உறையூர் குழுமாயி அம்மனுக்கு மாவிளக்கு

By வி. ராம்ஜி

திருச்சியில் உள்ள உறையூரை தலைநகரமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் உண்டு. அந்த உறையூரின் ஒருபகுதியில் கோயில் கொண்டு, உலகையே ஆட்சி செய்து வருகிறாள் குழுமாயி அம்மன்.

திருச்சி உறையூர் புத்தூர் பகுதியில் உள்ளது சோழனூர். காவிரியில் இருந்து கிளைபிரிந்து உய்யகொண்டான் வாய்க்கால் சலசலத்து ஓடுகிறது ஒருபக்கம். அந்தப் பக்கம் அந்தத் தண்ணீரின் வளத்தால், பச்சைப்பசேலென தென்னையும் வாழையும், நெல்லுமென பசுமை போர்த்திக் காட்சியளிக்கிறது. இந்த இடத்துக்கு மத்தியில்தான் கோயில் கொண்டிருக்கிறாள் குழுமாயி அம்மன்.

மங்கம்மாள் எனும் அரசி, இந்த சிற்றூரை ஆட்சி செய்து வந்தாள். மக்களின் மீதும் மண்ணின் மீதும் மாறாப் பற்று கொண்டு, செம்மையாக ஆட்சி செய்துகொண்டிருந்தாள். ஒருமுறை, அந்த ஊரைச் சேர்ந்தவர், தனது நிலத்தில் குழி தோண்டினார். ஒருகட்டத்தில், குழியில் இருந்து ரத்தம் ஊற்றென பீரிட்டுக் கிளம்பியது. அதிர்ந்து போனார். ஊர்மக்கள் அனைவரும் சேதி கேட்டு ஓடிவந்து பார்த்தார்கள். பார்த்தவர்கள், மிரண்டு போனார்கள். என்ன... என்ன... என்று கேட்டுக்கொண்டு எதுவும் புரியாமல் நின்றார்கள்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிறுமிக்கு அருள் வந்தது. எல்லோரும் அவளையே பார்த்தார்கள். “நான் சக்தி. நானே காளி. இனி நான் இங்கேதான் இருக்கப்போகிறேன். உங்களையெல்லாம் காக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மயங்கிவிழுந்தாள். எல்லோரும் இதைக் கேட்டு பிரமித்தார்கள். “தாயே... காளியாத்தா...” என நெக்குருகிப்போனார்கள். குழியைக் கண்டு வணங்கினார்கள்.

பின்னர், அந்தக் குழியை சமன்படுத்தி, கோயில் எழுப்பினார்கள். அந்தக் கோயிலில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள். குழியில் இருந்து அம்மன் தன் இருப்பிடத்தைக் காட்டியதால், அம்மனுக்கு குழியாயி அம்மன் எனப் பெயர் சூட்டி வணங்கினார்கள். பிறகு இதுவே குழுமாயி அம்மனாக மருவியது என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

சிறிய ஆலயம்தான். ஆனாலும் சாந்நித்தியம் குறையாமல் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மாரி பொழிந்துகொண்டிருக்கிறாள் குழுமாயி அம்மன். ஊருக்கே காவல்தெய்வமாகத் திகழும் குழுமாயி அம்மனுக்கு காவலனாக, ரெட்டைமலை ஒண்டிகருப்பசாமி திகழ்கிறார். அவருக்கும் சந்நிதி இருக்கிறது. சொல்லப்போனால், இவருக்குத்தான் இங்கே முதல் பூஜை, படையல்.

மாசி மாதத்தில் குட்டிக்குடித்தல் திருவிழா என்பது இந்தக் கோயிலில் வெகு பிரசித்தம். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, திருவிழா கோலாகலமாக நடைபெறும். அம்மனுக்கு இங்கே உற்சவ விக்கிரகம் இல்லை. மாறாக, வருடந்தோறும் பனையோலையால் அம்மன் உருவத்தைச் செய்து, சப்பரத்தில் வைத்து, திருவீதியுலா வருவது வழக்கம்.

ஆடி மாதம் முழுவதுமே குழுமாயி அம்மனை தரிசிக்க தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என்றிருக்கும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து, அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவார்கள். பொங்கல் வைத்துப் படையலிடுவார்கள்.

அமாவாசை மற்றும் பெளர்ணமி நாளில், காலையும் மாலையும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அப்போது அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், வீட்டில் உள்ள திருஷ்டி மொத்தமும் கழியும். தடைபட்ட விசேஷங்கள் இனிதே நடந்தேறும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள புத்தூர் குழுமாயி அம்மனைத் தரிசிப்போம். நம் குடும்பத்தை, காவல்தெய்வமென இருந்து காத்தருள்வாள் குழுமாயி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE