‘தான்’ தான் எல்லாம்!

By யாழன் ஆதி

புத்தரின் போதனைகளில் ’சுத்த நிபாதம்’ என்னும் ஒரு புத்தகம் இருக்கிறது. அது குத்தக நிகாயத்தில் இருக்கிறது. அந்நூலில் உள்ள ‘ஆலவக் சுத்தம்’ என்பதில் ஆலவகன் என்போன் கேள்விகள் கேட்க அதற்கு புத்தர் பதிலளிப்பார்.

மனிதனுக்குச் சிறந்த செல்வம் எது?

திடநம்பிக்கையே சிறந்த செல்வம்.

எதை நன்கு பயின்றால் மகிழ்ச்சிக் கிடைக்கும்?

அறத்தைப் பயில்வதே மனிதனுக்கு சிறந்த அறத்தைத் தரும்.

சுவைகளுள் சிறந்த சுவை எது?

வாய்மை என்னும் சுவையே சுவைகளில் சிறந்தது.

எப்படி வாழ்ந்தால் அதை சிறந்த வாழ்க்கை என்பார்கள்?

மெய்ஞானத்தோடு வாழ்கிற வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பார்கள்.

இப்படி கேள்வி-பதில்கள் போய்க்கொண்டே இருக்கும். புத்தர் மானுட மீட்சிக்கான பதில்களைக் கூறிக்கொண்டே இருப்பார்.

ஒருவர் தன்னை நேசித்து தன்னை நம்பி தன்விழிப்படைந்து தன்னை முழுமையாக உணர்வாரேயானால் அதுதான் நிறைவான வாழ்க்கை என்பதே தம்மபதத்தின் இந்த இயலின் அடிப்படை.

போதிக்கும் ஒருவர்

முதலில் அதன்படி நடக்க வேண்டும்

தன்னைக் கட்டுப்படுத்திய பிறகே

பிறரைக் கட்டுப்படுத்த முடியும்

இல்லையெனில் அது மிகக்கடினம் (தம்மபதம் 159)

பிறர் காப்பாற்ற முடியாது!

ஒருவருக்கு பாதுகாப்பு அவராகத்தான் இருக்கமுடியும். தீய எண்ணங்களிலிருந்து தீயச்செயல்களிலிருந்து தீய வாழ்முறைகளிலிருந்து ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். பிறர் வந்து காப்பாற்றுவார்கள் அதுவரை நாம் இப்படியே இருக்கலாம் என்று எண்ணுதல் கூடாது. யார் ஒருவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் பண்பு உடையவராக இருக்கிறாரோ அவரே யாராலும் தர முடியாத பாதுகாப்பு உடையவராக இருப்பார். இல்லை என்றால் அவரைக் காப்பாற்ற யாராலும் ஆகாது.

வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், புத்தர் வைரத்தை ஒருவருள் தோன்றும் தீமைக்கு ஒப்பிடுகிறார். தீமை ஒருவருக்குள் தோன்றி எங்கு தோன்றுகிறதோ அவரையே அது அழித்துவிடும் வைரத்தப் போல. தீமைகளற்ற வாழ்வு என்பது துன்பம் தராத வாழ்வு. நாம் செய்கிற தீமைகளால் பிறரும் சமூகமும் அடையும் துன்பம் அதிகம். பிறருக்குத் துன்பம் தருபவர்களுக்குத் துன்பம் தானாக வந்து சேரும்.

சால்மரத்தில் கொடிபடருவதைப் போலவே

தீயவர் தங்களுக்கே

தீங்கிழைத்துக்கொள்கின்றனர்

எதிரிகள் இழைப்பதைப் போலவே ( தம்மபதம் 162)

தனக்குத் தானே தீங்கிழைப்பது ஏன்?

யாராலும் ஆகாத செயல் தமக்குத் தாமே துன்பம் ஏற்படுத்திக் கொள்ளுதல். தன்னைத் தானே வெட்டிக்கொள்ளும் மரம் இந்த உலகத்தில் இல்லை. தன்னைத் தானே கடித்துக்குதறும் விலங்கு இந்த உலகத்தில் ஏது? ஆனால், மனிதன் மட்டும் தன்னுடைய செயல்களால் தானே தனக்குத் தீங்கை ஏற்படுத்திக்கொள்ளும் தன்மையுடன் இயங்குவது எங்ஙனம்?

அவ்வாறு தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளாமல் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியும் புத்தர் காட்டுகிறார். நற்செயல் செய்க. அப்படி நல்லனவற்றைச் செய்தல் என்பது மிகவும் அரிது. ஆனாலும் அதைச் செய்வதே சாலச்சிறந்ததாக இருக்கும். தீச்செயல் செய்யாமை எப்படி நன்மையோ அப்படியே நற்செயல் செய்வதும் ஒருவருக்கு நன்மையாகும்.

தன்னையே அழித்துக்கொள்ளும்

மூங்கில் பழங்களை ஒத்தவர்

அறவோரின் போதனைகளைப்

புறக்கணிக்கும்

தவறான பார்வையுடைய

அறிவிலிகள் (தம்மபதம் 164)

நன்மையைப் புரிய வேண்டும் என்றால் எது நன்மை, எது தீமை என்பன புரிந்திருக்க வேண்டும். அத்தகைய புரிதலுக்கு அறவோரின் போதனைகள் தேவைப்படுகின்றன. எது தம்மம், எது தம்மம் அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் ஒருவருக்கு முக்கியம். அப்படிப் புரிந்துகொள்ள முயலாமல் அறவோரின் போதனைகளைப் புறந்தள்ளினால் அவர்கள் தங்களையே அழித்துக்கொள்ளக் கூடியவர்களாகிவிடுவார்கள்.

அப்படியானால் ‘தான்’ தான் எல்லாம் என்னும் எண்ணத்திற்கு இங்கு எல்லோரும் வரவேண்டும். ‘தான்’ என்னும் கர்வத்துடன் அல்ல. நடக்கும் நன்மை தீமை ஆகிய எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம் என்னும் அடிப்படை அணுகுமுறை இருந்தால் எல்லாமே நன்மையானதாக இருக்கும். ஒருவரின் எண்ணங்கள் செயல்கள் ஆகியவைதான் அவரின் அழுக்கையும் தீமையையும் உருவாக்கும். ஒருபோதும் அது பிறரால் தூய்மையாக்கப்பட முடியாது என்பதை புத்தர் மிகத்தெளிவாக உணர்த்துகிறார்.

எனவே யாருக்காகவும் தம்மத்தை இழக்காதிருப்பதும், அத்தம்மத்தை அடைய தாமே பொறுப்பு என்பதை உணர்வதும் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

தன்னை நேசிக்கும் ஒருவர்

தன்னைக் காப்பார்

தானே விழிப்புடன் இருந்து

தன்னைக் காப்பவரே அறிவாளர் (தம்மபதம் 157)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
மீனற்ற குளத்தில் காத்திருக்கும் கொக்கு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE