செவ்வாய்க்கிழமைகளில், நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானை தொடர்ந்து வணங்கிவந்தால், செவ்வாய் கிரகத்தால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகமும் ஒன்று. பூமாதேவியின் மைந்தன் செவ்வாய் பகவான் என்று புராணங்கள் விவரிக்கின்றன. மேஷ ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் சொந்தக்காரர் என்று செவ்வாய் பகவானைச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக அங்காரகனைச் சொல்வார்கள். அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானை நோக்கி வரங்கள் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவனுக்கு திருக்காட்சி தந்தருளினார். “என் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் விழுந்தால், என்னைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள் அதிலிருந்து பிறக்கவேண்டும் எனும் வரத்தைத் தந்தருளுங்கள்” என வரம் கேட்டான் அசுரன். “அப்படியே ஆகட்டும்” என அருளினார் சிவனார்.
ஏற்கெனவே அசுரன். இப்படியொரு வரமும் கிடைக்க சும்மா இருப்பானா? ஆணவம் வந்து தலைகால் புரியாமல் ஆடினான். முனிவர்களையும் ரிஷிபெருமக்களையும் மக்களையும் துயரத்துக்கு ஆளாக்கினான். அவர்களை பயந்து நடுங்கச் செய்தான். இதில் கலங்கித் தவித்தார்கள் அனைவரும். நிம்மதியாக அமர்ந்து தவம் செய்யமுடியவில்லையே... என்று வருந்தினார்கள். சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.
“நம்மிடம் வரம் வாங்கி வைத்துக்கொண்டு, நம்முடைய பக்தர்களையும் உலக மக்களையும் கொடுமைப்படுத்துகிற அந்தகாசுரனை அழிப்பது” என திருவுளம் பூண்டார் ஈசன். சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன்னே நின்றார். ஆனால், வந்திருப்பது வரம் கொடுத்த இறைவன் என்பதை அசுரன் அறியவில்லை. வானில், இருவருக்கும் யுத்தம் தொடங்கி பல ஆண்டுகள் நீடித்த நிலையில், சிவபெருமானின் உடலிலிருந்து வியர்வைத்துளிகள் பூமியில் வந்து விழுந்தன.
அது, நிலத்தை இரண்டாகப் பிரித்தது. செவ்வாய் கிரகம் உதித்தது. அப்படித் தோன்றிய செவ்வாய்க்கிரகம், அசுரனின் உடலில் இருந்து ரத்தத்துளிகள் பூமிக்கு விழாதபடி தடுத்தன. அதன் பின்னர், அந்தகாசுரனை சூலாயுதத்தால் துவம்சம் செய்து கொன்றொழித்தார் சிவன் என்கிறது புராணம்.
அசுரனின் ரத்தத்துளிகளை ஏந்திக்கொண்டதால், செவ்வாய்க் கிரகத்தின் நிறம் என்றும் செவ்வாய் பகவானுக்கு செந்நிற ஆடையும் செந்நிற மலர்களும் உகந்தவை என்று புராணம் விவரிக்கிறது. நவக்கிரகங்களில் ஒரு கிரகமான செவ்வாய் பகவானை அவருக்கு உரிய காயத்ரியைச் சொல்லி தினமுமே வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் வழிபடுவதும் காயத்ரியைச் சொல்லுவதும் உன்னத பலன்களை வழங்கவல்லது என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.
செவ்வாய் காயத்ரி மந்திரம்
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்
அதாவது, ‘வீரத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவானே! என் வாழ்வில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வல்லமை கொண்டவரே! எனக்கு நல்லாசி வழங்கும்படி உங்களை வணங்குகிறேன்’ என்று அர்த்தம்.
செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வருவதன் மூலம், தீராத நோயெல்லாம் தீரும். உடலில் ஆரோக்கியம் பெருகும். மனோதிடம் கூடும். மனதில் சத்விஷயங்கள் குடிகொள்ளும். முக்கியமாக, செவ்வாய் தோஷம் நீங்கப் பெறலாம் என்கிறார்கள். தினமும் சொல்ல இயலாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் காலையும் மாலையும் இந்த செவ்வாய் பகவான் காயத்ரியை ஜபித்து, நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்கள் சார்த்தி, தீபமேற்றி பிரார்த்திக்கலாம். நம் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றித் தருவார் செவ்வாய் பகவான்!