புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு!

By காமதேனு

கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு இன்று நடக்கிறது. கரோனாவால். இந்த ஆண்டு அவரவர் வீடுகளில் பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் நடைபெறும் பொங்கல் விழாவில், ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ்பெற்றதுடன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்து வருகிறது.

தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கடந்த ஆண்டைப்போல், பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றியோ, பொது இடங்களில் கூட்டமாகவோ பொங்கல் படைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது. தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரிப்பாடு ஸ்ரீ கோயிலில் இருந்து விளக்கில் தீபம் எடுத்துவந்து மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியிடம் கொடுப்பார்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல்

அதை கோயில் முற்றத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்டார அடுப்பில் பற்றவைத்து, பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அப்போது அவரவர் வீடுகளில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள். மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். அப்போது கோயில் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூசாரிகள், வீடுகளுக்குச் சென்று பொங்கல் நிவேத்ய சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.

தொடர்ந்து மாலையில், சிறுவர்களின் குத்தியோட்டம், சிறுமிகளின் தாலப்பொலி அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கும். இவை அனைத்தும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று கோயில் அறக்கட்டளை தலைவர் பி.அனில்குமார் தெரிவித்துள்ளார். நாளை இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவையொட்டி இன்று பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் செயல்படாது என திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE