திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாசப்பெருமாள் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடந்து இன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி ரத வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனித்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறவுள்ளது. தினசரி இரவு சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம்,சேஷ, கருட, யானை வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெறவுள்ளது. ஜூலை 9ம் தேதி செவ்வாய்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 10-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி தெப்பஉற்சவமும், 14-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறவுள்ளது.
» வைகை ஆற்றிலிருந்து மீனாட்சி அம்மன் கோயில் பூஜைக்கு புனிதநீர்: 4 ஆண்டுக்குப் பின் மீண்டும் தொடக்கம்
» ஹஜ் பயணம் மேற்கொண்ட 326 பேர் சென்னை திரும்பினர்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு