தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை!

By கரு.முத்து

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்களால் அனுமதி மறுத்து வரும் நிலையில், இதைக் கண்டித்து சிதம்பரம் நகரில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னிதி அமைந்திருக்கும் சிற்றம்பல மேடை எனப்படும் கனகசபையில் பக்தர்கள் ஏறிச் சென்று நடராஜரை வழிபடுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டியும், கீழிருந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறியும் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சியினர், ஆன்மிக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

கனகசபையில் ஏறி தேவாரம் பாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அதிகாரம், தெய்வத் தமிழ்ப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த காலங்களில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தின. இன்னும் சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், சிதம்பரம் நகரில் கோயிலுக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் ஒரு மாத காலத்திற்கு நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சினைகள் காரணமாக அரசின் அடுத்த முடிவு குறித்து சட்ட வல்லுனர்களால் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோயில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள், மற்றும் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE