அருள்தரும் சக்தி பீடங்கள் - 6

By கே.சுந்தரராமன்

அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இந்தியாவின் தென் எல்லையில் அமைந்துள்ள இத்தலத்தில், சில பவுர்ணமி தினங்களில் மாலை நேரத்தில் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும், முழுமதி கீழைக் கடலில் எழுவதையும் ஒரே சமயத்தில் காணலாம். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எந்நேரமும் போர் நிகழ்ந்துவந்தது. தேவர்களை அசுரர்கள் அடக்கி ஆண்டதால், தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்கியது. எங்கும் அறியாமையும் அநீதியும் தீமையும் பாவமும் நிறைந்து காணப்பட்டன. அசுரர் தலைவனான பாணாசுரன் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.

அப்போது பூமாதேவி பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் தேவர்கள் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும் என்று கூறுகிறார். மேலும், இதுதொடர்பாக அன்னை பராசக்தி உங்களுக்கு துணை இருப்பார் என்கிறார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த சக்திதேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.

அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.

சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.

அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் ‘வழுக்கம் பாறை’ என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார். பார்வதி தேவியும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தார்.

திருமணத்துக்கு ஏற்பாடான உணவுகளும் சீதனப் பொருட்களும் மணலாக மாறின. அரிசி போன்ற வெண்மணலும், வெவ்வேறு வண்ண மணலும் குமரிக்கடல் துறையில் மிகுந்து கிடப்பதை இன்றும் காணலாம்.

இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று தனது போர்வாளை வீசினார் பார்வதி தேவி. நீண்ட நேர போருக்குப் பின் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார் பார்வதி தேவி. தேவர்கள் அனைவரும் பார்வதி தேவிக்கு நன்றி தெரிவித்தனர். தேவர்களை வாழ்த்திய தேவி, மீண்டும் தன் தவத்தைத் தொடர்ந்தார்.

அன்னையின் தோற்றம்

தவக்கோலம் பூண்டு விளங்கும் குமரி தெய்வத்தின் கோயில் கடலோரமாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் கன்னியாகுமரி அம்மன். இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக அருள்பாலிக்கிறார். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது. காரிருளை அழிக்கும் வல்லமை தனக்கு உண்டு என்பதை குமரியன்னை, தன் பிறைமதியின் ஒளி மூலமாக அறிவித்தபடி இருப்பதாக நம்பிக்கை.

உயர்ந்த லட்சியத்துக்காக தவம் மேற்கொள்ளும்போது, அளவில்லாத வலிமைகள் தானாக வந்தடையும் என்பதற்கு ஏற்ப, தன் தவப்பயனால் வலிமை பெற்ற அன்னை, உலகம் முழுமைக்கும் தன் வலிமையை உணர்த்துபவராக இருக்கிறார்.

அன்னையின் மூக்குத்தி

பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது. அம்மனின் மூக்குத்தி ஒளியை கலங்கரை ஒளிவிளக்காக எண்ணி இரு கப்பல்கள் மோதிக் கொண்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

கோயில் அமைப்பு

கன்னியாகுமரி அம்மனின் கோயில் பிரகாரத்து தென்மேற்கு கோடியில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. அருகே, ஆறு தூண்களால் அமையப்பெற்ற மணி மண்டபம் உள்ளது. மண்டபத்தின் முன்னே சபா மண்டபம் உள்ளது. இரண்டாவது பிரகாரத்தில், குமரி அன்னை தினமும் பவனி வரும் வைபவம் நடைபெறும். இந்தப் பிரகாரத்தில் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. ‘குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை’ என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.

தென்கோடியில் காவல் அரணாக குமரியன்னை திகழ்கிறார் என்பதற்கு சான்றாக இந்த கன்னித் தீர்த்தம் விளங்குகிறது. கன்னித் தீர்த்தத்தில் நீராடி பிறைமதி சூடி தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் அன்னையை வழிபட்டால் வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றுவார் அன்னை என்பது நம்பிக்கை. அன்னையின் கருணை, அல்லல்படுவோரை அரவணைத்து காக்கும் வல்லமை கொண்டது.

தலச் சிறப்பு

முக்கடல்கள் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த இடமாக இருப்பதால், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், பவுர்ணமி நாட்களில் ஒரே நேரத்தில் மேற்கே சூரிய அஸ்தமனம் கிழக்கே முழுமதி எழுதல் ஆகிய சிறப்புகளைக் கொண்டது. முனிவர் பரசுராமரால் இக்கோயில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேதகாலம் முதலே தேவி வழிபாடு இருந்து வந்துள்ளது. மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன் ஆகிய பெயர்களைத் தாங்கி மூலவராக வீற்றிருக்கும் அன்னை, தியாக சவுந்தரி, பால சவுந்தரி ஆகிய பெயர்களுடன் உற்சவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. பக்தர்கள் கடற்கரையில் தங்கள் மூதாதையருக்கு பித்ருகடன் செலுத்துவதும் உண்டு. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தல், அம்மனுக்கு விளக்கிடுதல், புடவை சாற்றுதல், மக்களுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவற்றை செய்து பக்தர்கள், தங்கள் வேண்டுதல் பலிக்க நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்

“நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி” என்று பாரதியார் அன்னையைப் போற்றுகிறார். அரபிக் கடல், இந்து மாக்கடல், வங்காளக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமமாகி ஓர் உருவாக நின்று அன்னை பகவதியை தினம்தோறும் ஆராதிப்பதாகக் கூறப்படுகிறது. அன்னையின் திருவடியில் பாதபூஜைகளை செய்வது போன்று இந்த முக்கடல்களின் சங்கமத்துடன் கூடிய அலைகள், அன்னையை நோக்கி பணிந்து வருகின்றன. ‘தென்திசை குமரியோடியே வருவாள்’ என்று மணிமேகலை காப்பியம் குமரி தெய்வத்தைப் போற்றுகிறது.

‘இமய பொருப்பகத் தீரான் குறைத்தபின்

குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்

தரும யாத்திரை யெனத் தக்கினம் போற்துழி’ என்று பெருங்கதை இலக்கியமும் கன்னியாகுமரியைப் போற்றி உரைக்கிறது.

‘கங்கை யாடி லென் காவிரி யாடி லென்

பொங்கு நீர் குமரித்துறை யாடிலென்’ என்று அப்பர் பெருமான் தனது தேவாரத்தில் குமரிமுனையைப் போற்றுகிறார்.

தெப்பத் திருவிழா

திருவிழாக்கள்

புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும். அந்நாட்களில் தெப்போற்சவமும் தேரோட்டமும் நடைபெறும். இதில்லாமல் தினமும் காலையிலும் இரவிலும் தேவி வீதியுலாவும் இங்கு உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE