கருட பஞ்சமி; நம் பாவம் தீர்ப்பார் கருட ராஜா!

By காமதேனு

கருட பஞ்சமி நன்னாளில், கருட பகவானை வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், சகல தோஷங்களும் விலகும். திருமண வரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். தொழிலிலும் வேலையிலும் உயர்வும் தன லாபமும் கூடும் என்பது ஐதீகம். இன்று ஆகஸ்ட் 2ம் தேதி கருட பஞ்சமி.

நாகத்துக்கும் கருடனுக்கும் வழிபாடுகளில், எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. இறைத்திருவுருவங்களுடன் தொடர்பு கொண்டதாகத் திகழும் நாகத்துக்கும் கருடருக்கும் சிறப்பு வழிபாடுகள் இருக்கின்றன.

ஆடி மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு, வளர்பிறையில், சதுர்த்தி நாள் நாக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. நாக வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல், சதுர்த்திக்கு அடுத்தநாளான பஞ்சமி திதி என்பது, கருடனை வணங்குவதற்கு உரிய நாளாக, பிரார்த்தனை செய்வதற்கு உரிய நாளாக, ஞான நூல்கள் விவரிகின்றன. இதனை கருட பஞ்சமித் திருநாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பட்சி என்று சொல்லப்படும் பறவை இனங்களில் கருடன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்தான், கருடனை பட்சிகளின் ராஜா என்பார்கள். அப்படி, பறவைகளின் தலைவனாகத் திகழ்வது கருட பட்சி. அதனால்தான் கருட பட்சிக்கு உரிய நாளில் வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். .

வைஷ்ணவ ஆலயங்களில், திருவிழாக் காலங்களில், முக்கியமான வைபவங்களில்... திருமால் கருட வாகனத்தில் அழகு ததும்ப வீதியுலா வருவதை தரிசித்திருப்போம். மகாவிஷ்ணுவின் திருவடியைச் சரணடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பக்தி செலுத்தச் சொல்கிறது விஷ்ணு பாகவதம். அப்படி பெருமாளின் திருவடியைச் சரணடைந்த கருடனை, கருடாழ்வார் என்கிறோம். பெரிய திருவடி என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். பெரிய திருவடியாகத் திகழும் கருடாழ்வாரை வணங்கும் நன்னாளாக அமைந்ததுதான் ‘கருட பஞ்சமி’.

ஆகஸ்ட

ஆடி மாதம் என்பதே பெண்கள் வழிபடுவதற்கு உரிய மாதம். ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாக சதுர்த்தி என்பவையெல்லாம் பெண்கள் அவசியம் வழிபடவேண்டிய நாட்கள். இதேபோல், கருடபஞ்சமி என்பதும் பெண்கள் அவசியம் வணங்கி வழிபடவேண்டிய நாள். எவர் வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் பெண்கள் அவசியம் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

கருட பஞ்சமி நாளில், காலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டு வாசலிலும் பூஜை மாடத்திலும் கோலமிட்டுக்கொள்ளுங்கள். வீட்டில், கருடாழ்வார் படமோ சிறிய விக்கிரகமோ இருப்பதற்கு வாய்ப்பு அரிதுதான். இருந்தால் அதை மணைப்பலகையில் கோலமிட்டு வைத்துக்கொள்ளலாம்.

அப்படி இல்லையெனில், உங்களுக்கு விருப்பமான பெருமாள் படத்தை வைத்துக்கொள்ளுங்கள். பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி வழிபடுங்கள். துளசிமாலை சார்த்துங்கள். துளசியைக் கொண்டு சிறிதளவேனும் பெருமாளுக்குச் சார்த்தினாலும் போதுமானது. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது விசேஷம். கருடாழ்வாரையும் பெருமாளையும் மனதார வழிபடுங்கள். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள கருடாழ்வாரைத் தரிசிப்பதும் அவருக்கு துளசி மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது.

கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மகா புண்ணியம் தரும் என்றும் நம் பாவங்களையெல்லாம் போக்கும் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸொர்ண பட்சாய தீமஹி

தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்

என்று ஆத்மார்த்தமாக சொல்லி வழிபடுங்கள்.

பின்னர், பூஜையை நிறைவு செய்யும்விதமாக புளியோதரை நைவேத்தியம் செய்யுங்கள். அடுத்து, வாசலுக்கு வந்து, வானை நோக்கி கருடாழ்வார் பறப்பதாக நினைத்து, பாவனையாக, மூன்று முறை கைக்கூப்பி வணங்குங்கள். அதன் பின்னர், தீப தூப ஆராதனைகள் செய்து, பெருமாளுக்கு நமஸ்காரம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள்.

பெரிய திருவடி கருடாழ்வார், மாங்கல்ய தோஷம் நீக்குவார். திருமண வரத்தைத் தந்தருளுவார். கணவரின் நோய் தீர்த்து ஆரோக்கியம் பெருகச் செய்வார். வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழச் செய்வார். கடன் முதலான தரித்திர நிலைகளில் இருந்து சுபிட்ச நிலையை தந்தருளுவார். மனதில் தேவையற்ற பயமெல்லாம் விலகச் செய்து மனோதைரியத்தை வழங்கியருளுவார் கருடாழ்வார். .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE