`எங்களை விட்டுச் சென்ற 'மதுரவல்லி' யானையைப் போலவே இருக்கிறது'- மதுரை பக்தர்கள் நெகிழ்ச்சி

By மு.அஹமது அலி

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கொலுவுக்காக வைக்கப்பட்ட பொம்மை யானையை உயிரிழந்த 'மதுரவல்லி' என்ற கோயில் யானையைப் போல் பக்தர்கள் பார்த்துச் சொல்கின்றனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வாழ்ந்து வந்தது 53 வயதான 'மதுரவல்லி' என்ற யானை. சுமார் 44 ஆண்டுகளாக அக்கோயிலில் சேவையாற்றி வந்த நிலையில், சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக யானையின் கால்களில் புண் ஏற்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சையளித்தும், கடந்த 2016-ம் ஆண்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

இந்நிலையில், மதுரவல்லி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின், கோயிலில் நடைபெற்ற நவராத்திரி கொலுவுக்காக தனியார் நிறுவனம் ஒன்று பெரிய யானை பொம்மை ஒன்றை பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைத்தது. பின்னர் அந்த நிறுவனம் யானை பொம்மையை கோயிலுக்கே வழங்கிவிட்டது.

இந்நிலையில், அங்கு இருக்கக்கூடிய பொம்மை யானை பக்தர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "பெருமாள் கோயிலுக்குள் இருப்பது வழக்கமான யானை பொம்மை என்றாலும், அது கோயிலுக்குள் இருப்பதால், அப்படியே எங்களை விட்டுச் சென்ற 'மதுரவல்லி' யானையைப் போலவே இருக்கிறது" என்கின்றனர்.

யானை பொம்மைக்கு அருகே நின்று ஆர்வத்துடன் பெரியவர்களும், குழந்தைகளும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். 'மதுரவல்லி' இல்லாத குறையை கொலுவுக்காக வைக்கப்பட்ட யானை பொம்மை தீர்த்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE