தெய்வம் போல..

By கே.சுந்தரராமன்

நமக்கு ஏதேனும் ஆபத்து சமயத்தில் யாராவது உதவி செய்தால், நாம் அவர்களிடம், “ தெய்வம் போல வந்து காப்பாற்றி விட்டாய்” என்று கூறி நன்றி தெரிவிப்போம். அதுபோல தியாகராஜர் வாழ்க்கையிலும் சிற்சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்..

தினமும் ராமபிரானை நினைத்து கீர்த்தனைகளை இயற்றி வந்த தியாகராஜருக்கு வறுமையான சூழல். அதை அவர் பெரிதாக நினைப்பதில்லை. ராம நாமத்தையே பருகியதால் அவருக்கு பசியும் மறந்துவிட்டது.

ஒருசமயம் இல்லத்துக்குள் அமர்ந்து ராமபிரான் மீது கீர்த்தனை பாடிக் கொண்டிருக்கும்போது, யாரோ வாசலில் இருந்து குரல் கொடுப்பது கேட்டது. வெளியில் வந்து பார்த்தால், ஒரு வயோதிகர், அவரது மனைவி மற்றும் ஒரு நபர் வந்திருந்தனர். வெகு தூரத்தில் இருந்து வந்ததால் மிகவும் களைப்புடன் இருந்தனர்.

தியாகராஜர் அவர்களை இல்லத்துக்குள் அழைத்துச் சென்றார். அங்கு அமர்ந்த வயோதிகர், “நாங்கள் வடக்கில் இருந்து வருகிறோம். பல தலங்கள் சென்று தரிசித்தோம். நாளை ராமேஸ்வரம் செல்லவிருப்பதால், இன்று இங்கு தங்கிக் கொள்ளலாமா? நாளை காலை கிளம்பி விடுவோம்” என்றார்.

தியாகராஜரும் அதற்கு சம்மதித்தார். அவர்களுக்கும் சேர்த்து இரவு சமைக்குமாறு மனைவியிடம் கூறினார். மனைவியும் சரி என்று கூறினார். ஆனால் இல்லத்தில் அரிசி இல்லாததால், பக்கத்து இல்லத்தில் இருந்து அரிசி வாங்கி வரப் புறப்பட்டார்.

ஆனால் அந்த வயோதிகர், “சமைக்க வேண்டாம், எங்களிடம் தினை மாவு உள்ளது, அதையே ரொட்டியாகத் தயாரித்து அனைவரும் உண்டு விடலாம்” என்று கூறினார்.

அனைவரும் உண்ட பின், நீண்ட நேரம் வயோதிகரும் தியாகராஜரும் உரையாடிக் கொண்டிருந்தனர். பொழுது விடிந்து விட்டதை உணர்ந்து, விருந்தினர் காவிரியில் நீராடி விட்டு, அப்படியே பயணத்தை மேற்கொள்வதாகக் கூறி கிளம்பினர்.

அவர்களை வழியனுப்ப வாசலுக்கு வந்த தியாகராஜர், அவர்கள் யார் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், கிளம்பியவர்கள் சற்றே திரும்பி, வில்லேந்திய ராமபிரான், அருகே சீதாபிராட்டி, ஹனுமனாகக் காட்சி தந்தனர்.

தியாகராஜருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன் இல்லத்துக்கு வந்தது ராமபிரானும் பிராட்டியும் ஹனுமனும் என்று நினைக்கும்போது, ஏற்பட்ட மகிழ்ச்சியில், அவர்களுடன் உண்டது, இரவு முழுவதும் ராமபிரானிடம் பேசியது எல்லாம் மனதில் வந்து சென்றது. ராமாயணக் காட்சிகளை மனதில் இருத்திக் கொண்டார்.

உற்சாகத்தில், ‘சீதம்ம மாயம்மா’ என்ற கீர்த்தனையைப் பாடினார்.

தெய்வம் போல வந்து காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறலாம், அந்த தெய்வமே தாய், தந்தையாக, உறவினராக வந்து அருள்பாலித்தால், உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்தவே இயலாது.

ராம ராம..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE