கடவுள் சிலையை ஆஜர்படுத்தக் கோருவதா?: நீதிமன்றம் கண்டனம்

By காமதேனு

வழக்கு விசாரணை தொடர்பாக கடவுள் சிலையை ஆஜர்படுத்தக் கோரிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் சிவிரிபாளைத்தில் பிரபலமான பரமசிவன் கோயில் உள்ளது. இங்கு வீற்றிருந்த மூலவர் சிலையை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த சிலை மீட்கப்பட்டு, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து கோயில் நிர்வாகத்தினர் வாயிலாக பரமசிவன் கோயிலுகு மீண்டும் மூலவர் திரும்பினார். இந்த சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சிலையின் சரிபார்ப்புக்காக அதனை கோர்டில் ஆஜர்படுத்துமாறு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிவிரிபாளையம் பரமசிவன் கோயில் செயல் அலுவலர் அதற்கான பணிகளை மேற்கொண்டபோது, பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் தங்கள் வழிபாட்டுக்குரிய சாமி சிலையை பீடத்திலிருந்து அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ‘சிலையை கடவுளாக மக்கள் நம்பிவரும் நிலையில், நீதிமன்றம் கடவுளுக்கு நிகராக முடியாது’ என்று கருத்து தெரிவித்தவர், சிலையை ஆஜர்படுத்தக்க்கோரிய சிறப்பு நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ’சிலையை நீதிமன்றம் ஆராய வேண்டுமெனில், அதற்கென இருக்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும், சிலையை அதன் இருப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்த தேவையில்லை’ என்றும் தெரிவித்து, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE