ஜூன் 4-ம் தேதி வாஸ்து நாள்: வாஸ்து பகவானை வணங்குவோம்!

By வி. ராம்ஜி

வருகிற ஜூன் 4-ம் தேதியன்று வாஸ்து நாளாகப் போற்றப்படுகிறது. இந்தநாளில், இல்லம் முழுக்க தீப தூப ஆராதனைகள் செய்து வழிபட்டால், கடன் முதலான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

‘எத்தனை காசு பணம் இருந்தாலும் வாஸ்துப்படி அமையாத வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிலைக்காது’ என்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவான் என்று சொல்லப்படுகிற வாஸ்து புருஷனை நாம் ஆராதித்து குளிர்வித்து, மகிழ்விக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மனை வாங்குவதற்கும் மனையில் அஸ்திவாரம் தோண்டுவதற்கும் முக்கியமான நாளாக வாஸ்து நாளும் நேரமும் சொல்லப்படுகிறது. புதிதாக ஆலயங்கள் அமைப்பதும் பன்னெடுங்காலமாக இருக்கின்ற கோயிலைப் புனரமைப்பதற்கும் கூட வாஸ்துநாளில் ஆரம்பிப்பது வழக்கம்.

வாஸ்து நாளில் நாம் தொடங்குகின்ற வீடு மனை முதலான இருப்பிடங்கள், நமக்கு விருத்தியைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ‘கை நிறைய சம்பளம் வாங்கினாலும் நிம்மதியில்லை, பத்துப்பேருக்கு சம்பளம் கொடுக்கிற தொழில் செய்தாலும் வளர்ச்சியில்லை’ என்பன முதலான புலம்பல்களும் வருத்தங்களும் பலரிடமும் இருக்கின்றன. வாஸ்துப்படி வீடு அமையாத நிலை, வாஸ்து புருஷனை முறைப்படி வணங்காத சூழல் என இருந்தால், வீட்டில் நிம்மதியும் அமைதியும் இருக்காது என்கிறது சாஸ்திரம்.

வருகிற ஜூன் 4-ம் தேதி வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழித்தது முதல் தாம்பூலம் தரித்துக் கொள்வது வரை உள்ள அற்புதமான நேரம். இந்தநாளில், வாஸ்து நேரம் என்பது காலை 9.58 முதல் 10.34 வரை. இந்த நேரத்தில் வாஸ்து பகவானை வழிபடலாம். காலையில் எழுந்ததும் வீட்டை முழுவதும் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

குறிப்பாக பூஜையறையையும், பூஜையறை மேடையையும் சுத்தப்படுத்தி, கோலமிட்டுக் கொள்ளுங்கள். நம்மால் முடிந்த பூக்களைக் கொண்டு, சுவாமி படங்களை அலங்கரித்துக் கொள்ளவேண்டும். முக்கியமாக, நம் முன்னோர்களின் படங்களுக்கும் குலதெய்வத்துக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்துக்கும் பூக்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

வாஸ்து நேரத்தில், பூஜையறை மட்டுமின்றி சமையலறை முதலான அனைத்து அறைகளுக்கும் தீப தூப ஆராதனைகள் செய்து, குபேர மூலை முதல் ஈசான்ய மூலை வரை என அனைத்துஇடங்களுக்கும் தூபமிட்டு வழிபடவேண்டும். காலை 9.58 முதல் 10.34 மணிக்குள் சர்க்கரைப் பொங்கல் அல்லது ஏதேனும் இனிப்பு கலந்த உணவை பிரசாதமாக நைவேத்தியம் செய்து நமஸ்கரித்துப் பிரார்த்தனை செய்தால், இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதியுண்டாகும்; ஆனந்தம் குடிகொள்ளும். கடன் முதலான பிரச்சினைகள் நிவர்த்தியாகும்; தொழில் விருத்தியடையும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சனிக்கிழமையன்று காலை 9 முதல் 10.30 மணி வரை ராகுகாலம். சனீஸ்வர பகவானுக்கு உரிய நாளும் கூட. எனவே, கோதுமையாலான உணவை நைவேத்தியமாகப் படைப்பதும் காகத்துக்கு வைத்துவிட்டு அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் கண் திருஷ்டி முதலானவற்றைப் போக்கும் என்பது ஐதீகம்.

வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வணங்குவோம்; ஆராதிப்போம்; மனதாரப் பிரார்த்தனை செய்வோம்; வளமும் நலமும் பெறுவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE