கிருஷ்ண ஜெயந்தி: பிள்ளை வரம் தரும் கோபால சுந்தரி ஸ்லோகம்!

By காமதேனு

இன்று (ஆகஸ்ட் 19) கிருஷ்ண ஜெயந்தி. இந்த நன்னாளில் கோபால சுந்தரி ஸ்லோகம் சொல்லி கிருஷ்ணரை மனமுருகப் பிரார்த்தனை செய்து, கிருஷ்ணருக்கு உகந்த நைவேத்தியங்களைப் படைத்து, அவற்றை, திருமணமான பெண்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பெருமாளின் அவதாரங்களில், கிருஷ்ணாவதாரம் என்பது மிக முக்கியமான அவதாரம். இந்த அவதாரத்தில்தான் அர்ஜூனனுக்கு வழங்குவது போல், அகில உலகத்துக்கே கீதையை வழங்கி அருளினார் கிருஷ்ண பரமாத்மா. ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நன்னாளில், கிருஷ்ணருக்குப் பிடித்த அவல், சீடை, அதிரசம், முறுக்கு முதலான பட்சணங்களைச் செய்து வெண்ணெய் வைத்துப் படைத்தால் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.

கிருஷ்ண ஜெயந்தித் திருநாளில், நம் வீட்டு வாசலில் இருந்து வீட்டின் பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதத்தை கோலமாக இடுவது வழக்கம். அரிசிமாவில் போடுகிற இந்தக் கோலத்தின் மூலமாக, கிருஷ்ணரே நம் வீட்டுக்கு வருகிறார். நம்முடைய பூஜையை ஏற்றுக் கொள்கிறார் என்கிறது சாஸ்திரம். அதேபோல். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, ராதை வேடமிட்டு பூஜையை கலகலப்பாக்குகிற நிகழ்வும் நடைபெறும்.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாப நாசாயா சம்பவாமி யுகே யுகே..

- ‘தர்மங்களை நிலைநாட்ட யுகம்தோறும் வருவேன்’ என்ற அந்த மாயனின் வார்த்தைகளை நீங்களும் சொல்ல, மகாபாரதம் படித்த முழுமையான பலன்களைப் பெறலாம்.

அத்துடன்,

க்ஷீராம் போதிஸ்த கல்பத்ருமவன

விலசத் ரத்ன யுக்மண்ட பாந்த:

ப்ரோத்யத் ஸ்ரீபீட ஸம்ஸ்தம் கரத்ருத

ஜலஜாரி இட்சு பாசங்குசேஷம் பாசம்

வீணாம் சுவேணும் ததத மவணி மாசோபிதம்

ரக்தகாந்தீம் த்யாயேத் கோபால மீசம் விதிமுக.

விபுதை ரீட்யமானம் சமந்தாத்

- என்கிற கோபால சுந்தரி ஸ்லோகத்தை கோகுலாஷ்டமி அன்று மூன்று முறை சொல்லிவிட்டு, கிருஷ்ணருக்கு அவலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யுங்கள். அந்த நைவேத்தியத்தை திருமணமாகி பல வருடங்களாக இன்னும் பிள்ளை வரம் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் பெண்களுக்கு வழங்குங்கள். அவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

கிருஷ்ணஜெயந்தி நன்னாளில் கிருஷ்ணரை ஆராதிப்போம். கோபால சுந்தரி ஸ்லோகம் சொல்லி அவரை வழிபடுவோம். வளமும் நலமும் பெறுவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE