அருள்தரும் சக்தி பீடங்கள் – 20

By கே.சுந்தரராமன்

அம்மனின் சக்தி பீட வரிசையில் காஷ்மீர் மகாமாயை கோயில் முக்கிய திருத்தலம். தாட்சாயணியின் கழுத்துப் பகுதி, இங்கு விழுந்ததால், இத்தலத்தில் மகாமாயை என்ற பெயரைத் தாங்கி பக்தர்களுக்கு தேவி அருள்பாலிக்கிறார்.

அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் போர் நிகழும்போது, இரு தரப்பினரும் பல்வேறு மாய வித்தைகளை செய்வது வழக்கம். மாய வடிவங்களை ஏற்று எதிர் அணியினரை குழப்புவது நடைபெறும். மாயை என்றால் நிலையில்லாதது என்று பொருள் கொள்ளலாம். நிலையில்லாதவை நிலையானவை போல் காட்சி அளிக்கும். தன்னுடைய உண்மையான வடிவத்தை மறைத்து, வேறு வடிவத்தைத் தாங்குவதற்கும் மாயை என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

ஆதிபராசக்தியாகிய அன்னையும் பல்வேறு வடிவங்களை ஏற்று, பல்வேறு பெயர்களைத் தாங்கி பல்வேறு இடங்களில் அருளாட்சி புரிகிறார். அதன் காரணமாகவே இத்தலத்து தேவிக்கு மகாமாயை என்று பெயர் ஏற்பட்டது.

தல வரலாறு

இப்போது ஜம்மு, காஷ்மீர் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் முன்னர் ஓர் ஏரி இருந்துள்ளது. அந்த ஏரியின் அழகைக் கண்ட பார்வதி தேவி, இங்கு பரிசல் ஓட்டிய சமயத்தில், ஓர் அசுரன் பாம்பு வடிவத்தில் வந்து அவர் மீது நச்சுக் காற்றைப் பரவச் செய்துள்ளான். அசுரனின் எண்ணத்தை உணர்ந்த பார்வதி தேவி ஒரு கல்லை எறிந்து, அவனை மாய்த்துள்ளார்.

அசுரனை அழித்த இடமே தற்போது ஹரிபர்வதம் என்று அழைக்கப்படுகிறது. ஏரியாக இருந்த இடத்தை, முனிவர் ஒருவர், பெரிய நந்தவனமாக மாற்றியுள்ளார். அந்த நந்தவனமே இன்றைய காஷ்மீர். கிறிஸ்து பிறப்பதற்கு, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ராஜ நாராயணன் என்ற அரசர், காஷ்மீர் நகரத்தை உருவாக்கியதாக வரலாறு தெரிவிக்கிறது. ராஜ தரங்கினி என்ற நூல் இத்தகவல்களை எடுத்துரைக்கிறது.

ஆதிசங்கரர் காஷ்மீரை ஸ்ரீசக்கர வடிவத்தில் அமைத்ததால், ஸ்ரீநகர் என்ற பெயர் வந்தது. காஷ்யப் முனிவர் வாழ்ந்த இடம் என்பதால், இவ்விடத்துக்கு காஷ்மீர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமாலுக்கு சக்கரம் வழங்கல்

அன்னை இங்குள்ள கோயில்களில் பலவிதப் பெயர்களைத் தாங்கி அருள்பாலிக்கிறார். அன்னபூரணி என்ற பெயருடன் கமலேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார். இங்கு அன்னையின் சந்நிதியில் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது.

இத்தலத்தில் ஒருசமயம் திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சனை செய்யத் தொடங்கினார். அப்போது அதில் ஒரு மலர் மறைக்கப்பட்டது. அந்த மலருக்குப் பதிலாக, தன் கண்களையே எடுத்து அர்ச்சிக்க முற்பட்டார் திருமால். உடனே சிவபெருமான் அவரது அன்பை மெச்சி, சுதர்சன சக்கரத்தை அருளினார். இந்த சம்பவத்தால் திருமாலுக்கு, ‘கமலக்கண்ணன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

திருமாலின் காக்கும் தொழிலுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சக்கரம் வழங்கப்பட்ட இடம் என்பதால், இத்தலம் சிறப்பு பெறுகிறது. அன்னையின் கருணையும், அப்பனின் கருணையும் இணைந்து அளிக்கப்பட்ட இச்சக்கரத்தின் வாயிலாக, அக்கிரமங்களைப் புரிந்த அசுரர்களை வீழ்த்தினார் திருமால். அதனாலேயே தேவியின் சந்நிதியில் இந்த சக்கரம் வைக்கப்பட்டுள்ளது.

அன்னையின் பெயர்கள்

காஷ்மீர் நகரத்தில் மகாவித்யா, கங்கா, மாதா, கவுரி சங்கர், ஸ்ரீராஜ ராஜேஸ்வரி வடிவங்கள் காணப்படுகின்றன. தேவியே இப்பெயர்களைத் தாங்கி அருள்பாலிக்கிறார். இங்கு காணப்படும் கோயில்களில் அன்னையின் சக்தி நிறைந்திருப்பதாக அறியப்படுகிறது. தேவி படகு சவாரி செய்வதற்கு முன்பே தாட்சாயணியின் உடற்கூறு இங்கு விழுந்திருக்கிறது. நீரின் வடிவில் அன்னை காட்சியளித்த காலத்தில், ஏரியாக இப்பகுதி கருதப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு

அன்னபூரணி சந்நிதியின் கிழக்குப் பிரகாரத்தில் கணபதி அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் இத்தலத்தில் விளக்கேற்றி வழிபட்டால், குழந்தை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு மரத்தால் ஆன நந்தீஸ்வரர், தாமிரக் கவசம் அணிந்து காணப்படுகிறார். இங்குள்ள மிகப் பெரிய யாக குண்டத்துக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இத்தலத்துக்கு அருகே கிங்கிணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பாண்டவர்கள், கானகத்தில் இருந்தபோது, அர்ஜுனன் பாசுபதம் பெறுவதற்காக தவம் இருந்தான். அன்னை வேடுவச்சி வேடம் தாங்கி, அர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்கினார். கமலேஸ்வரர் கோயில் பகுதியில் பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்டுள்ளதால், அன்னையின் சக்தி இத்தலத்தில் கூடுதலாக இருப்பதாக அறியப்படுகிறது.

தட்சிண காளி

கமலேஸ்வரர் கோயிலில் இருந்து 18 கிமீ தொலைவில் தட்சிண காளி கோயில் அமைந்துள்ளது. எப்போதும் காளி, கோபத்துடன் இருப்பதாக அறியப்பட்டாலும், அவரது கோபம் நியாயத்தின் அடிப்படையில் பிறப்பதால், பக்தர்களுக்கு அவர் மீது பயம் இருக்காது. அவரது கருணையே முக்கியமாகக் கருதப்படுகிறது.

உலக உயிர்கள் அனைத்துக்கும் தாயாக விளங்குபவர், நல்ல உள்ளம் படைத்தோரை வாழ வைக்கிறார். அவர்களுக்கு மேலும் பல வரங்களை அளித்து வாழ்க்கையில் உயர வைக்கிறார். அல்லனவற்றை செய்யும் தீயோருக்கு பத்ரகாளியாக காட்சியளித்து, அவர்களுக்கு பாடம் கற்பித்து, அவர்களை நல்வழிபடுத்துகிறார். அவர்களும் வாழ்க்கையில் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கிறார்.

பிற கோயில்கள்

தட்சிண காளியின் சந்நிதியில் இருந்து 24 கிமீ தொலைவில் மார்த்தாண்டர் கோயில் அமைந்துள்ளது. சூரிய பகவானுக்காக கட்டப்பட்ட கோயிலாக இது விளங்குகிறது. இக்கோயில் கருவறை மொட்டையாகக் காட்சியளிக்கிறது. இக்கோயிலில் அமைந்துள்ள 84 தூண்கள், சிறப்பான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

ஸ்ரீநகர் அருகே அமைந்துள்ள ஹரி பர்வதத்தில் தேவிக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த மலைக் கோயில் தெய்வீகம் நிறைந்ததாக கருதப்படுவதால், பண்டிதர்கள், பெண்கள் தினமும் இம்மலையை வலம் வருகின்றனர். இது கிரிவலம் சுற்றும் புண்ணியத்தைத் தேடித்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அசுரனை அழித்த அம்மனே இக்கோயிலில் வீற்றிருப்பதால், எவ்வித நச்சுக் காற்றும் அணுகாது எவ்வித தீங்கும் தங்களை அண்டாது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

சங்கராச்சாரியார் மலை

அன்னையின் கோயிலுக்கு அருகில் சங்கராச்சாரியார் மலை உள்ளது. கிஸ்டி என்ற படகு மூலமாக இம்மலைக்குச் செல்லலாம். மலையடிவாரத்தில் துர்கநாத ஆசிரமம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் இந்த மலையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததால் அவருடைய பெயரால் இந்த மலை அழைக்கப்படுகிறது.

ஒருசமயம் ஆதிசங்கரர் தனது சீடர்களுடன் இம்மலைக்கு வந்தார். அப்போது சில நாட்கள் ஆகியும், பண்டிதர்கள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. இதனால் உணவு ஏதும் கிடைக்காமல் ஆதிசங்கரர் மற்றும் அவரது சீடர்கள் தவித்தனர். சில நாட்கள் கழித்து, ஆதிசங்கரரையும் சீடர்களையும் காண பண்டிதர்கள் வந்தனர்.

“இத்தனை நாள் கழித்து வந்தால், விருந்தாளிகள் உணவுக்கு தவிக்க மாட்டார்களா?” என்று அவர்களை வினவினார் ஆதிசங்கரர். அதற்கு பண்டிதர்கள், “எங்கள் இடத்துக்கு வந்திருந்தால், உபசரித்திருக்கலாம். நீங்கள் அனைவரும் வெகு தொலைவில் உள்ள இந்த இடத்தில் தங்கியிருப்பதால், எங்களால் வந்து உபசரிக்க இயலவில்லை. நீங்கள் அனைவரும் ஞானிகள், யோகிகளாக இருப்பதால், உங்களுக்கு தேவையானவற்றை வரவழைத்துக் கொண்டிருக்கலாமே?” என்று கேட்டனர்.

அதற்கு ஆதிசங்கரர், “உலகம் மாயையால் சூழ்ந்துள்ளது. உண்மைபோல் தோற்றம் பெற்றுள்ளது. அதனால் நாங்கள் ஏன் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டும்?“ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பண்டிதர்கள், “இந்த உலகம் பொய்யானது அல்ல. மெய்ஞானம் உலகத்தை பொய்யானது என்று ஒதுக்குவது இல்லை. முத்தொழில்களை செயல்படுத்துவதற்காக, அன்னை இந்த இடத்தில் அருளாட்சி புரிகிறார்” என்று கூறி ஓரிடத்தைத் தொட்டனர். அந்த இடத்தில் இருந்து நீர் வெளிப்படுவதைக் கண்ட ஆதி சங்கரர், “இந்த இடம் அன்னையின் சக்தியால் இயங்குகிறது. அனைத்தையும் மகாமாயை இயக்குகிறார்” என்றார்.

மகாமாயை மகிமை

மகாமாயை அன்னை சக்தியின் வடிவமாக போற்றப்படுகிறது. துர்கா தேவி, மாகாளியின் சக்திகளைக் கொண்டு இயங்கும் வடிவம். மாயா என்ற வார்த்தைக்கு அளவீடு என்ற பொருள் உண்டு. மேலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி என்றும் பொருள் உண்டு. மகாமாயை என்பது சக்தி தேவியின் கற்பனைக்கு எட்டாத குணங்களை, பொருள், ஆற்றல், வடிவம், உருவாக்கம், காத்தல், அழித்தல் போன்றவற்றை விளக்குகிறது. அவளது சக்தியைக் காண இயலாது. உணர மட்டுமே முடியும்.

அனைத்துக் கடவுள்களின் ஆற்றலில் இருந்து மகாமாயை தோன்றியதாக தேவி மகாத்மியம் உரைக்கிறது. மகிஷனை அழித்தபோது துர்கா தேவியாக அருள்பாலித்தார். ஜம்மு, காஷ்மீர், கேரளா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மகாமாயை வழிபாடு நடைபெறுகிறது. மகாமாயையின் வடிவம் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறது. ஆனால், அவரின் சக்தி ஒன்றே. சக்தி வடிவங்களில் மகாமாயா காளிகா, மகாமாயா காமிகா வடிவங்களும் உண்டு. சக்தியின் கருணையை அளவிட முடியாது. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. கற்பனைகூட செய்ய முடியாத, விளக்க முடியாத சக்தியாகும்.

ஸ்லோக பலன்

தேவி மஹாத்மியத்தில் இருக்கும் 700 ஸ்லோகங்களின் சாரமாக ‘ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி’ உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முக தீபத்தை ஏற்றி தேவியை பூஜித்து, ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகியை மூன்று முறை சொல்லி வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்துடன் லட்சுமி அஷ்டோத்திர அர்ச்சனையும் செய்தால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது பெரியோர் வாக்கு. தீபத்தை கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ ஏற்ற வேண்டும். தேவி மகாத்மியம் துதியை முறைப்படி கற்று பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE