மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

By பெ.ஜேம்ஸ் குமார்

மாங்காடு: மாங்காட்டில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் உப கோயிலான வெள்ளீஸ்வரர் கோயிலும் இதே பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். தொண்டை மண்டல நவகிரக தலங்களில் சுக்கிரன் பரிகார தலமாக இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளீஸ்வரர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இந்த நிலையில் ஏழாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இன்று காலை மாங்காட்டில், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வெள்ளீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் தேரை வடம் பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

குன்றத்தூர் - மாங்காடு சாலை மற்றும் கோயிலின் முக்கிய நான்கு மாட வீதிகளின் வழியாக தேரோட்டம் நடந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வெள்ளீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE