புத்தியை தெளிவாக்குவார் புதன் பகவான்!

By காமதேனு

நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். தஞ்சை, கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் நவக்கிரக திருத்தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு கிரகத்துக்கு தலமாகப் போற்றி வணங்கப்படுகிறது.

செவ்வாய் பகவானுக்கு உரிய திருத்தலமாக வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலம் வணங்கி வழிபடப்படுகிறது. இங்கே தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் அங்காரகன். செவ்வாய்க்கு அதிபதியாக அங்காரகன் போற்றப்படுகிறார். அந்த அங்காரகனுக்கே தலைவனாக முருகப்பெருமான் வணங்கப்படுகிறார்.

அதேபோல், புதன் பகவானுக்கு உரிய திருத்தலமாக திருவெண்காடு தலம் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி தலங்களுக்கு அருகே பிரம்மாண்டமான கோயிலைக் கொண்ட திருத்தலம் திருவெண்காடு. இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

புதன் கிழமைகளிலும் புதன் ஓரை இருக்கிற நாள் மற்றும் நேரத்திலும் இங்கு வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் வணங்கிவிட்டு, புதன் பகவானையும் பிரார்த்தித்துக் கொண்டால், நம் புத்தியில் தெளிவு பிறக்கும். எடுத்த காரியத்தைச் செம்மையாக நடத்தி முடிக்க அருளுவார். காரியத்திலும் பேசுகிற பேச்சிலும் வல்லமையைக் கொடுத்து அருளுவார் புதன் பகவான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புதன் கிழமைகளிலும் அல்லது நாம் எப்போதெல்லாம் கோயிலுக்குப் போகிறோமோ... அப்போது நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை மனதார நினைத்துக் கொண்டு, புதன் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வந்தால், மனக்கிலேசங்களையும் மனக்குழப்பங்களையும் போக்கி, நம் மனதையும் புத்தியையும் மலரச் செய்து அருளுவார் புதன் பகவான் என்கின்றன ஞானநூல்கள்.

புதன் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் :

ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புத ப்ரசோதயாத்.

புதன் பகவான் காயத்ரியை தினமும் கூட சொல்லலாம். வீட்டில் பூஜையறையில் நல்லெண்ணெய் தீபமேற்றி, கண்மூடி அமர்ந்துகொண்டு, புதன் பகவானை நினைத்து நம்மால் முடிந்த அளவுக்கு 24 முறையோ அல்லது 54 முறையோ அல்லது 108 முறையோ சொல்லி வழிபட்டுப் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். முடிந்தால், புதன் பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சார்த்தி வழிபடுவது, இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE