தமிழகத்து அம்மன்களும்... எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களும்!

By வி. ராம்ஜி

அம்மனுக்கு உகந்தது ஆடி மாதம் என்பார்கள். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள் தொடங்கி, தெருமுனையில் இருந்தபடி மக்களைக் காக்கிற அம்மன் ஆலயங்கள் வரை எல்லாக் கோயில்களிலும் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கிவிடும். மூன்று நாள் விழா, ஐந்து நாள் விழா, பத்துநாள் விழா என ஊரே திரண்டு வந்து விழாவில் பங்கேற்கும். அங்கெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரியின் கணீர் குரலும் நிச்சயம் ஒலிக்கும்.

ஆடி மாதம் என்றால் அம்மன் வழிபாடு. அம்மன் கோயில் என்றால் எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப் பாடல்கள். எத்தனை பக்திப் பாடல்கள் வந்தாலும் இரண்டு மூன்று தலைமுறையாக, ஈஸ்வரியின் குரல்தான் ஆடி மாதத்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது.

திரைப்பின்னணிப் பாடகியாக எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. இவற்றில் முக்கால்வாசி பாடல்கள், விரகதாபத்தை வெளிப்படுத்துகிற பாடல்களாக இருக்கும். காமெடி கலாட்டாவாக அமைந்த பாடல்களாக இருக்கும். அந்தக் காலத்தில் படங்களில், க்ளப் டான்ஸ் இருந்தால், பாடலும் இருக்கும். அநேகமாக அந்தப் பாடலைப் பாடியவர், எல்.ஆர்.ஈஸ்வரியாகத்தான் இருக்கும். அதற்கு நேர்மாறாக, ஆன்மிகப்பாடல்கள், குறிப்பாக அம்மன் பாடல்களும் பாடினார் என்பதும் இந்த இருவேறுபட்ட பாடல்களும் மக்களால் ஏற்கப்பட்டு கொண்டாடப்பட்டது எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இருக்கிற மேஜிக் வசீகரம் என்றுதான் சொல்லவேண்டும்.

’மாரியம்மா... எங்கள் மாரியம்மா - உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா’ என்று அதிகாலையிலேயே வந்து நம்மை எழுப்பிவிடுவார் ஈஸ்வரியம்மா.

’தாயே கருமாரி - எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி’ என்று நம்மை உருக்கி, பக்தியில் திளைக்கச் செய்துவிடுவார்.

கோயிலுக்குச் சென்றால், அம்மனின் சந்நிதிக்கு எதிரே நின்றால், ஆடாமல் அசையாமல், வைத்தகண் வாங்காமல் அம்மனைப் பார்த்துப் பரவசமாவோம். எங்கிருந்தோ... ‘செல்லாத்தா’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் நம் செவிகளில் வந்து நிறைக்க... நமக்கே தெரியாமல் அறியாமல், நாம் ஆடிக்கொண்டிருப்போம்.

‘உந்தன் பெருமையை இந்த உலகுக்கு

எடுத்துப் பாடாட்டா

இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று

சொல்லடி நீயாத்தா!’ என்று அவர் பாடுகிற விதத்தில் சொக்கிப் போவோம்.

கோயில் மைதானத்தில் ஒருபக்கம், பொங்கல் வைத்துக்கொண்டிருப்பார்கள். சாம்பிராணியும் ஊதுபத்தியும் மணக்கும். சந்தனமும் குங்குமமும் போட்டிபோட்டுக்கொண்டு பக்தி மணம் பரப்பும். அப்போது, ‘அம்பிகையைக் கொண்டாடுவோம்’ என்று பாடலைப் போட்டால், அங்கே இசைமணமும் கமகமக்கும். அவரின் குரல் கேட்டு, அம்மனே எழுந்து வந்து, ஈஸ்வரியின் இசையை சிலாகித்து ஆசீர்வதிப்பாள்.

’தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் தெய்வமவள்

போராடும் பாவங்களை பறந்தோடச் செய்பவளாம்’ என்று ’வேற்க்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தியவள் வேல்முருகன் அன்னையவள் வேண்டும் வரம் தந்திடுவாள்’ பாடலை எப்போது கேட்டாலும் அம்மனின் அருளில் மெய்மறந்து போவோம்.

’கற்பூரநாயகியே கனகவல்லி

காளி மகமாயி கருமாரியம்மா’ என்று குரலைக் கொஞ்சம் உச்சஸ்தாயிக்குப் போகாமலேயே பாடியும் அருள்மழையும் இசைமழையும் பொழிவார் எல்.ஆர்.ஈஸ்வரி.

‘காற்றாகி கனலாகி கடலாகினாய்

கயிறாகி உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்

நிலமாகி பயிராகி உரமாகினாய்

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்

போற்றாத நாளில்லை தாயே உன்னை

பொருளோடு புகழோடு வைப்பாய் எம்மை!’ என்று மெய்யுருகப் பாடுகிற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும் பாடல்களும் தான், ஒவ்வொரு ஆடி மாதத்துக்குமான ஸ்பெஷல்.

நகரத்தில் உள்ள கோயில், நகரத்துக்கு வெளியே உள்ள கோயில், கிராமத்தின் நடுவே அமைந்திருக்கும் கோயில், கிராமத்தின் குளக்கரையில் அம்மன் கொலுவிருக்கும் ஆலயம் என அம்மன் கோயில் எங்கே இருந்தாலும், ஆடி வந்தால் போதும்... காற்றில் கலந்து அசைந்து இசைந்து நம்மைக் கலக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலையும் கூட, பக்திக்கான வழியாகத்தான் பார்க்கிறார்கள் பக்தர்கள்!

ஆடி மாதத்தில் அம்மனுக்கு தவமிருந்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். எல்லோருக்கும் பிடித்த எல்.ஆர்.ஈஸ்வரியின் இசையைக் கேட்க, அந்த அம்மனே ஆடி மாதத்துக்காகக் காத்துக்கிடப்பாளோ என்னவோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE