புகழ்பெற்ற மன்னார்குடி வெள்ளை விநாயகர் கோயிலில் விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜாம்பாளையத் தெருவில் உள்ள வெள்ளை விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ்பாலம் அருகே ராஜபாளையம் தெருவில் வெள்ளை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், விமானம் என ஆலய திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கடந்த திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்கள் யாக பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று காலை 4:30 மணியளவில் மூன்றாம் கால பூஜையும், அதனைத் தொடர்ந்து பூரணாஹுதி நடைபெற்று,

மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து சென்று, கோபுர, விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப் பட்டது. கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE