம் பெருகும். தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்வாள் அம்பிகை!