கிருஷ்ணருக்கு தேன் கொடுத்தால் முன் ஜென்ம பாவம் நீங்கும்!

By வி. ராம்ஜி

நம் முன் ஜென்மத்துப் பாவங்களையெல்லாம் போக்கும் திருத்தலம் சென்னையில் அமைந்துள்ளது. குழந்தை வரம் இன்னும் தகையலையே என ஏங்குவோருக்கு பிள்ளை வரம் தந்தருளும் திருத்தலம் சென்னையில் இருக்கிறது. இந்த வரங்கள் மட்டுமின்றி எண்ணற்ற வரங்களைத் தந்தருளும் கிருஷ்ணர் கோயில், சென்னையில் வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கிறது.

வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள தலத்தில் அற்புதமான கோலத்தில் தரிசனம் தருகிற கிருஷ்ணரின் திருநாமம் -ஸ்ரீசெளம்ய தாமோதரப் பெருமாள். சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருத்தலம் என்றும் கண்ணனின் அவதாரத் தலங்களில் இதுவும் ஒன்று என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

கண்ணன் என்றாலே குறும்புக்காரன் என்பதை கிருஷ்ண புராணம் விவரித்திருக்கிறதுதானே. பாலகன் கண்ணன் செய்த குறும்புகளுக்கு அளவே இல்லை. அவனுடைய சேட்டைகளைப் பொறுக்கமுடியாமல், அவனுடைய அம்மா யசோதா, ஒரு உரலில் கயிற்றின் முனையைக் கட்டி, இன்னொரு முனையை கண்ணனின் இடுப்பில் கட்டிப்போட்டாள்.

இதனால் சும்மா இருந்துவிடுவானா கண்ணன்? அந்த உரலையே இழுத்துக் கொண்டு சென்றான்; சேட்டைகள் பலவும் செய்தான். அப்படி இடுப்பில் கட்டிய கயிறுடன் உரலையும் இழுத்துச் சென்றதால், கண்ணனின் இடுப்பில் தழும்பே ஏற்பட்டுவிட்டதாம்! அதனால்தான் கண்ணனுக்கு தாமோதரன் என்றொரு திருநாமம் அமைந்தது. ‘தாமம்’ என்றால் கயிறு. ‘உதரம்’ என்றால் வயிறு. கயிற்றால் கட்டப்பட்ட வயிறைக் கொண்டவன் என்பதால் தாமோதரன் எனும் திருநாமம் அமைந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

‘கேசவா, நாராயணா, மதுசூதனா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா என்று சொல்லும் போது நிறைவாக ‘தாமோதரா’ என்கிற திருநாமமும் சேருகிறது. இந்தத் திருநாமத்துடன் சென்னை வில்லிவாக்கத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசெளம்ய தாமோதரப் பெருமாள். ’செளம்ய’ என்றால் அழகு பொருந்திய என்று அர்த்தம்.

விஷ்ணுவின் அவதாரத் தலங்களில் இதுவும் ஒன்று என்றாலும் ஆதி காலத்தில் இந்த இடம் வில்வாரண்ய க்ஷேத்திரமாக இருந்திருக்கிறது. வில்வம் சிவபெருமானுக்கு உரியது. ஆரண்யம் என்றால் காடு. வில்வக்காடாக இருந்த இந்தத் தலத்தில் பெருமாள், கிருஷ்ணராக கோயில் கொண்டார். பின்னர் இந்த வில்வாரண்யம், கொஞ்சம் கொஞ்சமாக மருவி, வில்லிவாக்கம் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

சப்தரிஷிகளில் அத்ரி மகரிஷியும் ஒருவர் என்பது தெரியும்தானே. இவர், சூரனின் சகோதரியான அஜமுகியை மணம் புரிந்தார். இவர்களுக்கு, வில்லவன், வாதாபி என மகன்கள். தன்னைப் போலவே தன் மகன்களையும் ரிஷிகளாக்க வேண்டும் என அத்ரி மகரிஷி விருப்பம் கொண்டார். ஆனால், அசுர குலத்தில் இருந்து வந்த அஜமுகியோ, மகன்களை அசுரர்களாக்குவது என தீர்மானித்தாள். இதில் கோபமுற்ற அத்ரி மகரிஷி, இல்லற சுகத்தில் இருந்து விடுபட்டு தனித்துப் பயணித்தார்.

இப்படியாக தன்னைப் புறக்கணித்ததை அஜமுகியால் ஏற்கமுடியவில்லை. கடும் ஆத்திரம் கொண்டாள். அனைத்து ரிஷிகளையும் கொன்று போடச் சொல்லி, மகன்களுக்கு உத்தரவிட்டாள். அதன்படி ஒவ்வொரு ரிஷிகளையும் மகன்கள் இருவரும் கொன்று போட்டனர். வில்லவன், ஏதேனும் ஒரு உணவுப் பொருளாக வாதாபியை மாற்றி, ரிஷிகளுக்குக் கொடுப்பான். அதை ரிஷிகள் சாப்பிட, அப்போது... ‘வாதாபி வெளியே போய்விடு’ என்று வில்லவன் குரல் கொடுப்பான். உடனே, ரிஷியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாதாபி வெளியே வர, ரிஷி இறந்துபோயிருப்பார்.

இவற்றையெல்லாம் கண்டு பதறிய ரிஷிகள் அனைவரும் சிவனாரிடம் சென்று முறையிட்டனர். பூமியை சமப்படுத்துவதற்காக அகத்தியரை சிவபெருமான் அனுப்பினார் அல்லவா. உடனே அகத்தியரிடம் இந்த இரண்டு அசுரர்களையும் அழிக்கும்படி பணித்தார்.

அதன்படி, வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்தார் அகத்தியர். வழக்கம் போல வில்லவன், வாதாபியை ஒரு மாம்பழமாக்கி அகத்தியருக்குக் கொடுத்தான். அகத்தியரும் மாம்பழத்தைச் சாப்பிட்டார். ‘வாதாபி வெளியே போ’ என்று சொல்ல, வாதாபி வெளியே வரவில்லை. அகத்தியரின் வயிற்றுக்கு எந்தச் சேதமும் இல்லை. காரணம்... அந்த மாம்பழமாக இருந்த வாதாபியைச் சாப்பிட்டு ஜீரணமாக்கிவிட்டிருந்தார் அகத்திய முனிவர்.

வில்லிவாக்கம் ஸ்ரீசெளம்ய தாமோதர பெருமாள் ஆலயம்

இதில் ஆத்திரமான வில்லவன், அகத்தியரைக் கொல்லத் துணிந்தான். சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் அகத்தியருக்கு அருள... முருகப்பெருமான் அளித்த அருகம்புல்லையே அஸ்திரமாகக் கொண்டு வில்லவனைக் கொன்றொழித்தார் அகத்திய மாமுனி! அதன்படி, வில்லிவாக்கம் என்று அழைக்கப்படுகிற இந்த ஊர், ஒருகாலத்தில், கொன்னூர், சம்ஹாரபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்டதாக ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

இரண்டு அசுரர்களைக் கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக இங்கே தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். சிவா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். அந்த தவத்தை ஏற்று இருவரும் காட்சி தந்து அருளினர். அவரின் தோஷமும் நீங்கியது. அப்படி அகத்தியருக்கு மகாவிஷ்ணு, செளம்ய தாமோதரப் பெருமாளாக வந்து காட்சி கொடுத்தார். பின்னர், அகத்தியரின் வேண்டுகோளை ஏற்று, இந்தத் தலத்தில் இருந்தபடி நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறார் செளம்ய தாமோதரப் பெருமாள். அதேபோல், அகத்தீஸ்வரர் எனும் திருநாமத்தில் சிவனார் கோயில் கொண்டிருப்பதும் இந்த ஊரில் அமைந்திருக்கிறது.

கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார் செளம்ய தாமோதரப் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார். தை மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில், தாயார் நந்தவனத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெறும். ஸ்ரீராமர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமாநுஜர் முதலானோருக்கும் இங்கே சந்நிதிகள் இருக்கின்றன.

குழந்தை பாக்கியம் தரும் திருத்தலம் என்று செளம்ய தாமோதரப் பெருமாள் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்க்ள்.

"ஓம் தாமோதராய வித்ம ஹே,

ருக்மணி வல்ல பாய தீமஹி,

தந்நோ கிருஷ்ண பிரசோதயாத்'' எனும் தாமோதர காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை தோறும் 108 தடவை சொல்லி, தாமோதர பெருமாளுக்கு பால் நைவேத்தியம் படைத்து வணங்கி வருவதும் அதை பக்தர்களுக்கு அளித்து வருவதும் மிகுந்த பலன்களைத் தரும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

இந்த மந்திரத்தை, தினமும் வீட்டிலிருந்தபடியே தாமோதரப் பெருமாளை மனதார நினைத்து 108 முறை ஜபித்து வருவதும் மகா புண்ணியம். புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் கிருஷ்ண ஜெயந்தி முதலான பெருமாளுக்கு உகந்த நாட்களிலும் இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவது நம் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அதேபோல், செளம்ய தாமோதரப் பெருமாளுக்கு தேன் மற்றும் பேரிச்சம்பழம் நைவேத்தியம் அளித்து வழிபட்டால், நாம் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்தருளுவார் என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE