மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில்  பிரம்மோற்சவம் விழா  தொடக்கம்

By பெ.ஜேம்ஸ் குமார்

மாங்காடு: மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் உப கோயிலான வெள்ளீஸ்வரர் கோயிலும் இதே பகுதியில் அமைந்துள்ளது. இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தொண்டை மண்டல நவகிரக தலங்களில் சுக்கிரன் பரிகார தலமாக இந்த கோயில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் இங்கு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலின் முகப்பு

இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை 8:00 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கேடயம் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவம் விழாவில் சுவாமி மாடவீதி உலா, பஞ்சமூர்த்தி புறப்பாடு, ஆனி திருமஞ்சனம், ஸ்ரீநடராஜர் அபிஷேகம் என தினமும் பல்வேறு வைபவங்கள் நடைபெறவுள்ளது. விழாவின் 7-ம் நாள் தேரோட்டம் வரும் 19-ம் தேதி விமரிசையாக நடைபெறும். 10-ம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE