மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பரமபத வாசல் திறக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.
விலங்குநிலையில் இருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம் என்று யோசிக்கிறோம். மனித நிலையில் இருந்து எப்படி கடவுள் நிலையை அடைவது என்று ஆராய்ந்தால், சோதனைகளும், அனுபவங்களும் நம்மை அதற்கு தயார்படுத்துகின்றன.
பரமபத விளையாட்டில் தாயத்தை உருட்டுகிறோம். முதலில் சிறிய பாம்பு கடிக்கும். நாம் உடனே கீழே இறங்குவோம். அடுத்தமுறை மேலே ஏறுகிறோம். சிறிது நேரம் கழித்து பெரிய பாம்பு நம்மை கீழே தள்ளுகிறது. இப்படி ஏற்றமும் இறக்கமும் இருந்துகொண்டே இருக்கிறது.
இத்தகைய ஏற்ற இறக்கங்களை நமக்கு நினைவுபடுத்தும் நாள் ஏகாதசி. பரமபதத்தை அடைய விருப்பு, வெறுப்பு கடந்த நிலையை அடைய வேண்டும். விருப்பு வெறுப்பைக் கடந்து ஒளியின் சரீரமாக நாம் செல்வதே ஏகாதசி என்பதாகும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் / பரமபத வாசல் திறக்கப்படுகிறது. நாமும் கோயிலுக்குச் செல்கிறோம். இறைவனை வணங்குகிறோம். வந்துவிடுகிறோம்.
இரவெல்லாம் கண்விழித்துப் பரமபத விளையாட்டு விளையாடுகிறோம். ஆனால் பரமபதம் என்றால் என்ன என்று சிலருக்குத் தெரிவதில்லை.
நாம் நம் வாழ்க்கையில் நல்லதைச் செய்து கொண்டிருக்கும்போது, நம்மை அறியாமல் சில தீமைகள் செய்துவிடுகிறோம். அந்தத் தீமைகள் நமக்கு வேதனை தருகின்றன. அவை நம் உடலுக்குள் நோய்களாக மாறுகின்றன. நோய்களால் இந்த சரீரத்தை இழக்கிறோம். இழிநிலையை அடைகிறோம்.
அந்த இழிநிலையில் இருந்து மீண்டு, மீண்டும் மனிதப்பிறவி எடுக்க பல சரீரங்களைப் பெறுகிறோம். அவரவர் நன்மை தீமைக்கு ஏற்ப இழப்பும் பிறப்பும் நிகழ்கிறது. இப்படி மெய்வழித் தன்மையை அடையும் பரமபதத்தை அடையாத நிலையில் இருக்கிறோம். அந்த மெய்வழித் தன்மையை அடைய, நம் முன்னோர், ஞானிகள் பரமபதத்தை நமக்குப் புரிய வைத்தார்கள்.
இதற்குப் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. சிறிய உயிரினங்களில் இருந்து சிறிது சிறிதாக வளர்ச்சிபெற்று மனித நிலைக்கு வருகிறோம். அந்த மனித நிலையில் மேலும் பக்குவநிலையை உணர்ந்து, இந்த உயிரை ஒளியாக மாற்றி பரமபத நாதரை அடைகிறோம். இந்த நிலையை அடையக்கூடிய நாளாக ஏகாதசியை அறிய வைத்தார்கள்.
கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ எல்லாம் அவன் கொடுத்ததுதான். அதை அனுபவித்தே ஆகவேண்டும். அவனிடம் சரணடைந்துவிட்டால் எல்லாம் நன்மைக்கே என்பதை உணரலாம்.
ஓம் நமோ நாராயணாய…