நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடையில் மாலை!

By கி.பார்த்திபன்

ஆஞ்சயநேர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் கோக்கப்பட்ட மாலைகள் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் கோட்டை பகுதியில் புராதன சிறப்புப் பெற்ற, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக கரம் கூப்பி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம், மூலம் நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 7 - வது ஆண்டாக ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் கோக்கப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்தனர். ஒரே சமயத்தில் 500 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுகிறார்கள். இன்று காலை 10 மணி வரை வடைமாலை அலங்காரத்தில் காட்சியளிப்பார் ஆஞ்சநேயர். அதன் பிறகு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE