தில்லையில் சிதம்பர ரகசிய திரை விலகாதது ஏன்?

By கரு.முத்து

சைவர்களின் கோயில் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு, ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்பது சிவபக்தர்களின் வாழ்நாள் கனவு. ‘பொற்சபை’யான சிற்றம்பலத்தில் கால்பதித்து, அங்கு நாட்டியக்கோலத்தில் வீற்றிருக்கும் ஆனந்தநடராஜரை கண்குளிரக் காண்பதும், அறிதற்கரிதான சிதம்பர ரகசியத்தைக் கண்டுணர்ந்து நெகிழ்வதும் சிவத்தொண்டர்களின் பெருவிருப்பம். ஆனால் இப்போது, அப்படிப்பட்டக் கனவோடு வருகிறவர்கள் யாரும் சிற்றம்பலத்தில் ஏற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் யாருக்கும் சிதம்பர ரகசியம் காட்டப்படுவதில்லை என்பதும் சிவபக்தர்களின் பெருங்குறையாக இருக்கிறது.

நடராஜர், சிவகாமசுந்தரி

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்துக்குரிய ஸ்தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் விளங்குகிறது. சபாநாயகர் கோயில் என போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலை தில்லைவாழ் அந்தணர்கள் என்று கூறப்படும், பொது தீட்சிதர்கள் கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது. பலவித காரணங்களால் கடந்த 2006– 11-ம் ஆண்டு திமுக ஆட்சியில், இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், நீதிமன்ற மேல்முறையீடு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவால் மீண்டும் கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். தற்போது தீட்சிதர்களே கோயிலை முழுமையாக நிர்வகித்து வருகின்றனர்.

கோயில் உட்புறம்...

மீண்டும் கோயில் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததிலிருந்து தீட்சிதர்கள் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்தும், பலவித கட்டுப்பாடுகளை விதித்தும், பக்தர்களிடம் எல்லைமீறியும், நடந்துகொள்வதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விளக்கேற்றுவதில் வேதனை

கோயிலுக்குள் சரபேஸ்வரர், மார்க்கண்டேயர், நவக்கிரகங்கள் சந்நிதிகளின் முன்பாக பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தீட்சிதர்கள் அதற்கு தடைபோட்டு விட்டனர். டிஜிட்டல் பதாகையில் சாமி படங்களை அச்சிட்டு அதை கோயிலுக்கு வெளியே வைத்து, அங்கேயே விளக்கேற்றும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.

திறக்கப்படாத திட்டி வாசல்

கோயில் நடை சாத்தியிருக்கும் காலமான மதியம் 1 மணியில் இருந்து 4 மணி வரை, கோயிலின் நான்கு கோபுர வாசல்களும் மூடப்படும். ஆனால், அதில் உள்ள திட்டிவாசல்கள் திறந்திருக்கும். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று இளைப்பாறவும், ஒரு வீதியில் இருந்து மற்றொறு வீதிக்குச் செல்கிறவர்களும் திட்டிவாசலைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், இப்போது திட்டிவாசல் கதவுகளையும் முற்றிலுமாக அடைத்து விடுகிறார்கள். இதனால், காத்திருந்து தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் உட்காரக்கூட இடம் இல்லாமல், வீதிகளில் சுற்றித்திரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. உள்ளூர் மக்களும் அவதிப்படுகிறார்கள்.

இளம் தீட்சிதர்களின் அத்துமீறல்

நடராஜர் கோயிலில் நடராஜர் மூலவராகவும், உற்சவராகவும் காட்சி தருகிறார். இவரைப் படம் எடுக்கக்கூடாது எனக் கடும் கட்டுப்பாடுகளை தீட்சிதர்கள் வைத்திருக்கிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதுபற்றி தெரியாமல் செல்போனில் படம் எடுக்க முயற்சித்தாலே, செல்போனைப் பிடுங்கி உடைத்துப் போடும் சம்பவங்கள் தொடர்கின்றன. ஆனால், தீட்சிதர்கள் சிலரே நடராஜரை விதம்விதமாகப் படம்பிடித்து முகநூலில் வெளியிட்டு வருகிறார்கள். சில சமயங்களில் காரணமின்றியும் பக்தர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் தீட்சிதர்கள். சில மாதங்களுக்கு முன் பெண் ஒருவரை இளம் தீட்சிதர் அறைந்ததும், தரிசனத்தின்போது முதியவர் ஒருவரை தாக்கியதும் சில உதாரணங்கள்.

பணமே பிரதானம்

கடந்த காலங்களில் வயதில் மூத்த தீட்சிதர்கள், பக்தர்களை மதித்து சுவாமி தரிசனம் செய்துவைத்தனர். ஆனால், இளம் தலைமுறை தீட்சிதர்கள் கோயில் பொறுப்புகளுக்கு வந்த பின்பு, பல தீட்சிதர்கள் பணத்தை மட்டுமே பிரதானமாகப் பார்க்கின்றனர். அவரவர்களுக்கு கட்டளைதாரர்களை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பணம் கொடுப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், கொடுக்காத பக்தர்களுக்கு ஒருவிதமாகவும் நடந்து கொள்வதாகவும் பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

வழிபாட்டு விஷயங்களிலும் தடைகள்

மற்றதையெல்லாம்கூட பக்தர்கள் சகித்து ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஆனால், சிற்றம்பலத்தில் ஏறவும், சிதம்பர ரகசியத்தை தரிசிக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குடமுழுக்கு விழாவிலிருந்தே, சிற்றம்பலத்தில் ஏறி நடராஜரை தரிசிக்கும் பக்தர்களுக்கு சிதம்பர ரகசியம் காண்பிக்கப்படுவதில்லை. ‘உருவமில்லா அரூப தரிசனமான தங்கத்தாலான வில்வ மாலையுடன் கூடிய ஆகாயமே சிதம்பரம்’ என்பதை விளக்கும், அந்த சிதம்பர ரகசியம் திரை விலக்கி பக்தர்களுக்குக் காண்பிக்கப்படும் வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது.

அதுவே பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்துவந்த நிலையில், தற்போது சிற்றம்பலத்தின் மேல் ஏறி நடராஜரை தரிசிக்கும் பாக்கியமும் தீட்சிதர்களால் தடுக்கப்பட்டுள்ளது. கரோனா கால கட்டுப்பாடுகளை காரணம்காட்டி, கடந்த 2 ஆண்டுகளாக சிற்றம்பலத்தில் ஏற யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதனால், தங்கள் விருப்பப்படி பத்தியோடு நடராஜரை அருகிலிருந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காமலும், சிதம்பர ரகசிய தரிசனத்தைக் காண முடியாமலும் பக்தர்கள் வேதனையில் தவிக்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கோயில் நிர்வாகக்குழுவைச் சேர்ந்த பாஸ்கர தீட்சிதரிடம் பேசினோம். ‘’கோயிலைச் சிறந்த முறையில் நிர்வகிக்க நடை சாத்தும்போது கோயிலை முற்றிலுமாக அடைத்துவைப்பது, விளக்கேற்ற கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற சில தவிர்க்கமுடியாத முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும். சுவாமியைப் படம் எடுக்க பெரும்பாலான கோயில்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வழக்கம்தான் இங்கும் காலம்காலமாக பின்பற்றப்படுகிறது.

பாஸ்கர தீட்சிதர்

கோயிலுக்கு வரும் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டின் காரணமாகத்தான், சிற்றம்பலத்தில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சிலரை மட்டும் சிற்றம்பலத்தில் ஏற்றி தரிசனம் காண்பிக்கப்படுவதால் கீழிருக்கும் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கமுடியாமல் இடையூறுக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலநேரங்களில் பக்தர்கள் முறையிட்டிருக்கின்றனர். அதனால் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு கடிதம் மூலமும், நேரிலும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பர ரகசிய தரிசனம் நிறுத்தப்படவில்லை. மாறாக தனிப்பட்ட விதத்தில் பக்தர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை. ஆறுகால பூஜைகளின் போது மட்டும் திரைவிலக்கி அனைவருக்கும் பொதுவாக காண்பிக்கப்படுகிறது. மற்றபடி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருமே பாரபட்சம் இல்லாமல் சமமான முறையில்தான் பார்க்கப்படுகிறார்கள்” என்று விளக்கமாக பதிலளித்தார் அவர்.

சபாநாயகத்தின் முன் அனைவரும் சமம் என்பது பேச்சளவில் இல்லாமல் செயலளவிலும் இருக்கவேண்டும் என்பதுதான், பக்தர்களின் விருப்பம். நடராஜரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை அனைத்து தீட்சிதர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.


படங்கள்: எம்.சாம்ராஜ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE