மருதோர் வட்டம் தன்வந்திரி கோயில்

By கே.சுந்தரராமன்

ஆழப்புழை மாவட்டம், சேர்த்தலா வட்டத்தில் உள்ள மருதோர் வட்டம் தன்வந்திரி கோயில் மிகவும் பெரிய கோயிலாகும். சேர்த்தலாவில் இருந்து 1 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும், இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீரும் என்பது நம்பிக்கை.

வயலார் கிராமத்தில் வசித்த ஒருவர் தீராத வயிற்று வலியால் துடித்தார். பல ஆண்டுகள் மருத்துவம் பார்த்தும் வலி தீரவில்லை. ஒருநாள் வைக்கத்தில் உள்ள வைக்கத்து அப்பன் சுவாமியிடம், மனமாற வேண்டினார். வலி சற்று குறைந்ததுபோல் இருந்தது. ஆனால், கோயிலைவிட்டு வெளியே வந்ததும் வலி வந்தது. அதனால் அன்றிரவு கோயிலிலேயே தங்கினார்.

அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், “இங்கிருந்து சேர்த்தலைக்குச் செல். அங்குள்ள கேளம் குளத்தில் நீருக்கு அடியில் 3 சிலைகள் கிடைக்கும். அதில் கிடைக்கும் முதல் சிலை மிகவும் சக்தி வாய்ந்ததால், அதைக் குளத்திலேயே விட்டுவிடவும். 2-வது சிலையை ஒருவருக்கு தானமாக கொடுக்கவும். 3-வது சிலையை நிறுவி வழிபட்டால், உன் வயிற்றுவலிக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்று அருளினார்.

அதன்படி அவரும் அங்கு சென்று, நீராடினார். சிவபெருமான் கூறியபடி 2-வது சிலையை (தன்வந்திரி விக்கிரகம்) வெள்ளூடு நம்பூதிரி என்ற ஆயுர்வேத வைத்தியரிடம் தானமாக அளித்தார். நம்பூதிரி தன்வந்திரி விக்கிரகத்தை தன் இல்லத்திலேயே வைத்து வழிபட்டார். பிறகு மண்மூசு என்பவரது உதவியுடன் கோயில் கட்டி, அதில் பிரதிஷ்டை செய்தார். நம்பூதிரியின் காலத்துக்குப் பிறகு, அடுத்த தலைமுறையினர், கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

மண்மூசு குடும்பத்தினர் அந்த விக்கிரகத்தில் உள்ள கையை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு வெள்ளூடு நம்பூதிரியின் குடும்பத்தில் வெள்ளியில் கை செய்து, அதை விக்கிரகத்தில் பொருத்தி, மருதோர் வட்டத்தில் கோயில் கட்டினர். அந்தக் கோயிலே தற்போது மருதோர் வட்டம் தன்வந்திரி கோயிலாகத் திகழ்கிறது.

மருதோர் வட்டம் தன்வந்திரி கோயில்

வட்ட வடிவமான கருவறையில் மேற்கு நோக்கி தன்வந்திரி அருள்பாலிக்கிறார். எதிரே கருடன் சந்நிதியும், பிரகாரத்தில் பகவதி, கணபதி, சாஸ்தா, சிவபெருமான் சந்நிதிகளும் உள்ளன. வெண்கலத்தால் செய்யப்பட்ட கொடிமரம் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

தினமும் தன்வந்திரி பகவானுக்கு மோர்க்குழம்பும் கீரைக் கூட்டும் நிவேதனம் செய்யப்படும். இந்தப் பிரசாதங்களை பக்தர்கள் உண்டால், தீராத வயிற்றுவலிக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

வல்லாரை இலை, மாந்தளிர், புளியோரை இலை, மிளகு, மல்லி, சீரகம், சுக்கு, ஓமம் போன்ற மருத்துவ குணம்கொண்ட பொருட்களை தயிரில் சேர்த்து மோர்க்குழம்பு தயாரிக்கப்படுகிறது. உப்பு, புளி, மிளகு, கொத்தமல்லி விதை சேர்த்து கீரை பொறியல் / கூட்டு தயார் செய்யப்படுகிறது. வைக்கம் மகாதேவருக்கும் இதுவே பிரசாதம் ஆகும்.

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச திரயோதசி (பவுர்ணமிக்குப் பிறகு வரும் திரயோதசி) ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தன்வந்திரி ஜெயந்தி விழாவில், கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரிக்கப்பட்ட அவலேகம் (அல்வா) நைவேத்தியம் செய்யப்படும். இதனாலேயே தீபாவளிக்கு அல்வா தயார் செய்யும் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. தீபாவளி லேகியம் செய்யும் பழக்கமும் தன்வந்திரி வழிபாட்டில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE