குமரியில் வெட்டவெளியில் நிறுத்தியிருப்பதால் சேதமடையும் பகவதியம்மன் கோயில் தேர்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தேர் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருப்பதால் வெயில், மழை மற்றும் உப்புக் காற்றால் சேதமாகி வருகிறது. தேரை சுற்றி கண்ணாடி கூண்டுடன் கூடிய கூடாரம் அமைக்க இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆன்மிகவாதிகள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி திருவிழா ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வைகாசி விசாகத் திருவிழாவில் பகவதியம்மனை தேரில் எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெறும். பாரம்பரிய மர சிற்பங்களை கொண்டுள்ள இந்த தேரை பழமை மாறாமல் காப்பது அவசியம்.

ஆனால் கடந்த வைகாசித் திருவிழா தேரோட்டத்துக்கு பின்னர் தேரை பாதுகாப்பின்றி திறந்த வெளியில் நிறுத்தி வைத்துள்ளனர். கோயில்களில் உள்ள தேர்களை நாள்தோறும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தேர்களைச் சுற்றி கண்ணாடி கூண்டு மற்றும் பாதுகாப்பு கூரை இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் தேர்களுக்கு கண்ணாடி கூண்டுடன் கூடிய கூரை அமைக்கப்பட்டது.

ஆனால் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தேரைச்சுற்றி ஏற்கெனவே இருந்த தகரத்தாலான கூரை வைகாசி திருவிழா தேரோட்டத்துக்காக பிரிக்கப்பட்டது.

கண்ணாடி கூண்டுடன் நவீன மேற்கூரை அமைக்க ஏற்பாடு நடந்து வருவதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் திருவிழா முடிந்து ஒன்றரை மாதம் ஆன பின்னரும் கீழரதவீதியில் வெட்ட வெளியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கனமழை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்து தேர் சேதமடைந்து வருகிறது. மேலும் பலத்த வெயிலடிக்கும் நேரத்தில் தேரில் உள்ள வர்ணங்கள் வெளிறி வருகிறது. கடற்கரை பகுதி என்பதால் உப்புக் காற்றில் பறக்கும் தூசி படர்ந்து தேர் அசுத்தமடைந்து காணப்படுகிறது.

உப்புக் காற்று நேரடியாக படுவதால் தேரில் உள்ள மர மற்றும் இரும்புச் சட்டங்கள் சேதமடைந்து வருகிறது. எனவே தேருக்கு கண்ணாடி கூண்டுடன் கூடாரத்தை தாமதமின்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘‘பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில் தேருக்கு அறநிலையத்துறை சார்பில் கண்ணாடி கூண்டுடன் நவீன கூடாரம் அமைப்பதை வரவேற்கிறோம். அதே நேரம் இப்பணியை தாமதமின்றி தொடங்கவேண்டும். தொடர்ந்து அலட்சியம் காட்டினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேருக்கு நவீன கூடாரம் அமைக்கும் பணியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தேருக்கு சேதம் ஏற்படாதவாறு பணி தொடங்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE