மாத சிவராத்திரி; பிரதோஷம்; சிவ தரிசனம்

By காமதேனு

மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்து வரும் நன்னாளில், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மிகுந்த பலன்களை வழங்கக் கூடியது. நினைத்ததையெல்லாம் ஈடேற்றித் தருவார் ஈசன்.

மாதந்தோறும் சிவராத்திரியின் போது, நமசிவாயம் சொல்லி, சிவபுராணம் பாராயணம் செய்து, விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம்.

அதேபோல், ஒவ்வொரு அமாவாசைக்கு முன்னதான மூன்றாம் நாளும் பெளர்ணமிக்கு முன்னதான மூன்றாம் நாளும் பிரதோஷ வைபவமாகப் போற்றப்படுகிறது. பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று நந்தீஸ்வர பெருமானையும் சிவபெருமானையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், முன் ஜென்ம பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி நாளில், சிவலிங்கத் திருமேனிக்கு முக்கியத்துவமெனில், பிரதோஷ நாளில் நந்திதேவரே முக்கியமானவராகப் போற்றப்படுகிறார். முதலில், நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிறகு மூலவருக்கு அபிஷேக பூஜைகள் நடந்தேறும்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த வேளையில், அனைத்து சிவன் கோயில்களிலும் நந்திதேவருக்கும் சிவனாருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். அப்போது, நம்மாலான அபிஷேகப் பொருட்களை வழங்குவதும் நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மனக்குழப்பங்களைப் போக்கும்; வாழ்வில் கஷ்டங்களை நீக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை மாத சிவராத்திரி. பிரதோஷ நாளும் கூட. இந்த இரண்டு வைபவங்களும் சேர்ந்து வரும் அற்புதநாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்யுங்கள்; நந்தீஸ்வரரிடம் மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களையெல்லாம் தந்தருளுவான் ஈசன்.

மேலும், சிவனாருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் கூடியிருக்கும் நாள் இது. எனவே, சிவாலயம் செல்வதும் சிவனாரை தரிசிப்பதும் எண்ணிலடங்கா பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்! மகத்துவம் மிக்க நாளில் மகேசனை வழிபடுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE