ஞாயிற்றுக்கிழமையில் சூரியனாருக்கு சர்க்கரைப் பொங்கல்

By வி. ராம்ஜி

தஞ்சாவூர், கும்பகோணத்தைச் சுற்றி நவக்கிரக கோயில்கள் அமைந்திருக்கின்றன. காலையில் நாம் கண் விழித்ததும் விடியலில் சூரியன் உதிப்பதைப் பார்க்கிறோம். ஒருநாளின் தொடக்கம் என்பது சூரியனில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல், நவக்கிரகங்களில் சூரியனும் ஒரு கிரகம். நவக்கிரகங்களில் முதன்மையான கிரகமும் கூட!

கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது சூரியனார் கோயில். இது குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள்.

காலவ முனிவர் என்பது முக்காலமும் அறிந்தவர். வரக்கூடிய காலத்தில் தனக்கு தொழுநோய் ஏற்படும் என்பதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தார் காலவ முனிவர். இதற்கு என்ன பரிகாரம் என்பதையும் அவர் அறிந்துவைத்திருந்தார். அதன்படி நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். அவரின் நெடுநாள் தவத்துக்குப் பலன் கிடைத்தது. நவக்கிரகங்களும் முனிவருக்கு காட்சி தந்து அருளினர். கூடவே, தொழு நோய் ஏற்படாதிருக்க வரமும் அளித்தனர்.

இதில் பிரம்மா கடும் கோபம் கொண்டார். ‘நான் எழுதிவைத்த விதியை நீ மாற்றுகிறாயா?’ என காலவ முனிவர் மீது ஆவேசம் கொண்டார். அந்த ஆவேசம் நவக்கிரகங்கள் மீது திரும்பியது. ‘காலவ முனிவர் அடைய வேண்டிய துன்பங்களை நீங்கள் அடைவீர்கள்’ என பிரம்மா சாபமிட்டார்.

இந்த சாபத்தால் நவக்கிரகங்கள் நடுநடுங்கிப் போனார்கள். பிரம்மாவிடமே முறையிட்டார்கள். சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினார்கள்.

‘திருமங்கலக்குடி செல்லுங்கள். அங்கே உள்ள பிராணநாதரை வணங்கி வாருங்கள். விமோசனம் பெறுவீர்கள்’ என அருளினார் பிரம்மா. அதன்படி, திருமங்கலக்குடி வந்த நவக்கிரகங்கள், அருகில் உள்ள வனத்தில் இருந்து தவம் புரியத் தொடங்கினார்கள். விநாயகப் பிரதிஷ்டை செய்து, விநாயகரையும் சிவனாரையும் நினைத்து தவம் மேற்கொண்டார்கள். அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினார் சிவனார்.

நவக்கிரகங்களும் தவமிருந்து வரம் பெற்ற தலத்தில், காலவ முனிவர் சூரியனாருக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். மனைவியர் பிரத்யுஷா, உஷா ஆகியோருடன் சூரியனார் இங்கே அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார். சூரியனார் கோயிலைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் கோயில் கொண்டிருக்கின்றன. கஞ்சனூர் (சுக்கிர ஸ்தலம்), திருநள்ளாறு (சனீஸ்வர திருத்தலம்), ஆலங்குடி (குரு ஸ்தலம்), திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்), கீழப்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்), திருவெண்காடு (புத பகவான் ஸ்தலம்), திங்களூர் (சந்திர பகவான் ஸ்தலம்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் பகவான் ஸ்தலம்) முதலான ஸ்தலங்கள் அமைந்திருக்கின்றன.

சூரியனார் கோயிலின் தல விருட்சம் எருக்கு. இவருக்கு செந்நிற வஸ்திரங்கள் சார்த்தி வேண்டிக்கொள்வது நற்பலன்களை வழங்கும். தாமரை மற்றும் எருக்கம்பூக்களை சூரிய பகவானுக்கு சார்த்தி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யலாம். நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் சூரிய பகவான். மேலும், ரவா அல்லது கோதுமையால் செய்த உணவை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வது மகத்தான பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE