பெருமாளுக்கு ‘அப்பம்’ கொடுத்தால் சாபம் நீங்கும்!

By வி. ராம்ஜி

அப்பம் நைவேத்தியம் செய்து அப்பக்குடத்தான் பெருமாளை வணங்கிப் பிரார்த்தித்தால், நம் சாபமெல்லாம் நீங்கும்; பாவமெல்லாம் விலகும் என்பது ஐதீகம்.

திருச்சி கல்லணையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இந்த ஊருக்கு அருகில் இருக்கிறது கோவிலடி எனும் கிராமம். இங்குதான் அற்புத திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் அப்பக்குடத்தான் பெருமாள்.

மூலவரின் திருநாமம் அப்பக்குடத்தான். உற்சவரின் திருநாமம் ஸ்ரீஅப்பால ரங்கநாதர். தாயாரின் திருநாமம் கமலவல்லி, இந்திராதேவி. நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஆலயம் என்றும் 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று என்றும் தல புராணம் விவரிக்கிறது.

உபமன்யு என்றொரு அரசன். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் துர்வாச முனிவருக்கு, உபமன்யு மீது ஆத்திரம் மூண்டதில் வியப்பில்லை. அந்தக் கோபத்தில் மன்னனுக்கு சாபமிட்டார் துர்வாசர். இதனால் தன் பதவியை இழந்தான். தேசத்தை இழந்தான். கெளரவத்தை இழந்து பரிதவித்து நின்றான் மன்னன். துர்வாசரிடமே சென்று, “என் சாபம் போக்கியருளுங்கள்” என வேண்டினான்

’’ ’பலசவனம்’ எனும் தலத்துக்குச் சென்று, அங்கே லட்சம் பேருக்கு அன்னதானம் செய். பாபவிமோசனம் கிடைக்கப் பெறுவாய்’’ என அருளினார் துர்வாச முனிவர். அதன்படி, அங்கே சென்ற மன்னன், தினமும் அன்னதானம் செய்துவந்தான். ஒருநாள்... ஏழை அந்தணர் வடிவில் பெருமாளே வந்தார். அன்னதானத்தை சாப்பிட்டார். ஆயிரக்கணக்கான பேருக்கு வைத்திருந்த உணவை அவரொருவரே சாப்பிட்டார். உணவுப் பாத்திரங்கள் அனைத்தும் காலியாகிவிட்டிருந்தன. மன்னனைப் பார்த்தார் அந்தணர். “வேறு ஏதேனும் வேண்டுமா?” எனக் கேட்ட மன்னனிடம், “அப்பம் கொடு” என்றார். உடனே அப்பம் தயாரிக்கப்பட்டது. குடம் முழுக்க அப்பம் நிரப்பி, அந்தணரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அரசரின் முன்னே பெருமாள் தோன்றினார். “உன் சாபமெல்லாம் நீங்கியது” என அருளினார்.

அந்த ‘பலசவனம்’ பின்னர் திருப்பேர் என அழைக்கப்பட்டு, இப்போது கோவிலடி என்று அழைக்கப்படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் பெருமாளுக்கு ‘அப்பக்குடத்தான்’ என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

பழைமையும் பெருமையும் மிக்க கோவிலடி அப்பால ரங்கநாதர் ஆலயத்துக்கு வந்து, அவரை கைதொழுதாலே நம் பாவங்களும் சாபங்களும் விலகும் என்பது ஐதீகம். அங்கே தரும் அப்பப் பிரசாதத்தைப் பெறுவதும் நாமே பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்யச் சொல்லி பக்தர்களுக்கு விநியோகிப்பதும் இன்னும் இன்னுமான நற்பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் அனுபவத்தில் கண்டவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE