ஆடி குருவாரத்தில் திருப்பட்டூர் பிரம்ம தரிசனம்; தலையெழுத்தை திருத்தி அருளும் திருத்தலம்!

By வி. ராம்ஜி

ஆடி குருவாரமான வியாழக்கிழமையில், திருப்பட்டூர் பிரம்மாவை தரிசிப்போம். பிரார்த்திப்போம்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரம்ம சம்பத்கெளரி. சிவபெருமானுக்கு உரிய திருத்தலம் தான் என்றாலும் ஆலயத்தின் நாயகன் பிரம்மா தான். இங்கே, பிரம்மாண்டமான திருமேனியுடன் தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் பிரம்மா.

பிரம்மாவுக்கு உண்டான கர்வத்தால், அவரின் தலையைக் கொய்தார் சிவனார். மேலும், படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். இந்த வேதனையில் தன் கர்வத்தால், தான் அழிவுற்றதை எண்ணிக் கலங்கிய பிரம்மா, சிவனாரிடம் வேண்டினார். சாபவிமோசனம் அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

ஈசன் அருளியபடி, இந்தத் தலத்துக்கு வந்து கடும் தவம் மேற்கொண்டார் பிரம்மா. உமையவளைப் பிரார்த்தித்து, ‘எனக்காக கொஞ்சம் சிபாரிசு செய்யக்கூடாதா?’ என்று வேண்டினார்.பார்வதிதேவியும் சிவனாரிடம் பிரம்மாவுக்காக சிபாரிசு செய்தார். அதனால்தான் இந்தத் தலத்து இறைவிக்கு பிரம்மசம்பத் கெளரி எனும் திருநாமம் அமைந்தது. சிவனாரும் பிரம்மாவின் இழந்த பதவியைத் தந்தருளினார். அப்போது, ‘இங்கே இந்தத் தலத்துக்கு வரும் என் பக்தர்களுக்கு, தலைவிதியைத் திருத்தி அருளவேண்டும்’ என கட்டளையிட்டார். ‘விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என அருளினார் சிவனார்.

அதன்படியே இன்றைக்கும் திருப்பட்டூர் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை பிரம்மா திருத்தி அருளுகிறார் என்கிறது ஸ்தல புராணம்.

கிழக்குப் பார்த்த கோயில். பிரம்மபுரீஸ்வரரும் பிரம்மசம்பத்கெளரியும் பிரம்மாவும் கிழக்குப் பார்த்தபடியே சந்நிதி கொண்டு அருளுகிறார்கள். நம் நட்சத்திரத்துக்கு உரிய நாளில், ஞாயிற்றுக்கிழமைகளில், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் திருப்பட்டூர் பிரம்மாவை தரிசிப்பது நம் தலையெழுத்தையே மாற்றியருளும் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தின் இன்னொரு விசேஷம்... பிரம்மா சந்நிதியில் நின்று கொண்டே, கோயிலின் கோஷ்டத்தில் குரு பகவான் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். மேலும், பிரம்மாவின் சந்நிதிக்கு எதிரில் உள்ள தூண்களின் ஒன்றில், சனீஸ்வர பகவானின் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் நின்றபடி, பிரம்மாவையும் குரு தட்சிணாமூர்த்தியையும் சனீஸ்வர பகவானையும் தரிசிக்கலாம். வேறெங்கும் கிடைக்காத அற்புத தரிசனம் என்று இதைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE