வடபழனி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம்

By துரை விஜயராஜ்

சென்னை: வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேரோட்டம் நடக்கிறது.

வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

அதைத்தொடர்ந்து, மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது. பின்னர், சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது.

நேற்று (17-ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடும், 18-ம் தேதி(இன்று) யானை புறப்பாடும் நடந்தது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19-ம் தேதி (நாளை) காலை நடைபெறுகிறது. காலை 6 முதல் 7 மணிக்குள் பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து, இரவு ஒய்யாளி உற்சவமும், 20-ம் தேதி இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.

21-ம் தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான 22-ம் தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வயானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது.

தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. அதைத்தொடர்ந்து, துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது. மே 23-ம் தேதி இரவு விசேஷ புஷ்பப் பல்லக்கு புறப்பாடு சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது.

அதன்பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் 24-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை தினமும் மாலை நடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, வீணை கச்சேரி, இசைச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE