கும்பத்திலிருந்து மீனத்துக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்

By காமதேனு

இதுவரை கும்ப ராசியில் இருந்து வந்த குருபகவான் இன்று அதிகாலை மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனை ஒட்டி திருவாருர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் பிரசித்திபெற்றது. சமயக் குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இந்த ஆலயத்தில் குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. குரு பகவானுக்கு உரிய தலமாக இது பக்தர்களால் வழிபடப்படுகிறது.

நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. குரு பெயர்ச்சி தினமான இன்று அதிகாலை 4.36 மணிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதையொட்டி குரு பகவானுக்கு ராஜ அலங்காரம் செய்விக்கப்பட்டு பஞ்சமுக தீபம் காட்டப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர். குருபெயர்ச்சி நாளில் குரு பகவானின் தரிசனம் செய்ய நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தார்கள். கும்பகோணம், ஆலங்குடி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE