ஆடி அமாவாசையில் முன்னோர் வழிபாடு ஏன்?

By காமதேனு

மனித வாழ்வில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விசேஷங்களைக் கொண்டது. நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பையும் பந்தத்தையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிற நாட்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமான நாள்... அமாவாசை.

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். முன்னோரை வழிபடுவதற்கு உரிய நன்னாள். முன்னோர்களை பித்ருக்கள் என்கிறது சாஸ்திரம். நம்முடைய முன்னோர்கள், தெய்வத்துக்கு நிகரானவர்கள். அதனால்தான், அமாவாசையான அவர்களை உரிய நாளிலேனும் வணங்கி வழிபடச் சொல்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை உண்டு. எல்லா அமாவாசையிலும் முன்னோர்களை வணங்கவேண்டும். மிக முக்கியமாக, மூன்று அமாவாசைகளில் முன்னோர்களை மறக்காமல் வழிபாடு செய்து ஆராதிக்க வேண்டும். தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளும் உன்னதமான, மிகுந்த சாந்நித்தியமான நாட்கள் எனப் போற்றப்படுகின்றன.

இறந்து போன நம் முன்னோர்களின் திதி நாளில், சிராத்த காரியங்களைச் செய்கிறோம். பெரும்பாலானோர், இத்துடன் நின்றுவிடுகிறார்கள். ஆனால், பித்ருக்களை நினைத்து ஒருவருடத்தில் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, ஒவ்வொரு அமாவாசை, கிரகண காலங்கள், புரட்டாசி மாதத்தின் அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்கள், திதி நாள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என அறிவுறுத்துகின்றனர் ஆச்சார்யர்கள்.

அமாவாசை நாளில், நம் முன்னோர்களின் ஆத்மாக்கள், நம் பெயர் சொல்லி, கோத்திரம் சொல்லி, நமக்கு எள்ளும் தண்ணீரும் அர்க்யம் செய்து, தர்ப்பண காரியங்களை சந்ததியினர் செய்கிறார்களா என்று பார்க்கும். அப்படிச் செய்தால், மகிழ்ந்து நமக்கும் நம் குடும்பத்துக்கும் சந்ததியினருக்கும் ஆசிகளை வழங்கிச் செல்லும் என விவரிக்கின்றன சாஸ்திர நூல்கள்.

அப்படி சரிவர பித்ருக்களுக்கான நம் கடமைகளைச் செய்யாமல் இருப்பதைத்தான் பித்ரு தோஷம் என்றும் பித்ருக்களின் சாபம் என்றும் ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அமாவாசை நாளில், பித்ருக்களை வணங்குவது மிக மிக அவசியம். ஆடி அமாவாசை நன்னாளில், மறக்காமல் நம் வீட்டைச் சுத்தப்படுத்தி, முன்னோர்களின் படங்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு, பூக்களால் அலங்கரித்து, நம் மூதாதையர்களின் பெயர் சொல்லி மூன்று மூன்று முறை, எள்ளும் தண்ணீரும் விட்டு, பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான உணவை நைவேத்தியமாகப் படையலிட வேண்டும்.

இன்று (ஜூலை 28) ஆடி அமாவாசை. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையும் கூட. நம் முன்னோர்களும் குருவுக்கு நிகரானவர்கள்தான். இந்தநாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களை வழிபடுவோம். அவர்களை நினைத்து, வீட்டுப் பூஜையறையிலும் நிலை வாசற்படியிலும் விளக்கேற்றி அவர்களை மனதார ஆராதிப்போம். நம் குடும்பத்தின் கஷ்டங்கள் நீங்கும். மனதின் கவலைகள் காணாமல் போகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். ஆரோக்கியமும் அமைதியுமாக ஆனந்தமாக நம்மை வாழச் செய்வார்கள் முன்னோர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE