கனகசபை மீதேறி நடராஜரைத் தரிசித்து தேவாரம் பாடிய பக்தர்கள்!

By கரு.முத்து

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை நிறைவேற்றும் விதமாக இன்று மாலை ஏராளமான பக்தர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கனகசபை மீதேறி நடராஜரைத் தரிசித்து, தேவாரம் பாடி திரும்பினர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பொதுமக்கள் பக்தர்கள் ஏறி வழிபட தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தநேரத்தில் கோயிலில் எப்போதும்போல கனக சபையில் ஏறி வழிபட சென்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண்ணை தீட்சிதர்கள் வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர்.

தீட்சிதர்களின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தெய்வத் தமிழ் பேரவை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், சிவனடியார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எப்போதும் போல் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என கோயில் வாயிலில் பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பக்தர்கள் கூட்டம்

கோயிலுக்குள் ஊர்வலமாக வரும் பக்தர்கள்

இதன் விளைவாக கனகசபை மீது ஏறி அனைத்து தரப்பு மக்களும் வழிபடலாம் என தமிழக அரசாணை வெளியிட்டது. இன்று காலை அதன் விவரங்கள் வெளியான நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தீட்சிதர்களை அழைத்து அரசின் அரசாணை குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார். இதில் கலந்து கொண்ட தீட்சிதர்கள் "அரசாணை வெளியிடுவதற்கு முன் எங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. கோயிலில் அரசாணையை அமல்படுத்த காலஅவகாசம் வேண்டும். தற்போது கனகசபையில் வெள்ளி பூஜை பொருட்கள் உள்ளது. எனவே, தீட்சிதர்களைத் தவிர யாரையும் அனுமதிக்க முடியாது" என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் பேசிய கோட்டாட்சியர் 'அரசாணை வெளியிட்ட நேரத்தில் இருந்தே அது அமலுக்கு வந்து விட்டது. எனவே, அனைவரும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டும்' என்று உத்தரவிட்டார். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட தீட்சிதர்கள் சிலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று மாலையில் கோயில் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாசல்களில் கூடிய மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள், தமிழ் பேரவை, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், ஏராளமான பக்தர்களும் தேவாரம் பாடியபடி கோயிலுக்குள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.

கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேராக கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசித்தனர். அவர்களில் முன்பு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப்பட்ட ஜெயசீலா உள்ளிட்ட பலரும் தேவாரம் பாடி நடராஜரை வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE