சூரியனார்கோயில் ஆதீனம் பரிபூரணம் அடைந்தார்

By கரு.முத்து

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடத்தின் 27-வது சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தனது 102-வது வயதில், இன்று (ஜன.3) காலை 11 மணி அளவில் பரிபூரணம் அடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனமடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகளில் ஒருவராக இருந்தார். மெய்கண்டாரின் முக்தித்தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் தம்பிரானாகச் சிறப்பாக சேவைபுரிந்தார்.

அதையடுத்து, திருவாவடுதுறை 23-வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்யா சுவாமிகளால் மந்திர காஷாயம் அளிக்கப்பட்டு, சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே, ஆதீனகர்த்தராக இருந்த தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி, அந்த மடத்தின் 27-வது பட்டமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார்.

சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு, தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார். பழமையான கோயில்களை புதுப்பித்து திருப்பணி செய்ய உறுதுணையாக இருந்தார். அவரது 102-வது வயதில் வயது முதிர்வு காரணமாக இன்று சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE