அருள்தரும் சக்தி பீடங்கள் – 5

By கே.சுந்தரராமன்

அம்மனின் சக்தி பீடங்களில் திருவாரூரில் அமைந்துள்ள சக்தி பீடம், கமலை பீடம் என்றும் காமகலா பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்று அனைத்துமே இக்கோயிலில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு என்பதற்கு ஏற்ப, உலகிலேயே பெரிய தேரும், அழகிய தேரும் கொண்ட திருத்தலம் திருவாரூர்தான்.

பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாக விளங்கும் இத்தலம், சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 150-வது தேவாரத் தலம் ஆகும். சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் இத்தலம் போற்றி பாடப்பெற்றுள்ளது.

தல வரலாறு

திருமால் மகாலட்சுமியுடன், பிள்ளைப் பேறு வேண்டி சிவபெருமானை பூஜித்தார். சிவபெருமான், அவருக்கு சிறிய மரகத லிங்கத்தை அளித்தார். திருமால் அந்த லிங்கத்தை தன் நெஞ்சில் வைத்து தினம் பூஜித்து வந்தார். திருமாலின் மூச்சால், அவர் மார்பின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப சிவபெருமான் நடனம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் நடைபெறும் போர்களில், ஒருசமயம் இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியுடன் இந்திரன் அதில் இருந்து தப்பினார். மன்னருக்கு ஏதேனும் கைமாறு செய்ய நினைத்த இந்திரன், அவருக்கு வரம் அளிப்பதாகக் கூறினார். அப்போது இந்திரன், திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த (சிறிய மரகத லிங்கம்) விடங்க லிங்கத்தைக் கேட்டார்.

தேவர்கள் மட்டுமே வணங்கக் கூடிய விடங்க லிங்கத்தை ஒரு மானிடருக்கு அளிக்க விரும்பாத இந்திரன், தேவசிற்பி மயனை வரவழைத்து, அதேபோன்று 6 லிங்கங்களை செய்யப் பணித்தார். முசுகுந்த சக்ரவர்த்தி அவை அனைத்தும் போலி என்பதை உணர்ந்து, தனக்கு நிஜ லிங்கமே வேண்டும் என்று கேட்டார். வேறு வழியில்லாமல் நிஜ லிங்கத்தை மன்னரிடம் அளித்தார் இந்திரன்.

தற்போது திருவாரூரில், திருமால் நெஞ்சில் வைத்து பூஜித்த வீதி விடங்க லிங்கமே உள்ளது. சோமாஸ்கந்த மூர்த்தியாக உற்சவ மூர்த்தியாக, தியாகராஜப் பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். மற்ற லிங்கங்கள் நாகப்பட்டினம் (சுந்தர விடங்கர்), திருக்குவளை (அவனி விடங்கர்), திருவாய்மூர் (நீல விடங்கர்), வேதாரண்யம் (புவனி விடங்கர்), திருக்காரவாசல் (ஆதி விடங்கர்), திருநள்ளாறு (நகர விடங்கர்) ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன.

தாயின் கருணை

வீதி விடங்கராக போற்றப்படும் மூர்த்தி தியாகராஜர், வன்மீக நாதர், புற்றிடங்கொண்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், அல்லியங்கோதை என்றும் அழைக்கப்படுகிறார்.

நீலோத்பலாம்பாள்

பார்வதி தேவி இத்தலத்தில் இருவகை வடிவம் தாங்கி உலகத்து உயிர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் 2-வது பிரகாரத்தில் வீற்றிருக்கும் நீலோத்பலாம்பாள், அறத்துடன் கூடிய இல்லற வாழ்க்கைக்கு வழிகாட்டி அருளும் அன்னையாகத் திகழ்கிறார். இளைய மைந்தன் வேலவனின் கைபிடித்தபடி அருள்பாலிப்பது, தாயின் கருணையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வறுமை நீக்கி, பிணிகளைக் களைந்து, மக்கட் செல்வம் அருளும் அன்னையாக விளங்கும் நீலோத்பலாம்பாள், இல்லற பகைமையைத் தீர்ப்பவராகவும் உள்ளார். தீய எண்ணம் கொண்டவர்களுக்கு ஈகை, பெருந்தன்மை, விருந்தோம்பல், பெரியோரை மதித்தல் ஆகிய நற்குணங்களை அளித்து, அவர்களை இல்லற வாழ்க்கையின் இலக்கணங்களை உணரச் செய்து காக்கும் அன்னையாகத் திகழ்கிறார் நீலோத்பலாம்பாள்.

லலிதா சஹஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக கமலாம்பிகை விளங்குகிறார். தவக் கோலத்தில் அருள்பாலிக்கும் கமலாம்பாளை தரிசித்தால், சுத்த சித்தியைப் பெறலாம். பிறப்பை அடைந்த எந்த உயிரும் இறப்பை அடைந்தே தீரும். இறப்பை அடைந்த உயிர், பிறவாமையை அடையும் உரிமையைக் கொண்டதாக விளங்குகிறது. மனதை ஒருமுகப்படுத்தி அன்னையை தியானிக்கும் யோகநிலையால், மனதில் உள்ள மாசுகள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய கமலாம்பாளை வழிபடுவதே உயரிய வழியாகும்.

தியாகராயர்- கமலாம்பாள்

அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைகளைக் கொண்ட வாழ்க்கை இல்லறம் ஆகும். இதை அருள்பவர் நீலோத்பலாம்பாள். இல்லற வாழ்வினர் துறவறத்தை மேற்கொண்டு தவநிலையை லட்சிய நோக்காகக் கொண்டு வீடுபேற்றை அடைய விரும்புவர். இதை அருள்பவர் கமலாம்பாள்.

சக்தி என்பது ஒன்றே ஆனாலும், இத்தலத்தில் இரு வடிவம் கொண்டு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இல்லறம் விரும்புபவர்களுக்கும், துறவறம் விரும்புபவர்களுக்கும் அருள்புரியும் சக்தி பீடத் தலமாக திருவாரூர் விளங்குகிறது. முக்தி தரும் தலங்களுள் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. காண முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி அண்ணாமலை, கேட்க முக்தி அவிநாசி, பிறக்க முக்தி திருவாரூர் என்று கூறப்படும்.

கோயில் அமைப்பு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுயம்பு மூர்த்தியாக தியாகராஜர் அருள்பாலிக்கிறார். இக்கோயில் வீதிப் பிரகாரத்தையும் சேர்த்து, 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. ஐந்து வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஐந்து வேலி நிலப்பரப்பில் குளம், ஐந்து வேலி நிலப்பரப்பில் ஓடை உண்டு. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தங்கள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், 24-க்கும் மேற்பட்ட உட்கோயில்கள், 100-க்கும் மேற்பட்ட சந்நிதிகள் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு தியாகராஜருக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. தினமும் மரகத லிங்கத்துக்கு மட்டுமே அபிஷேகம் (காலை 8-30, 11 மணி, இரவு 7 மணி) நடைபெறும். அபிஷேகத்துக்குப் பின் மரகத லிங்கம், வெள்ளிப் பெட்டிக்குள் வைத்து பூட்டப்பட்டு, தியாகராஜருக்கு வலது புறத்தில் வைக்கப்படும்.

அல்லியங்கோதை சந்நிதியின் முகமண்டபத்தில் மராட்டிய ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன. அவற்றில் தியாகேசர் சோமாசி யாகம் புறப்படுதல், மாணிக்க நாச்சியாருக்கு அருளுதல், மராட்டிய மன்னர் மரகத லிங்கத்தை வணங்குதல் போன்ற சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தலச் சிறப்பு

பூங்கோயில், திரு மூலட்டானம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் விளக்கேற்றி வழிபட்டுள்ளார். இத்தலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் நள்ளிரவில் இருமுறை தூது சென்ற திருவீதி உள்ளது.

காஞ்சிபுரத்தில் இடக்கண் பெற்ற சுந்தரர், ‘மீளா அடிமை’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, தானிழந்த வலக்கண்ணை இத்தலத்தில் பெற்றார். சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டத் தொகையை (பெரிய புராணம்) பாடுவதற்கு அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை திருவாரூருக்கே உரியதாகும். தண்டியடிகள், செருத்துணை நாயனார், விறன்மிண்ட நாயனார், கழற்சிங்க நாயனார் முதலிய நாயன்மாகளும் இத்தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்துள்ளனர்.

நளனும் சனிபகவானும் வழிபட்ட தலம் இதுவாகும். நவக்கிரகங்கள் இத்தலத்தில் தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாகக் கூறப்படுகிறது. உற்சவ வீதிகளில் தியாகேசர் நடனம் (அஜபா நடனம்) புரிந்ததால் ஏற்படும் களைப்பு தீர, சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட மருந்து அளிக்கப்படுகிறது. உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் நடனம், அஜபா நடனம் என்று அழைக்கப்படுகிறது.

தியாகராஜர் ராஜாதி ராஜா என்பதால், எப்போதும் எட்டு கணங்கள் சூழ, வீதிகளில் எழுந்தருள்வார். அருளிப்பாடியார், உரிமையில் தொழுவார், உருத்திரப் பல்கணத்தார், விரிசடை மாவிரதிகள், அந்தணர்கள், சைவர்கள், பாசுபதர்கள் மற்றும் கபாலியர் தியாகராஜருடன் வீதியுலா வருவது வழக்கம்.

தீர்த்தக் குளங்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயில் 5 முக்கிய தீர்த்தக் குளங்களை உடையது. அதில் தலையாயது 5 வேலி பரப்புடைய கமலாலயம் ஆகும். இது தேவ தீர்த்தம் என்றும் போற்றப்படும். இக்குளத்தின் நடுவே ஒரு தீவும் நடுவனார் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் நாகநாதரும், யோகாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். ஓடத்தில் சென்று இக்கோயிலில் உள்ள மூர்த்திகளை தரிசிக்க வேண்டும். ஆயிரங்கால் மண்டபம் அருகே சங்கு தீர்த்தம் (அமுத தீர்த்தம்), ஊருக்கு அப்பால் கேக்கரை என்ற இடத்தில் உள்ள கயா தீர்த்தம், மேற்கு பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்துக்கு எதிரில் உள்ள வாணி தீர்த்தம் (சரஸ்வதி தீர்த்தம்) ஆகியன சிறப்புபெற்ற தீர்த்தங்கள் ஆகும். இவை தவிர ‘செங்கழுநீர் ஓடை’ என்ற நீரோடை, கோயிலில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது.

ஆழித் தேர்

திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே’ என்று போற்றிப் பாடியுள்ளார். ஆழித்தேரின் உயரம் 96 அடி ஆகும். 96 தத்துவங்களைக் கடந்தவர் வீதிவிடங்கர் என்பது இதன் உட்பொருள் ஆகும். தேரின் மேல்பகுதி கமலவடிவமாக அமைந்துள்ளது. யஜூர் வேத ஸ்ரீருத்ரத்தில் தேராகவும், தேர்த் தலைவராகவும் சிவபெருமான் உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் தேர்த்திருவிழாவைக் காண ஏராளமானோர் திரள்வது வழக்கம்.

திருவிழாக்கள்

மார்கழி திருவாதிரை பாத தரிசனம், பங்குனி பிரம்மோற்சவம் 10 நாள், ஆழித் தேரோட்டம், ஆடிப்பூர விழா 10 நாள், மாசி மகம், சித்திரை விழா, தெப்பத் திருவிழா, மாதாந்திர பிரதோஷம், தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE