ஆடி அமர்க்களம்!

By வி. ராம்ஜி

ஆடி மாதம் வந்துவிட்டால், ஜவுளிக்கடை முதல் பாத்திரக்கடை வரைக்கும் கூட்டம் கும்மியடிக்கும். தள்ளுபடி போஸ்டர்களும் விளம்பரங்களும் சுவர்களில் டாலடிக்கும். டிவி-யைத் திறந்தாலே, ஜவுளி, நகை, செல்போன், கிரைண்டர் கடைக்காரர்கள் கரிசனத்துடன் நம்மை வரவேற்று, தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

குடும்பம் குடும்பமாக, பஜாரில் கூடி, முண்டியடித்து, கசகசவென்று ஷாப்பிங் செய்துவிட்டு கட்டைப்பைகளில் துணிகளை வாங்கிக் கொண்டு, கையில் பானிபூரி அல்லது பாப்கார்னை சாப்பிட்டபடி, பஸ் ஸ்டாண்ட் அல்லது ரயில்நிலையம் நோக்கி மக்கள் வருவதைப் பார்க்கலாம். ஆனால், ஆடி மாதம் வந்தாலே, தமிழகத்தின் அம்மன் ஆலயங்களில் கூடுகிற கூட்டங்களும் குதூகலங்களும் நூறு ஷாப்பிங் மாலுக்கும் ஆயிரம் பஜார்களுக்கும் சமம்!

வருடத்தில், எல்லா மாதங்களிலும் செவ்வாய், வெள்ளிகளில், அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டும். நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனையும் நினைத்தது நடந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் செய்கிற நேர்த்திக்கடனும் என அம்மன் ஆலயங்கள் எப்போதுமே ஜனத்திரளுடன் இருக்கும். ஆடி மாதம் முழுவதுமே சக்தியின் கோயில்களில், கூட்டம், வழிபாடு, கோலாகலம், பக்திமயம்தான்!

இறைவன் திருமால், கிருஷ்ணாவதாரத்தில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்றார். அதேபோல், சக்தியானவள்... தன்னிடம் கேட்ட வேண்டுகோளுக்கு இணங்க, “ஆடி மாதம் உனக்குத்தான். முழுக்க முழுக்க உன் சக்தியை உலகுக்கு வெளிப்படுத்து. நீர் நிலைகள் நிரம்பி, தானியங்கள் பெருகி, மக்கள் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் வாழ, அருள் செய்” என அருளினார் சிவபெருமான். இதனால், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்றானதாகச் சொல்கிறது புராணம்!

ஆடி மாதத்தில், மஞ்சள் முகமும் சீவிய தலையுமாக, தலையில் பூக்களும் கைகளில் எண்ணெய் பாட்டிலும் திரியுமாக, புடவை கட்டிக் கொண்டு கோயிலுக்குப் போகிற பெண்கள், சக்தியின் மறு உருவமாகவே தெரிவார்கள்.

சென்னையில், ஸ்ரீகாளிகாம்பாளும், முண்டகக் கண்ணியம்மனும், சைதாப்பேட்டை ஸ்ரீஇளங்காளியம்மனும் திருச்சி சமயபுரம் மாரியம்மனும், வெக்காளி அம்மனும், மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மனும், சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மனும், பொள்ளாச்சி மாசானி அம்மனும், தஞ்சாவூர் வல்லம் ஸ்ரீஏகௌரியம்மனும், புன்னைநல்லூர் மாரியம்மனும் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மனும், நாகப்பட்டினம் செடல் முத்துமாரியம்மனும், நெல்லையில் பிடாரியம்மனும், தீப்பாய்ந்த அம்மனும், ஈரோட்டில் சின்ன மாரியம்மனும் பெரிய மாரியம்மனும், கோவையில் தண்டு மாரியம்மனும் ஓய்வு ஒழிச்சல் பார்க்காமல், வந்தவர்களுக்கெல்லாம் அருள்வழங்கி, வந்தவர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி வருவார்கள். நல்வழி வகுத்துக் கொடுப்பார்கள்.

வாசலிலும் தெருக்களிலும் வண்ணக்கோலங்கள் பளிச்சிடும். காலை ஐந்து மணிக்கே, தமிழகத்தின் முக்கால்வாசி தெருக்களில் இருந்தும் அம்மன் கோயில்களில் இருந்தும், எல்.ஆர்.ஈஸ்வரி தன் கணீர்க்குரலில், காந்தக்குரலால், ‘செல்லாத்தாவை’ அழைத்துக் கொண்டிருப்பார். வீட்டில் உள்ள ஆத்தாக்களும் அப்பத்தாக்களும் அம்மாக்களும் அக்காக்களும் அம்மனைத் தரிசிக்கக் காலையிலேயே கிளம்பிவிடுவார்கள். தரிசனம் முடியும் வரை, பச்சைத்தண்ணி கூட பல்லில் படாமல் பார்த்துக் கொள்வார்கள்.

சில கோயில்களில் புற்று இருக்கும். அங்கே, பால் குடிக்க பெருத்த வயிறு இல்லாமல், நாகராஜாக்கள் அப்போது திண்டாடிப் போகும். கோயில் வாசலில் உள்ள பூக்காரப் பாட்டிகளும் சிறுமிகளும் விரல்வித்தை நடிகர் சிம்புவை, தோற்கடித்துக் கொண்டே இருப்பார்கள். பக்கத்தில் பேசுவார்கள். பக்தர்களை கூவிக்கூவி அழைப்பார்கள். பூக்களுக்குத் தண்ணீர் தெளிப்பார்கள். முதுகுக்குப் பின்னே இருக்கிற சாக்குப்பையில் இருந்து, அரளியையோ மல்லிகையையோ கொத்துக் கொத்தாக எடுத்து எதிரில் இருக்கிற கால் உடைந்த டேபிளில், கல்லில் ஒண்டுக்கொடுக்கப்பட்டு ஒய்யாரமாக நிற்கும் டேபிளில், பரப்பிப் போடுவார்கள். சரசரவென சரங்களைக் கட்டிக் கொண்டே இருப்பார்கள். இத்தனை வேலைகளையும் ஒரேசமயத்தில், எந்திரன் ரஜினியால் கூட செய்யமுடியாது.

காரைக்குடியின் மையப்பகுதியில் உள்ள கொப்புடையம்மனாகட்டும். மீனாட்சிபுரத்தில் உள்ள தக்காளிநாயகி முத்துமாரியம்மனாகட்டும். சிவகங்கை அருகில் நாட்டரசன்கோட்டையில் இருந்தபடி, நாட்டு மக்களை தன் கண்ணால் அளந்து, அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிற கண்ணுடைநாயகியாகட்டும்... எல்லோருக்கும் தினம்தினம் தீபாவளிதான். வேளாவேளைக்கும் புத்தாடைகள்தான்.

மாவிளக்கு என்ன... பொங்கல் படையல் என்ன... அம்மனுக்கு வளையல் போட்டுப் பார்க்கிற அழகு என்ன... அடடா. அங்கே ஆடித்தபசு. இங்கே அம்மனுக்கு வளைகாப்பு. அங்கே அம்மன் திருவீதியுலா. இங்கே, பூமிதித்தல் என எங்கு திரும்பினாலும் சக்தி ராஜாங்கம்தான்.

இவர்களே இத்தனை பிஸி என்றால், காஞ்சி காமாட்சி அம்மனை நினைத்துப்பாருங்கள். காஞ்சி மாநகரில் தடுக்கிவிழுந்தால் கோயில்கள்தான். முட்டிக் கொள்வதாக இருந்தாலும் முட்டுச்சந்தாக இருந்தாலும் அது கோயில் மதிலாகத்தான் இருக்கும். திரும்பிய திசையில் கோபுரம் தெரியும். இந்த தெருவில் ஒரு கோயில், திரும்பி அந்தப் பக்கம் சென்றால் அங்கே பிரம்மாண்டமாய் ஒரு கோயில், கால்கிலோமீட்டர் மதிலைப் பார்த்து மயங்கியபடி, அதையொட்டிய தெருவில் சென்றால், அழகான குளம். குளத்தின் அந்தக் கரையில் கோபுரம், மதில், கோயில்.

சரி... காமாட்சி அம்பாளைப் பார்ப்போம்.

காஞ்சியம்பதி என்று போற்றப்படுகிற, கோயில் நகரம் எனப் புகழப்படுகிற காஞ்சி மாநகரில் உள்ள எந்த சிவாலயத்திலும் அம்பாளுக்கு சந்நிதி கிடையாது. மொத்த அம்பாளுமாகச் சேர்ந்து, உலகின் மொத்த சக்தி ஆலயங்களுக்கெல்லாம் தலைமைபீடமாக, காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலில், காமாட்சி அம்பாளாகக் கோலோச்சுகிற மகாராணி அவள்.

மயிலாப்பூர் கற்பகாம்பாள், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, மதுரை மீனாட்சி, சங்கரன்கோவில் கோமதி, கோவில்பட்டி செண்பகவல்லி, நெல்லை காந்திமதி, அவ்வளவு ஏன்... காசியின் விசாலாட்சி என அகிலத்து தேவிகளுக்கெல்லாம், அம்மா, அக்கா, சித்தி, அத்தை, பெரியம்மா, பாட்டி, தேவி, நாயகி, தலைவி எல்லாமே, எல்லாருக்குமே காமாட்சிதான்!

‘போதும்பா... போதும்‘ என்று காமாட்சி அன்னையின் தோள்கள் கெஞ்சும். அந்த அளவுக்கு பூக்களும் சரங்களும் மாலைகளும் சந்நிதியையே நிறைத்திருந்து மிஞ்சும். ஒருவர் தண்டுடன் தாமரை மாலை சார்த்துவார். இன்னொருவர், அரளிமாலையை எடுத்துக் கொண்டு வருவார். அடுத்தவர் ஆளுயர ரோஜாமாலையை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு வருவார்.

காஞ்சியின் பட்டு வியாபாரிகள், பட்டுப்புடவைகளையும் ரவிக்கைத் துணிகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவளும் சளைக்காமல் உடுத்திக் கொண்டு, அழகைக் கூட்டிக் கொண்டே நம்மையெல்லாம் மயக்கி உட்காரச் செய்துவிடுவாள். பட்டுவியாபாரிகளுக்குப் போட்டியாக, ஆயிரக்கணக்கான பக்தர்களும் புடவையும் கையுமாக வருவார்கள்.

வீரசிவாஜியும் வீரத்துக்குப் பெயர்பெற்ற பாரதியும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் வணங்கிய சென்னை காளிகாம்பாள், இன்னும் இன்னுமாகக் கனிந்திருப்பாள், இந்தக் காலக்கட்டத்தில்! அவள் உக்கிரகாளியும் அல்ல, வக்கிரகாளியும் இல்லை. நம்மையெல்லாம் சொக்க வைக்கிற காளி அவள்!

காஞ்சி பட்டுவியாபாரிகளைப் போலவே, பாரிமுனையில் உள்ள வியாபாரிகள், கைகொள்ளாத பூக்களுடன் வருவார்கள். புடவையுடன் வருவார்கள். போதாக்குறைக்கு, பிராகாரத்தில் பத்தடிக்குப் பத்தடி தொலைவில், ஒவ்வொரு அண்டாவும் பக்கத்தில் இரண்டு பேரும் இருந்து கொண்டு, வந்தவர்க்கெல்லாம் தந்து கொண்டே இருப்பார்கள். நீட்டிய கைகளில் எல்லாம், தட்டுகளில் எல்லாம், சுடச்சுட சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், மணக்க மணக்க கேசரி என ’பவன்’ ஹோட்டல்களே தோற்கும் அளவுக்கு சப்ளை வெகுஜோராக நடக்கும்.

இதுவாவது பரவாயில்லை. லேட்டாக எழுந்து, டிபன் சாப்பிட்ட பிறகு இன்னொரு தூக்கம் போட்டுவிட்டு, அப்புறமாக பல் தேய்த்து மதிய உணவும் அதையடுத்து தூக்கமும் என சோம்பல் முறிக்கிற ஞாயிற்றுக்கிழமையும் வெறிச்சோடியிருக்கிற சாலைகளும் ஆடி மாதத்தில் அப்படியே மாறியிருக்கும்.

அந்தக் காலத்து ஒருரூபாய் நாணயம் அளவுக்கு பெரிய வட்டமாக குங்குமம் வைத்திருக்கிற பெண்களைப் பார்க்கலாம். அவர்களின் மருமகப்பெண்களும் பேரப்பிள்ளைகளும் பளிச்சென்று உடுத்தி, எல்லா நகைகளையும் அணிந்தபடி இருப்பார்கள். இசைக்கலைஞர்கள் ரேஞ்சுக்கு பெரியகரை போட்ட வேட்டியும் ராம்ராஜ் சட்டையுமாக வெள்ளையும் சொள்ளையுமாக, கிடா மீசை வைத்திருக்கிற அண்ணாச்சிகளும் அண்ணாத்தேக்களும் தோளில் ஒரு காவித்துண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். கழுத்தில் தொங்கும் சங்கிலியால், புஜ்ஜியையோ ஜிம்மியையோ கட்டிவிடலாம். நகமும் சதையுமாக, பத்துவிரல்களிலும் உள்ள மோதிரங்கள் ஒவ்வொன்றும் விரல்நீளத்துக்கு இருக்கும். அந்த அண்ணன்கள் என்று சொல்லப்படுகிற கருகரு கருப்பு மை உபயத்தால் பளபளவென பொலிவாக இருக்கிற ஐம்பது அறுபதைக் கடந்தவர்கள், தெருமுனையில் உள்ள அம்மன் கோயிலில் நின்று, தெருவையே நிறைத்துக் கொண்டிருப்பார்கள்.

சட்டை, தலை, கன்னம், மணிக்கட்டு, வேஷ்டி என பல இடங்களில், குங்குமம் அப்பிக்கிடக்கும். மஞ்சளகரமாக இருக்கும். திப்பித்திப்பியாய் கரை ஒட்டியிருக்கும். “அட... வாங்க என்ஜினியர் சார். இன்னொரு டம்ளர், கூழ் சாப்பிட்டுப் போங்க” என்றும், “ஐ.டி.தம்பி. இது கூல்டிரிங்ஸ் இல்ல. கூழ்டிரிங்ஸ். சொல்லப்போனா, இதுதான் உண்மையான கூல் டிரிங்ஸ். நைட்டெல்லாம் கண்ணு முழிக்கிற நீங்க, ஒரு நாலு கிளாஸ் கூழ் குடிச்சா, வயிறு குளுகுளுன்னு ஆயிரும். ஆத்தா அருளால, இந்த வருஷம் கல்யாணமும் ஆகிரும். வெக்கப்படாம வா தம்பி” என்று சொல்லி அங்கே உள்ள டிரம்மில் இருந்தோ அண்டாவில் இருந்தோ, அமுதசுரபியென கூழ், மதியம் தாண்டியும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஒருவெள்ளிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ சாயந்திர வேளையில், கோயில் பிராகார மண்டபத்தில் அல்லது கோயிலுக்குப் பக்கத்தில் ஷாமியானா போட்டிருப்பார்கள். “ஏம்பா.. காத்துக்கருப்பு அண்டாம இருக்கறதுக்குத்தான் இந்த பூஜை. ஆனா உள்ளே காத்து ஏதும் வந்து இம்சை பண்ணிடக்கூடாதப்பு. அப்படிக் கட்டுங்க ஷாமியானா பந்தலை...” ஊர்ப்பெரியவரோ, கோயில் டிரஸ்டியோ, ரிடையர்டு வாத்தியாரோ இப்படிப் பரபரத்துக் கொண்டிருப்பார்கள். மாலை 4 மணியில் இருந்தே கையில், கூடையில் விளக்கை எடுத்தபடி, குவிந்துவிடுவார்கள் பெண்கள்.

“என் நம்பர் 27ன்னு டோக்கன் கொடுத்தாங்க. அதன்படிதான் உக்காரணுமா அண்ணே...” என்று விசாரித்து, ஒவ்வொருவராக உட்காருவார்கள். கோயில் குருக்கள் தன் பத்து வயதுப் பையனை துணைக்கு வைத்துக் கொண்டு, ஆளுயரக் குத்துவிளக்கின் மேலே குச்சி செருகி, அது சிலுவை போல கட்டிவைத்து, அந்த விளக்கை, முக்கால் மணிநேரத்தில், முதுகில் வியர்வை ரோடுரோடாக கோடு போட்டிருப்பதையெல்லாம் மறந்தபடி, அப்படியே அம்மனாக்கியிருப்பார்.

“ஆரம்பிச்சிடலாமா... ஆரம்பிச்சிடலாமா” என்று மடிசார் புடவையுடன் மாமி ஒருவர், மைக்கும் கையுமாக நின்று, அம்மனுக்கு இந்தப் பக்கம் நிற்கலாமா அந்தப் பக்கம் நின்றால் எல்லோருக்கும் தெரியுமா என்று மானிட்டர் இல்லாமலேயே, அளந்து கொண்டிருப்பார். அவரிடம் இருந்து மைக்கை வாங்கி, “ஓம் சக்தி பராசக்தி, ஓம் சக்தி பராசக்தி, ஓம்சக்தி பராசக்தி” என்று சொல்லிவிட்டு, “இன்னும் சிறிதுநேரத்தில் அம்மன் சந்நிதியில் விளக்குபூஜை நடைபெற இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள பெண்களும் தாய்மார்களும் வீட்டில் இருந்து குத்துவிளக்கை எடுத்துக் கொண்டு, பூஜையில் கலந்து கொண்டு, அம்மனின் அருளுக்குப் பாத்திரமாகும்படி, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். ஓம்சக்தி பராசக்தி...” என்று சொல்லிவிட்டு, மைக்கை, மாமியிடம் கொடுத்துச் செல்வார் ஒருவர்.

அறிவிப்பைக் கேட்டு, இன்னும் கொஞ்சம் பெண்கள் வந்தாலும் வரலாம் என்று காத்திருந்து, காத்திருக்கும் வேளையில் ”கற்பகவல்லியின் பொற்பதங்களை” பாடுவார் ஒருவர். பட்டுப்பாவாடை சரசரக்க, மூக்குக்கண்ணாடியும் தேஜஸான கல்விமுகமுமாக, “அயிகிரி நந்தினி” பாடுவாள் சிறுமி ஒருத்தி. சப்பளங்கால் போட்டு உட்காரமுடியாமல் உட்கார்ந்த ஐம்பது கடந்த பெரியம்மா ஒருவர், எழுந்திருக்க முடியாமல் எழுந்து, மைக்கை வாங்கி, “ஆடி மாசத்துல இப்படியொரு விளக்குப் பூஜையை நடத்தின கோயில்காரங்களை நாம பாராட்டியே தீரணும். நம்மளோட பிரார்த்தனைகளை அம்மன்கிட்ட சொல்லுங்க. விளக்குப் பூஜைலயும் கூழ் காய்ச்சி ஊத்துனதுலயும் குளிர்ந்து போயிருக்கற அம்மா, நம்மையும் நம்ம வாழ்க்கையையும் குளிரப்பண்ணிருவா. இது நான் கலந்துக்கற முப்பத்தி எட்டாவது விளக்குப் பூஜைங்கற விஷயத்தை தெரிவிச்சுக்கறேன்” என்று சொல்லிவிட்டு, கண்களை மூடிக் கொண்டு, மைக்கில் ஒட்டியபடி வாயை வைத்து, ”கற்பூரநாயகியே கனகவல்லி” எனப் பாடுவார். பாட்டின் இடையிடையே, மைக் ஒரு பக்கம், வாய் ஒருபக்கம், பாட்டு ஒருபக்கம் எனப் போயிருக்கும்.

விளக்குப் பூஜை முடிந்து, ஏற்றி வைத்த விளக்கை ஏந்தியபடி பிராகாரமாக வந்து, அம்மன் சந்நிதியில் நின்று, ஒரு அழுகை, ஒரு குமுறல், ஒரு சிரிப்பு என அம்மனுடன் மனதுக்குள் முறையிட்டு, அர்ச்சகர் தரும் குங்குமத்தை நெற்றியிலும் மேல்வகிட்டிலும் வைத்து, மீதமுள்ள குங்குமத்தை அப்படியே தாலிக்கொடியில் இட்டுக் கொண்டு, தாலியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் ஒவ்வொருவர் நடையிலும் தெரியும் நம்பிக்கையும் பக்தியும் இருக்கிறதே... அடடா. அதுதான் சக்தியின் அருள். அதுதான் ஆடியின் மகத்துவம். ஆடி அமர்க்களம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE