வன்மம் இல்லா மனம்!

By யாழன் ஆதி

ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற நாவல், ’குற்றமும் தண்டனையும்’. சமூகத்தில் இழைக்கப்படும் குற்றங்களையும் அவற்றுக்கான தண்டனைகளையும் குறித்து இருநிலைகளில் பேசும் ஒப்பற்ற நாவல் இது. இந்த நாவல் இயற்றப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தண்டனைகளைப் பற்றி பெளத்தம் பேசிவிட்டது.

அவரவர் செயல்களில்தாம் மனித வாழ்க்கையின் நன்மை தீமை அடங்கியிருக்கிறது. இது அறிவியல் என்றும் இயங்கியல் என்றும்கூட சொல்லலாம். இயக்கத்தின் விதிகளை ஐசக் நியூட்டன் வரையறுத்தது செயல்களினால்தான். அவ்வியக்க விதிகள் ஒருவேளை பொருள்களின் இயக்கத்தைப் பற்றி பேசினாலும் மானுடத்திற்கும் அவை பொருந்துவது மிக நேர்த்தியானது. குறிப்பாக நியூட்டனின் இயக்கம் குறித்த மூன்றாம் விதி “ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு” என்பதாகும். விசை என்னும் இடத்தில் வினை என்னும் சொல்லை வைத்தோமானால் அறிவியல் மானுடவியலாக மாறிவிடும்.

நற்கதியா, தீகதியா?

நல்வினை செய்தால் நற்கதி. தீவினை செய்தால் தீகதி. நற்கதி என்பதையும் தீகதி என்பதையும் சொர்க்கம் நரகம் என்று பொருள் கொள்ளாமல் இவ்வாழ்விலேயே நாம் அடைகின்ற இன்பம் துன்பம் என்று பொருள் கொள்வோம் என்றால் பௌத்தம் மிக எளிமையாக விளங்கிவிடும்.

தண்டனைக்கு நடுங்குவர் அனைவரும்

அஞ்சுவர் மரணத்திற்கு

தன்னைப் போல் பிறரை எண்ணி

துன்புறுத்தவும் வேண்டாம்

அதற்குக் காரணமாகவும் வேண்டாம் (தம்மபதம் 129)

எளிமையானதாக இந்தப் பாடல் இருந்தாலும் அதன் உள்ளர்த்தம் ஆழமானதாகவே இருக்கிறது. நம்மைப்போல் பிறரை எண்ணி அவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். அப்படித் துன்புறுத்தினால் தண்டனை என்னும் துன்பம் உண்டு. இல்லை என்றால் மரணம் உண்டு.

உண்மையான இன்பம் அடைய...

எனவே பிறரை சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த வேண்டாம். சரி, இது எல்லா இடங்களிலும் சொல்லப்படுவதுதானே? பௌத்தத்திற்கு இதில் என்ன தனி இடம் இருக்கிறது எனலாம். ஒப்பீட்டளவில் மனிதர்களின் எல்லா தீமைகளுக்கும் தண்டனை எங்கோ இருப்பதாக மற்றமைகள் பேசுகின்றன. ஆனால், வேறு எங்கேயும் இல்லை தண்டனை இங்கேயே இப்போதே இருக்கிறது என்பதுதான் பௌத்தத்தின் சிறப்பு. அப்படியானால் உவப்பான உயிர்வாழ்வு வேண்டுமா எனில் யாரையும் துன்புறுத்தவும் வேண்டாம் அதற்குக் காரணமாகவும் வேண்டாம் என்று தெளிவுபடுத்துகிறது பௌத்தம்.

பிறருக்குத் துன்பம் இழைப்பதில் ஒருவருக்கு இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறவர் அல்லது பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர் உண்மையான இன்பத்தை அடைய முடியாதவராகிவிடுவார். பிறருக்குத் துன்பம் செய்யாதவர் எப்போதும் இன்பமாக இருப்பார்.

சொற்களின் மூலமாகக் கூட பிறருக்கு நாம் துன்பம் இழைக்கலாகாது.

யாரிடமும் வேண்டாம்

கடின வார்த்தைகள்

அவை எதிர்க்கப்படும்

கெடுநோக்குடை பேச்சு

துக்கமூலம்

பழிவாங்கப்படுவீர் (தம்மபதம் 133)

இனிய வார்த்தைகள் இன்பம் பயப்பன. உரையாடல்கள் நல்ல சொற்களால் அமையும் போது அவை எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தீச்சொற்கள் மிகமோசமான துன்பத்தை உருவாக்கும்.

துயர்கள் 10

துன்பம் தரும் தீயச் சொற்களை இரைப்பதைக் காட்டிலும் மௌனம் மிக மேலானது, அமைதியின் அடர்த்தி அளவிட முடியாதது. ஒலியதிர்வில்லாத உடைந்த மணியைப் போல் அமைதியாய் இருக்கும் மனம் வன்மம் ஏதுமற்று நிப்பாணத்தை உணரும். இங்கே அமைதி என்பது மனதில் இருளை வைத்துக்கொண்டு வார்த்தைகளை மட்டும் உச்சரிக்காமல் இருப்பது அல்ல. ஒருவேளை அப்படியிருந்தால் அது இருளுக்குள் இருந்து மேலும் இருளுக்குள் செல்வது. மனதிலும் வன்மமற்று வார்த்தையிலும் வன்மம் இல்லா மனம்தான் மனிதமனம்.

தீச்செயல் செய்பவர், எளிய மனிதர்களைத் தங்கள் ஆயுதங்களால் தாக்குபவர்கள் பத்துத் துயர்களில் ஏதேனும் ஒன்றைக் கண்டிப்பாக அடைவர். அது என்ன துயர்கள் பத்து? இதோ பட்டியல்: கடுமையான வலி, பேரிடர், காயம், தீராநோய், நினைவிழத்தல், குற்றச்சாட்டு, உறவினரை இழத்தல், சொத்துகள் அழிதல், தீப்பற்றுதல், துன்பத்தில் உழலுதல்.

உடைகளற்று நிர்வாணமாய் இருத்தலோ அழுக்கடைந்திருத்தலோ, பட்டினிக் கிடத்தலோ எந்தப் பயனும் தரப்போவதில்லை. மனம் முழுக்க சலனங்கள் இருந்தால், அழகிய மனமுடையவராயும், துன்புறுத்தாமையும் உடையவரே உண்மைத்துறவியாகக் கருதப்படுவர்.

தீமைகளைச் செய்ய வெட்கப்படுபவர், விழிப்புடன் இருப்பவர் சாட்டையடிகளை வாங்காத நல்ல குதிரையைப் போன்றவர். அப்படிப்பட்டவர்களைக் காணுதல் மிக அரிது. நன்கு பழக்கப்பட்ட குதிரை தூண்டுகோல் பட்டதும் பாய்ந்து ஓடுவதைப்போல நன்மை செய்வோருக்குத் துன்பம் பறந்து ஓடிவிடும்.

வயலில் வேலை செய்பவர் நீரைச்செலுத்துகிறார். கொல்லர் அம்பினை கூர்மையாக்குகிறார். தச்சர் மரங்களை இழைத்து வளைக்கிறார். அறிவுள்ளவர் தங்க மனத்தினை எல்லாவிதச் செயல்களிலும் கட்டுப்படுத்துகிறார்.

கோலினைக்கொண்டு

புல்லுள்ள இடங்களில்

பசுக்களை மடக்கும் மேய்ப்பனைப்போல்

முதுமையும் மரணமும்

மனிதரைத் துரத்துகின்றன (தம்மபதம் 135)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
தீமையை பின்பற்றினால் என்னவாகும்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE