தனம், தானியம், கல்வி தரும் சப்தரிஷி வழிபாடு!

By காமதேனு

சப்த ரிஷிகளுக்கான ஸ்லோகங்களை மனதுக்குள் ஜபித்து வாருங்கள். இந்த மந்திரங்களை வியாழக்கிழமை தோறும் கிழக்குப் பார்த்து அமர்ந்தபடி சொல்லிவாருங்கள். நம் இல்லத்தில், தனம் தானியம் கல்வி முதலான செல்வங்கள் பெருகும் என்பது உறுதி என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வழிபாடுகளிலும் ஏழு எனும் எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சப்த என்றால் ஏழு என்று அர்த்தம். இசையில் ஏழு ஸ்வரங்கள் இருக்கின்றன. இதை சப்த ஸ்வரங்கள் என்கிறோம். இதேபோல், சப்த நதிகள் என்று நதியைப் போற்றி வணங்குகிறோம். சாகரம் என்றால் கடல். இதையும் சப்த சாகரம் என சொல்லி வைத்திருக்கிறது சாஸ்திரம். திருமணச் சடங்கிலும் சப்தபதி என்று முக்கியமான சடங்கு உண்டு.

ரிஷிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் சப்த ரிஷிகளை ரிஷிகளுக்கெல்லாம் தலையாயவர்கள் என்று வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ரிஷிகளைக் கொண்டே, கோத்திரங்கள் உருவாக்கப்பட்டன என விவரிக்கிறது தர்ம சாஸ்திரம். மேலும், இவர்கள் பிரம்ம தேவனின் பிள்ளைகள் என்றும் வேதங்கள் உரைக்கின்றன.

சப்தரிஷிகள், சப்த மாதர்கள் என்றெல்லாம் நம் வழிபாடுகளில் சிறப்புக்கு உரிய வழிபாடுகள் பல இருக்கின்றன. காஸ்யபர், அத்திரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் என்பவர்களை சப்த ரிஷிகள் அதாவது ஏழு ரிஷிகள் என்று வணங்கி வருகிறோம்.

நமக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் சிவபெருமான். அதனால்தான் அவர் சனகாதி முனிவர்களுக்கு, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு, சிவ உபதேசம் அருளுகிறார். இந்த வடிவத்தை ஸ்ரீதட்சிணாமூர்த்தி அம்சம் என வணங்கி மகிழ்கிறோம். அடுத்து, குருவாகப் போற்றப்படுபவர் குரு பிரகஸ்பதி. தேவர்களின் குருவான பிரகஸ்பதியே, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, குரு பகவானாகத் திகழ்கிறார்.

இவர்களைப் போலவே, குரு ஸ்தானத்தில் சப்த ரிஷிகளையும் தியானம் மேற்கொண்டு அவர்களை வணங்குவதால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் அறுபட்டு, நம் பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்.

சப்த ரிஷிகளுக்கு உரிய காயத்ரி மந்திரங்களை தினமும் ஒரு முறையேனும் சொல்லி வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தினமும் முடியாவிட்டாலும் வியாழக்கிழமை, சூரிய ஆதிக்கம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை, பெளர்ணமி மற்றும் அமாவாசைகளில் மறக்காமல் இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும்.

சப்த ரிஷிகளுக்கான காயத்ரி மந்திரங்கள்...

காஸ்யபர்

ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே

ஆத்ம யோகாய தீமஹி

தந்நோ காஸ்யப ப்ரசோதயாத்

***********

அத்திரி

ஓம் சத்கர்மபலதாய வித்மஹே

சதாக் நிஹோத்ராய தீமஹி

தந்நோ அத்திரி ப்ரசோதயாத்

*************

பரத்வாஜர்

ஓம் தபோரூடாய வித்மஹே

சத்ய தர்மாய தீமஹி

தந்நோ பரத்வாஜ ப்ரசோதயாத்

************

விஸ்வாமித்ரர்

ஓம் தநுர்தராய வித்மஹே

ஜடாஜுடாய தீமஹி

தந்நோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்

************

கவுதமர்

ஓம் மஹாயோகாய வித்மஹே

சர்வ பாவநாய தீமஹி

தந்நோ கௌதம ப்ரசோதயாத்

*****************

ஜமதக்னி

ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே

அக்ஷ சூத்ராய தீமஹி

தந்நோ ஜமத்கனி ப்ரசோதயாத்

************

வசிஷ்டர்

ஓம் வேதாந்தகாய வித்மஹே

ப்ரம்ஹ சுதாய தீமஹி

தந்நோ வசிஷ்ட ப்ரசோதயாத்

சப்த ரிஷிகளுக்கான ஸ்லோகங்களை மனதுக்குள் ஜபித்து வாருங்கள். இந்த மந்திரங்களை வியாழக்கிழமை தோறும் கிழக்குப் பார்த்து அமர்ந்தபடி சொல்லிவாருங்கள். சப்தரிஷிகளையும் வணங்கிவிட்டு, சிவபெருமானை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், நம் இல்லத்தில், தனம் தானியம் கல்வி முதலான செல்வங்கள் பெருகும் என்பது உறுதி என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE