இடம் மாறுகிறது மதுரை சித்திரை பொருட்காட்சி

By காமதேனு

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்துவந்த சித்திரை பொருட்காட்சி இந்தாண்டு, வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.

கோயில் நகரான மதுரையில் ஆண்டு முழுக்க திருவிழாக்கள் நடைபெற்றாலும், அத்தனை விழாக்களுக்கும் சிகரமாகத் திகழ்வது சித்திரைத் திருவிழா. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா வருகிற ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் உச்சமாக ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிவார்கள்.

இதையொட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுரையில் அரசு பொருட்காட்சி நடைபெறும். சித்திரை திருவிழாவோடு திருவிழாவாக நடத்தப்படுவதால், இந்த பொருட்காட்சிக்கு சித்திரைப் பொருட்காட்சி என்றே பெயர்.

இந்த பொருட்காட்சி ஆண்டுதோறும் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானத்தை, மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட வாடகை நிர்ணயித்து சித்திரைப் பொருட்காட்சி நடத்துவதற்கென மாவட்ட நிர்வாகத்திற்கு வாடகைக்குவிடும். திருவிழாவுக்கு வரும் மக்கள் இந்த பொருட்காட்சியை கண்டுகளிப்பதுடன், அங்குள்ள விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி மகிழ்வார்கள்.

இந்நிலையில் தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் சென்னை வர்த்தக மையம் ரூ.45.55 கோடியில் வர்த்தக மையம் அமைக்கும் பணி நடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடக்கும் இந்தப் பணியானது 2 ஆண்டுகளாக நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் இந்தாண்டு சித்திரை பொருட்காட்சியை தமுக்கம் மைதானத்தில் நடத்த முடியாத நிலை இருப்பதால், அதற்குப் பதிலாக மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் காலி இடத்தில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள இந்த இடத்தை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கின.

வழக்கமாக சித்திரை பொருட்காட்சியானது, அழகர் எதிர்சேவை நடைபெறும் தல்லாகுளம் அருகிலேயே நடைபெறுவதால் களை கட்டும். இந்தாண்டு அதற்குச் சம்பந்தமே இல்லாத மாட்டுத்தாவணி அருகே நடப்பதால், எந்தளவுக்கு வெற்றிகரமாக நடக்கும் என்று தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE