ஒடிசா மாநிலம் புரியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது, நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் மூன்று மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இந்தக் கோயிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகந்நாதர் சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.
ஜெகந்நாதருக்கு 45 அடி உயர தேரும், பாலபத்திரருக்கு 44 அடி உயர தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேரும் உருவாக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்காக நேற்றும், இன்றும் ( ஜூலை 7, 8) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்கள் 'ஜெய் ஜெகந்நாத்' முழக்கத்துடன் தேர்கள் இழுக்கப்பட்டன. இந்த ரத யாத்திரையில் மங்கள ஆரத்தி மற்றும் மயிலம் உள்ளிட்ட பல சடங்குகள் செய்யப்பட்டன. ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது பக்தர் ஒருவர் உயிரிழந்ததார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக புரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
» கும்மிடிப்பூண்டி | ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
இது தவிர, நாள் முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்ததால், தேர் இழுக்கும் போது நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத் திணறல், காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள சைந்தாலா பகுதியைச் சேர்ந்த லலித் பகார்தி என அடையாளம் காணப்பட்டூள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் கருணைத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் குவிந்ததால், கிராண்ட் ரோடு பக்தர்கள் கடல் போல் நிரம்பி வழிந்தது.