வாழ்வை வளமாக்கும் ஆடிப்பெருக்கு; என்ன செய்யணும்?

By காமதேனு

இன்று ஆடிப்பெருக்கு. இந்த நன்னாளில், புனித நீராடுவோம்; காவிரித்தாயைப் போற்றுவோம். சித்ரான்னங்கள் படையலிட்டு வேண்டிக்கொள்வோம்.

உத்தராயனம் முடிந்து தட்சிணாயன புண்ய காலம் தொடங்குவது ஆடி மாதத்தில்தான். உத்தராயன புண்ய காலத் தொடக்கத்தில் இயற்கையான சூரியனை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். அதேபோல், தட்சிணாயன புண்ய காலத்தில், நீர் நிலைகளை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. தட்சிணாயனம் தொடங்கும் மாதமான ஆடி மாதத்தில், ஆடிப்பெருக்கு நாளில், அதாவது ஆடி மாதம் 18-ம் தேதி, புனித நீராடுவது அதனால்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆடி மாதம் முழுக்கவே எந்த நாளில் வேண்டுமானாலும் நதியில் நீராடலாம் என்றாலும் ஆடிப்பெருக்கு நன்னாளில், காவிரி முதலான நீர் நிலைகளில், ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடந்தேறும். நீரின்றி அமையாது உலகு என்பதையும் மக்களின் ஜீவனாகத் திகழும் தண்ணீரை ஆராதிக்கவும் அறிவுறுத்தும் ஆடி மாதத்தில் நீர் நிலைகளை வணங்குவோம். வழிபடுவோம்.

ஆடிப்பெருக்கு பூஜை

’மாதங்களில் நான் மார்கழி’ என்றார் மகாவிஷ்ணு. ஆனால், ’மாதங்களில் நான் ஆடி’ என்று சொல்லாமலேயே நமக்கு உணர்த்துகிறாள் அம்பிகை. அதனால்தான் ஆடி மாதத்தில் சிவனாரின் சக்தியைவிட, அம்பாளின் சக்தியே அளப்பரியதாக இருக்கும் என்பதாகச் சொல்கிறது புராணம். ஆக, மாதங்களில் ஆடி எனத் திகழும் அம்பிகையைக் கொண்டாடுவோம்; ஆராதிப்போம்; வேண்டுவோம்; பலம் பெறுவோம்.

உண்மையிலேயே, சக்தி என்று போற்றப்படும் அம்பிகை, மகா சக்தியாகத் திகழும் இந்த ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அமர்க்களப்படுகின்றன. இல்லத்தில், லலிதா சகஸ்ரநாமம் சொல்லிப் பாராயணம் செய்வது, ‘தேவி மகாத்மியம்’ பாராயணம் செய்வதும் ‘ஸ்ரீசெளந்தர்ய லஹரி’ பாராயணம் செய்வதும் எண்ணற்ற பலன்களைத் தரும். ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து, வீட்டில் உள்ள அம்பாள் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், செல்வம் பெருகும். இழந்த பொன்னையும் பொருளையும் பெறலாம்.

ஆடிப்பெருக்கில் மாங்கல்ய பூஜை

ஆடி மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி முதலான நாட்களில், ஏதேனும் ஒருநாளில்... கதம்பசாதம் படையலிடுவதும் அம்மன் வழிபாடு செய்து, குடும்ப சகிதமாக எல்லோரும் நமஸ்கரித்து வேண்டிக்கொள்வதும் கிராமங்களில் இன்றைக்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநாளில், புதுமணத்தம்பதியர், நீர்நிலைக்கு வந்து வேண்டிக்கொண்டு, தாலிப்பிரித்துப் போட்டுக்கொள்ளும் சடங்கும் சிறப்புற நடைபெறும்.

இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில், தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் முதலான சித்ரான்னங்களைப் படையலிடுவோம்; பலன்களைப் பெறுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE