அருள்தரும் சக்தி பீடங்கள் – 3

By கே.சுந்தரராமன்

பஞ்சபூத தலங்களுள் (நீர் – அப்பு) ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயில், சக்தி பீட வரிசையில் வாராகி பீடத் தலமாக விளங்குகிறது. அகில அண்டங்களுக்கும் முதல்வியாகத் திகழக்கூடிய அன்னை ஆதிசக்தி, அகிலாண்டேஸ்வரி என்ற திருப்பெயரைத் தாங்கி இத்தலத்தில் அருளாட்சி புரிகிறார்.

ஈசன், சுயம்பு லிங்கமாக விளங்கும் இத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது. ஈசனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60-வது திருத்தலமாக விளங்குகிறது. அம்மனின் ஞானசக்தி பீடமாக விளங்கும் இத்தலத்தில், சரஸ்வதி தேவி நின்ற நிலையில் வீணையில்லாமல் அருள்பாலிக்கிறார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கத்துக்கு அருகே, காவிரி நதிக்கரையில் திருவானைக்காவல் அமைந்துள்ளது. ‘ஆனைக்கா’ என்பது யானைகள் நிறைந்த சோலையைக் குறிக்கும். ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் ‘திருவானைக்கா’ என்று இத்தலம் பெயர் பெற்றது. சோலைகளும் காடுகளுமே இறைவன் உறையும் இடங்களாக மாறியுள்ளன. அந்த வகையில் இத்தலம் ‘கஜாரண்ய க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

ஜம்பு என்ற முனிவர் சிவபெருமானை நோக்கி இவ்விடத்தில் தவம் இருந்தார். முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு நாவல் பழத்தை (ஜம்பு பழம்) அளித்து அருள்பாலித்தார். நாவல் பழத்தை விதையுடன் உண்டதால், முனிவரின் வயிற்றில் அது மரமாக வளர்ந்தது. இதனால் முனிவர் இவ்விடத்தில் முக்தி அடைந்தார்.

அதே சமயம் சிவபெருமானின் ஆணைக்கு இணங்க, பார்வதிதேவி பூவுலகில் மானிடப் பெண்ணாகத் தோன்றினார். இந்த நாவல் மரத்தடியில் காவிரி நீரில் லிங்கம் பிடித்து சிவபெருமானை வழிபட்டதால், அம்பிகைக்கு அருள்பாலித்தார் ஈசன். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ‘நீர்’ தலமாக விளங்குகிறது. மேலும், ஜம்பு என்ற முனிவருக்கு முக்தி அளித்ததால், சிவபெருமான் ‘ஜம்புகேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அகிலாண்டேஸ்வரி அம்பாள் இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை மதிய வேளையில் (உச்சிக்காலம்) பூஜிப்பதால், இத்தலத்தில் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து சுவாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேகம் செய்துவிட்டு, கோமாதா பூஜையும் செய்து அம்பாள் சந்நிதிக்கு திரும்புவர். இந்த பூஜையை அம்பாளே நேரில் செய்வதாக ஐதீகம்.

அம்பாள் சிவபெருமானை இத்தலத்தில் ஆடி வெள்ளிக் கிழமையில் பூஜித்ததால், ஆடி வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். அம்பாள் காலையில் திருமகளாகவும், உச்சிக் காலத்தில் பார்வதிதேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் குருவாக இருந்து, மாணவியான பார்வதிதேவிக்கு உபதேசம் செய்கிறார்.

பஞ்சப் பிரகார விழா

அகிலாண்டேஸ்வரி அன்னைக்கும் ஜம்புகேஸ்வரருக்கும் நடைபெறும் முக்கிய விழாவாக, பஞ்சப் பிரகார விழா நடைபெறுகிறது.

ஒருசமயம் பிரம்மதேவர், தான் படைத்த பெண் மீது மையல் கொண்டதால், அவருக்கு ‘ஸ்திரீ தோஷம்’ உண்டாகிறது. இதன் காரணமாக, படைப்புத் தொழில் செய்யும் வல்லமையை இழக்கிறார் பிரம்மதேவர். தனது தோஷத்தை களைந்து அருள்பாலிக்குமாறு சிவபெருமானை வேண்டுகிறார் பிரம்மதேவர். அவருக்கு அருள்பாலிக்க சிவபெருமான் கிளம்பும் சமயத்தில், பார்வதி தேவியும் அவருடன் கிளம்பினார். பிரம்மதேவருக்கு தன் தவறை உணர்த்துவதற்காக, சிவபெருமான் பார்வதியாகவும், பார்வதிதேவி சிவபெருமானாகவும் மாறுவேடம் தரித்துச் சென்று பிரம்மதேவருக்கு அருள்பாலிக்கின்றனர். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தவே இத்திருவிளையாடல் நடைபெற்றது. மாறுபட்ட சிவசக்தியின் தரிசனம் கிடைத்ததால், தோஷம் நீங்கி, பிரம்மதேவர் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதுவே பஞ்சப் பிரகார விழாவின் வரலாறு ஆகும்.

தாயை சாந்தப்படுத்தும் பிள்ளைகள்

தொடக்கத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்ததால், அவரை சாந்தப்படுத்த விநாயகரும் முருகப்பெருமானும் முயன்றனர். இந்த வரலாறை நினைவுகூரும் விதமாக ஆதிசங்கரர், இத்தலத்தில், தடாங்கங்களை (காதில் அணியும் அணிகலன்கள்) ஸ்ரீசக்கரம் போல் உருவாக்கி, அம்பாளுக்கு அணிவித்தார். மேலும் அம்பாள் சந்நிதிக்கு எதிரில் விநாயகரையும் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்தார்.

மாடக் கோயில்கள்

கைலாயத்தில் சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் இருவருக்கும் சிவபெருமானுக்கு யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், ஒருவருக்கொருவர் சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்க வேண்டும் என்று சபித்துக் கொண்டனர். இதன் காரணமாக, மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர்.

சிலந்தியாகவும் யானையாகவும் உருமாறிய சிவகணங்கள், இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டனர். யானைகள் சூழ்ந்த சோலையில், நாவல் மரத்தடியில் தோன்றிய லிங்கத்துக்கு தினமும், தன்னுடைய துதிக்கையால் நீரைக் கொண்டுவந்து, யானை அபிஷேகம் செய்தது. சிலந்தி தன் வாய் நீரால் மேற்கூரை அமைத்து சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாமல் காத்தது. யானை அபிஷேகம் செய்வதால், சிலந்தியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போயின. அப்போது இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டது. தன் உழைப்பு அனைத்தையும் யானை வீணடிப்பதாக, யானை மீது சிலந்தி கோபம் கொண்டது. உடனே சிலந்தி, யானையின் காதில் புகுந்தது. யானைக்கு முக்தி கிடைத்து, கயிலாயம் சென்றது. யானையை அழித்ததால், சிலந்திக்கு மறுபிறவி கிடைத்து, சோழ மன்னர் சுபதேவன் - கமலாவதியின் மகன் கோச்செங்கட்சோழனாகப் பிறந்தது.

முற்பிறவிப் பயனாக, யானைகள் புக முடியாதபடி, கோச்செங்கட்சோழ மன்னர், 70 மாடக் கோயில்களைக் கட்டினார். யானைகள் புகமுடியாதபடி இத்தலத்திலும் திருப்பணிகள் மேற்கொண்டார்.

கோயில் அமைப்பு

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்கள், நான்கு திசைகளில் கோபுரங்கள், 5 பிரகாரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. 4-ம் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அகிலம் ஆண்ட நாயகி அருள்பாலிக்கிறார். மூலவர் ஜம்புகேஸ்வரர்5-ம் உள்பிரகாரத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேரர் - சோழர்கள் மட்டுமின்றி போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் இத்தலத்தில் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கோயில் சிறப்புகள்

ஜம்புகேஸ்வரர் மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியேதான் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டும் என்பதை இந்த ஜன்னல் உணர்த்துகிறது.

ஐந்தாம் பிரகாரம் கட்டப்பட்டபோது, மன்னர் போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானே விபூதிச் சித்தராக வந்திருந்து பிரகாரக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். சிவபெருமான் கட்டிய பிரகாரம், ‘விபூதிப் பிரகாரம்’ என்றும், சிவபெருமான் கட்டிய மதில், ‘திருநீற்றான் திருமதில்’ என்றும் அழைக்கப்படுகின்றன. வீபூதிச் சித்தருக்கு பிரம்ம தீர்த்தக் கரையில் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கு திருநீறே கூலியாகக் கொடுக்கப்பட்டது. அவரவர் உழைப்புக்கு ஏற்றபடி திருநீறு தங்கமாக மாறியது.

ஜம்பு தீர்த்தக் கரையில் கோப வடிவத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரியார் வணங்கியுள்ளார். காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிட்டு, ஓர் அரக்கனாக தன் காலடியில் போட்டு அடக்கிய கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். சனிபகவான் இத்தலத்தில் குதிரை முகத்துடன் தன் தாயுடன் குழந்தை வடிவத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை வடிவத்தில் பாலசனி, ஜேஷ்டாதேவி, நீலாதேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

அம்பாளுக்குத் தாம்பூலம்

கவி இயற்றுவதில் வல்லமை பெறுவதற்காக, வேதியர் ஒருவர் அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள்வதற்காக, அம்பிகை தாம்பூலம் போட்டுக்கொண்டு சென்றார். “கோயிலில் உமிழ்வது முறையல்ல. உம் வாயைத் திறந்தால் அதில் உமிழ்ந்துவிடுவேன்” என்று அம்பிகை அவரிடம் கூறினார். கோபம் கொண்ட வேதியர், அதற்கு உடன்படவில்லை. மறுநாள் வரதர் என்ற பக்தரிடம், இதே வார்த்தையை அம்பிகை கூறியதும், அவர் அதற்கு உடன்பட்டார். “கோயில் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன்” என்று கூறிய வரதர், தன் வாயில் உமிழும்படி அம்பிகையை வேண்டினார். அம்பிகையும் அவ்வாறே செய்ய, வரதர் சிறந்த கவியானார். அவரே, பிற்காலத்தில் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார். இதனால், சிறந்த கல்வியறிவு, ஞானம் பெற, மாணவர்கள் அம்பிகைக்குத் தாம்பூலம் படைத்து வழிபடுவது வழக்கம்.

அட்டமா சித்திகளை அளிப்பவர்

திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரி நாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் போன்றோர் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

அட்டசித்தி நல் அன்பருக்கு அருளே

விருது கட்டிய பொன் அன்னமே

அண்டகோடி புகழ்கானவ வாழும்

அகிலாண்ட நாயகி எம் அம்மையே. – தாயுமானவர்

அட்டமா சித்திகளையும் வழங்கக் கூடியவர் அகிலாண்டேஸ்வரி என்றும், எண்ணற்ற அண்டங்கள் அகிலாண்ட நாயகியை வணங்குகின்றன என்றும் தன் பாடலில் அம்மையைப் போற்றுகிறார் தாயுமானவர்.

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

என்று திருநாவுக்கரசர் ஜம்புகேஸ்வரரைப் போற்றுகிறார்.

திருவிழாக்கள்

ஐப்பசியில் ஜம்புகேஸ்வரரின் சந்நிதியில் நீர் ஊறிக் கொண்டிருப்பதால், வைகாசி மாதத்திலேயே அன்னாபிஷேகம் செய்யப்படும். ஐப்பசி பவுர்ணமி தினத்தில் லிங்கத்துக்கு விபூதிக் காப்பு இடப்படும். பங்குனி பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படும். ஆடிப்பூரம், ஆடிவெள்ளி தினங்களில் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். ஜம்பு தீர்த்தக் கரையில் உள்ள குபேர லிங்கத்துக்கு ஆனி பவுர்ணமி தினத்தில் முக்கனி அபிஷேகம் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE