பொன்னேரி: பொன்னேரி அருகே வேண்பாக்கத் தில் உள்ள வைத்தியநாத சுவாமிகோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி, சமீப காலமாக வைத்தியநாத சுவாமி கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வைத்தியநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 6-ம் தேதி கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கியது. அதில், நேற்று காலை 6.15 மணிவரை 4 கால யாக சாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு,விமான கோபுர கலசங்கள், தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி மற்றும் விநாயகர்,காளஹஸ்தீஸ்வரர், ஆஞ்சநேயர்,நந்தி பகவான், நாக தேவதைகள் உள்ளிட்ட சந்நிதிகளின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
» பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: செங்கை ஆட்சியர் தகவல்
» சாலைகளில் ஓட தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கம்: சிஐடியு பகிரங்க குற்றச்சாட்டு
இந்நிகழ்வுகளில், வேண்பாக்கம், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்ததிரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்வு, இரவு 7 மணியளவில் கலை நிகழ்ச்சிகள், இரவு 8 மணியளவில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.