ஈஸ்வரன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் @ திருப்பூர்

By KU BUREAU

திருப்பூர்: திருப்பூர் ஈஸ்வரன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பூர் மாநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ விஸ்வேஸ்வர சாமி மற்றும் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் வைகாசி விசாகத் தேர் திருவிழா வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இரு கோயில்களிலும் கொடியேற்று விழா நேற்று நடந்தது.

விஸ்வேஸ்வரர் சாமி கோயில் வளாகத்தில் நடந்த கொடியேற்று விழாவில், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, சிவனடியார்களின் கைலாய வாத்திய இசையுடன் ‘நமச்சிவாய’ முழக்கத்துடன் கொடிக் கம்பத்தில் நந்திக்கொடி ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோயிலில், ‘கோவிந்தா, கோவிந்தா’ முழக்கத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், இரு கோயில்களிலும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து உற்சவர்கள் திருவீதியுலா நடைபெற்றது. நிகழ்வில் திருக்கோவில் செயல் அலுவலர் சரவணபவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE